Showing posts with label ekadashi Stories. Show all posts
Showing posts with label ekadashi Stories. Show all posts

Sunday, September 27, 2020

பத்மினி ஏகாதசி/padmini ekadashi



*பத்மினி ஏகாதசி*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

*அதிக மாச சுக்ல பக்ஷ  ஏகாதசி*

*27 September 2020 Sunday*

🌹🌹🌹🌹🌹🌹🌹


ஒருமுறை, மகாராஜா யுதிஸ்டிரர் கூறினார். ஓ, கிருஷ்ண ஓ, ஜனார்தனா, அதிக மாசத்தில் சுக்ல பக்ஷ  ஏகாதசியின் பெயர் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை பற்றி எனக்கு கூறுங்கள். மேலும் இதை கடைபிடிப்பவர் என்ன பலனை அடைவார் என்பதையும் எனக்கு கூறுங்கள். 


*பத்மினி ஏகாதசி விரத முறை*

பகவான் கிருஷ்ணன் பதில் அளித்தார். ஓ! மன்னா! இந்த *புனிதமான ஏகாதசியின் பெயர் பத்மினி*. இந்த ஏகாதசியை சிரத்தையுடன் கடைப்பிடிப்பவர் பகவான் பத்மநாபரின் பரமபாதத்தை அடைவார். இந்த ஏகாதசி ஒருவரின் எல்லா பாவ விளைவுகளையும் அழித்துவிடும். இந்த ஏகாதசியின் முழு பலன்களை பற்றி எடுத்துரைக்க பிரம்மாவாலும் இயலாது. இருப்பினும் முன்பு ஒரு காலத்தில் செல்வம் மற்றும் முக்தியை அளிக்கக்கூடிய இந்த பத்மினி ஏகாதசியின் புகழை பகவான் பிரம்மா நாரதரிடம் விளக்கி கூறினார்.

பகவான் கிருஷ்ணர் தொடர்ந்தார். ஒருவர் இந்த ஏகாதசியை கடைபிடிக்க, ஏகாதசியின் முன்தினமான தசமி நாளன்றே துவங்க வேண்டும். ஒருவர் மற்றவர்கள் சமைத்த உணவை உட்கொள்ள கூடாது. வெண்கல தட்டில் உண்ணக்கூடாது மற்றும் உளுந்து, கீரை, தேன் ஆகியவற்றை தசமி அன்று உட்கொள்ளக்கூடாது. ஒருவர் ஏகாதசியன்று வெறும் தரையில் படுக்க வேண்டும். மற்றும் பிரம்மச்சரியத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். ஏகாதசியன்று ஒருவர் விடியற் காலையில் எழுந்து பல்தேய்த்து குளிக்க வேண்டும். பிறகு சந்தனம், ஊதுவத்தி, விளக்கு, கற்பூரம், நீர் ஆகியவற்றை கொண்டு முழுமுதற் கடவுளை பூஜிக்க வேண்டும்.

*பலன்கள்*

புனித நாமங்களை ஜபிக்க வேண்டும். ஒருவர் தேவையற்ற பேச்சுக்களில் ஈடுபடக்கூடாது. ஏகாதசி அன்று இரவு விழுத்திருந்து புனித நாமங்கள் மற்றும் பகவானின் தன்மைகளை புகழ வேண்டும். ஏகாதசி இரவில் முதல் மூன்று மணி நேரம் விழுத்திருப்பவர் அக்னிஸ்தோமா யாகத்தை செய்த பலனை அடைவார். முதல் ஆறு மணி நேரம் விழித்திருப்பவர் வாஜ்பேய யாகத்தின் பலனை அடைவார். முதல் ஒன்பது மணி நேரம் விழுத்திருப்பவர் அஸ்வமேத யாகத்தின் பலனை அடைவார். முழு இரவு விழித்திருப்பவர் ராஜசூய யாகத்தின் பலனை அடைவார். துவாதசியன்று வைஷ்ணவர்கள் மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்த பிறகு விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இந்த முறையில் இந்த ஏகாதசியை கடைப்பிடிப்பவர் நிச்சயமாக முக்தி அடைவார்.

*பத்மினி ஏகாதசி கதை*

பகவான் கிருஷ்ணர் தொடர்ந்தார். ஓ, பாவமற்றவனே, உனது வேண்டுக்கோளுக்கு, இணங்கி நான் இந்த ஏகாதசியை கடைப்பிடிக்கும் முறையினை விளக்கினேன். இப்பொழுது புலஸ்ய முனிவர், நாரத முனிவருக்கு கூறிய சுவராஸ்யமான கதையை  கூறுகிறேன் கவனமாக கேள்.


*நாரதரின் வியப்பும் புலஸ்ய முனிவரின் விளக்கமும்*

 ஒரு முறை கார்த்தவீர்யார்ஜூனா இராவணனை தோற்கடித்து சிறையில் அடைத்தார். இராவணனை இக்கோலத்தில் கண்ட புலஸ்ய முனிவர் கார்த்வீர் யார்ஜீனாவிடம் சென்று இராவணனை விடுதலை செய்யுமாறு வேண்டினார். பெரு முனிவரின் வேண்டுதலுக்கு இணங்கி அரசன் இராவணனை விடுதலை செய்தார். இந்த வியக்கத்தக்க நிகழ்ச்சியை கேட்ட நாரத முனிவர் புலஸ்ய முனிவரிடம் கேட்டார். ஓ முனிவரில் சிறந்தவரே, இந்திரன் உள்பட எல்லா தேவர்களையும் வென்ற இராவணனை கார்த்தவீர்யார்ஜீனா வால் எவ்வாறு வெல்ல முடிந்தது. இதனை எனக்கு விளக்குங்கள்.

புலஸ்ய முனிவர் பதில் அளித்தார். ஓ, நாரதா, திரேதா யுகத்தில் ஹைஹயா வம்சத்தில் பிறந்த கிருதவீர்யா என்ற மன்னர் இருந்தார். இவருடைய தலைநகர் மாஹிஸ்மதீபுரி. இவருக்கு ஆயிரம் மனைவிகள் இருந்தனர். ஆயினும் நாட்டை ஆள தகுந்த ஒரு மகன் இருக்கவில்லை. இவர் தன் முன்னோர்களையும் சாதுக்களையும், பூஜித்து வந்தார். மற்றும் முனிவர்களின் வழிமுறைப்படி பல விரதங்களை மேற்கொண்டார். இருப்பினும் அவருக்கு ஓரு ஆண்வாரிசு உண்டாகவில்லை. ஆகையால் மன்னர் தவம் செய்ய முடிவு செய்தார். தன் ராஜ்யத்தின் பொறுப்புகளை எல்லாம் பிரதம மந்திரியிடம் ஒப்படைத்து விட்டு தவம் செய்வதற்காக மரப்பட்டையால் செய்த ஆடையை அணிந்து காட்டிற்கு சென்றார். 

*தவம்*

தனது மனைவிகளில் ஒருவரான பத்மினி, மன்னர் அரண்மனையை விட்டு வெளியேறுவதை கண்டார். பத்மினி இக்ஸ்வாகு வம்சத்தில் தோன்றிய ஹரிச்சந்திரனின் மகள். பத்மினி தன் கணவர் தவம் செய்வதற்காக காட்டிற்கு செல்வதை அறிந்து உடனே தானும் தன் ஆபரணங்களை துறந்து கணவருடன் மந்தாரா மலைக்கு சென்றனர்.

மந்தார மலை உச்சியில் மன்னர் கிருதவீர்யா மற்றும் தன் மனைவி பத்மினி இருவரும் பத்தாயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்தனர். தன் கணவரின் உடல் நாளுக்கு நாள் மெலிந்து போவதை கண்ட பத்மினி இதற்கு ஒரு தீர்வு காண நினைத்தாள்.

*அனுசுயா தேவியின் ஆலோசனை*

 பத்மினி அத்ரி முனிவரின் மனைவியான அனுசுயாவிடம் கேட்டார். ஓ, கற்புக்கரசியே, என் கணவர் தவம் புரிவதில் பத்தாயிரம் ஆண்டுகள் கழித்தார். ஆயினும், அவரின் துன்பங்களை நீக்க கேசவனை திருப்திப்படுத்த முடியவில்லை.

 ஓ, அதிர்ஷ்டசாலியே, எந்த ஒருவிரதத்தை மேற்கொண்டால் பகவான் திருப்தியடைந்து சிறந்த மன்னனாகக் கூடிய ஒரு மகனை எனக்கு அருள்வார் என்பதை கூறுங்கள். இவ்வாறு வேண்டிய பத்மினியிடம் அனுசுயா கூறினார். முப்பத்தி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அதிக மாதம் தோன்றும். இந்த *அதிக மாதத்தில் வரக்கூடிய ஏகாதசிகள் பத்மினி மற்றும் பரமா* என்பன. இந்த ஏகாதசியை கடைபிடிப்பதால், பகவான் மகிழ்ச்சி அடைந்து உன்னுடைய கோரிக்கையை நிறைவேற்றுவார்.


*கருடரூடனின் காட்சியும் ஆசியும்*


பகவான் கிருஷ்ணர் மேலும் தொடர்ந்தார். அனுசுயாவின் வழிமுறைப்படி அரசி பத்மினி இந்த ஏகாதசியைக் கடைப்பிடித்தாள். கேசவன் கருட வாகனத்தில் பத்மினியின் முன் தோன்றி தனக்கு வேண்டிய வரத்தை கேட்கச் சொன்னார். அரசி முதலில் பகவானை வணங்கி தனது பிரார்த்தனைகளை சமர்ப்பித்தார். பிறகு தனக்கு ஒரு மகனை அருளுமாறு வேண்டினார். பகவான் கூறினார், ஓ, சாந்தமும், நற்குணமும் நிறைந்த பெண்ணே, உன்னுடைய விரதத்தால் நான் திருப்தி அடைந்தேன். அதிக மாசத்தை விட எனக்கு பிரியமான மாதம் வேறு எதுவும் இல்லை. இந்த மாதத்தின் ஏகாதசிகள் எனக்கு பிரியமானவை. நீ இந்த ஏகாதசியை சரியாக கடைபிடித்திருக்கின்றாய். எனவே நிச்சயமாக உங்களுடைய விருப்பத்தை பூர்த்தி செய்கிறேன்.

பத்மினியிடம் இவ்வாறு கூறிய பகவான் பிறகு, அரசன் முன் சென்று ஓ, சிறந்த மன்னா, உன் மனைவியின் ஏகாதசியின் விரதத்தால் நான் மகிழ்ச்சி அடைந்தேன். உனக்கு வேண்டிய வரத்தை கேள், என்றார். 
விஷ்ணு பகவானின் வார்த்தைகளை கேட்ட அரசன் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். மிக வலிமையுடன் எப்பொழுதும் வெற்றியை அடையும்படியான ஒரு மகனை தனக்கு அருளுமாறு வேண்டினார். ஓ, மதுசூதனா, பிரபஞ்சத்தின் பகவானே, தேவர்கள், மனிதர்கள், பாம்புகள், மற்றும் அரக்கர்கள் போன்றவர்களால் வெல்ல முடியாத ஒரு மகனை எனக்கு அருளுங்கள் என்று வேண்டினான். பகவான் மன்னர் வேண்டிய வரத்தை அருளி மறைந்தார்.


  *கார்த்தவீரயார்ஜுன் ஜனனம்*

 முழுமையாக திருப்தியடைந்த மன்னனும் அவர் மனைவியும் தங்கள் பழைய உடல்நிலையை அடைந்து தங்கள் நாட்டிற்கு திரும்பினர். அரசி பத்மினி, மிக்க வல்லமைபடைத்த ஒரு மகனை பெற்றெடுத்தாள்.

அவன் கார்த்தவீரயார்ஜுன என புகழ் பெற்றான். மூவுலங்களிலும் அவனை விட வலிமைமிக்க வீரர் இருக்கவில்லை. பத்து தலைகள் கொண்ட இராவணனும் கார்த்தவீயார்ஜுனாவால் தோற்கடிப்பட்டான்.

 இந்த அற்புதமான கதையை கூறிவிட்டு புலஸ்திய முனிவர் விலகி சென்றார்.


 பகவான் கிருஷ்ணன் கூறினார், ஓ! பாவமற்ற மன்னா, அதிக மாசத்தில் வரும் ஏகாதசியை பற்றி உன்னிடம் விளக்கினேன். ஓ, மன்னர்களில் சிறந்தவனே இந்த ஏகாதசியை கடைபிடிப்பவர் யாராயினும், பகவான் ஹரியின் பரமபாதத்தை அடைவார்.

 கிருஷ்ணரின் வாக்கிற்கு இணங்கி, மகாராஜா யுதிஸ்டிரர் தன் குடும்பத்துடன் இந்த ஏகாதசியை கடைப்பிடித்தார். ஒருவர் தன் வாழ்நாளில் இந்த ஏகாதசியை நம்பிக்கையுடன் கடைப்பிடித்தால் அவர் புகழ் அடைவார். யாரேனும் இந்த ஏகாதசியின் பெருமைகளை பற்றி படித்தாலோ அல்லது கேட்டாலோ அவருக்கு மிகுந்த அளவில் தெய்வ பக்தி கிடைக்கும்.


🌷🌷🌷🌷🌷

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

🌷🌷🌷🌷🌷🌷🌷


திருமதி. சந்திரிகா அர்விந்த்

Sunday, September 13, 2020

Indira Ekadashi/ இந்திர ஏகாதசி

 நம் முன்னோரை கடையேற்றும் இந்திரா ஏகாதசி.....!!!

 13.9.2020

இந்திரா ஏகாதசி மஹாலய பக்ஷத்தில் அமைவதால் இதற்கு தனி மகத்துவம் உண்டு.இந்த ஏகாதசி விரதம் நம் பாபங்களை போக்குவதோடு நம் முன்னோர்களின் பாபங்களையும் போக்குவதாக அமைகிறது.

இந்திரா ஏகாதசி விரத கதை.....!

முன்பொரு காலத்தில் மகிஷ்மதிபுரி ராஜ்யத்தை இந்திரசேனர் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவர் சிறந்த முறையில் ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தார்.அவரது ஆட்சியில் மக்கள் குறை இல்லாமல் வாழ்ந்து வந்தார்கள். மன்னர் சிறந்த விஷ்ணு பக்தரும் கூட. விஷ்ணுவை போற்றி வணங்குவதில் சிரத்தை உள்ளவர்.

ஒரு நாள் மன்னர் தர்பாரில் இருந்த போது அங்கு  நாரத முனிவர் வந்தார். அவரை சகல மரியாதையுடன் வணங்கிய மன்னர் அவர் வந்த காரணம் வினவினார். நாரதர் தான் வந்த காரணத்தை விவரிக்க ஆரம்பித்தார்.

நாரதர் பிரம்மலோகத்தில் இருந்து யமலோகத்திற்கு இறங்கிய போது யமராஜரால் வரவேற்கப்பட்டார். அவரின் சபையில் சகல மரியாதைகளுடன் அமர்ந்திருந்த போது சபையினருக்கு நடுவே இந்திரசேனரின் தந்தையும் இருக்கக் கண்டார். ஆச்சர்யப்பட்ட நாரதரிடம் இந்திரசேனரின் தந்தை தான் ஒரு ஏகாதசி விரதத்தை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே முறித்ததன் விளைவாக தான் நரகத்தில் அல்லல்படுவதாக உரைத்தார்.

இந்திரசேனரின் தந்தை இந்திரசேனரை இந்திரா ஏகாதசி விரதம் இருக்குமாறு நாரதர் மூலம் கேட்டுக் கொண்டார். இதனால் தான் நரகத்திலிருந்து விடுபட்டு வைகுண்டம் சேர முடியுமென உரைத்தார். அவர் கூறியதை இந்திரசேன மன்னரிடம் கூறவே நாரதர் மன்னரை நாடி வந்துள்ளார்.

இதனை அறிந்தவுடன் நாரதரிடம் மன்னர் இந்திரா ஏகாதசி பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். அதன்படி தனது சுற்றத்தோடும், ஏனையரோடும் விரதமிருந்து தனது தந்தைக்கு நல்வழி காட்டினார். தனது தந்தை கருட வாகனம் ஏறி வைகுண்டம் செல்வதை கண்டார். அவர் த்வாதசி அன்று விரதம் முடிக்கும் போது அவரது பக்தியை மெச்சி  அவர் மீது ஆகாயத்திலிருந்து பூமாரி பெய்தது. மன்னரும் பிற்காலத்தில் வைகுண்டம் சேர்ந்தார்.

இந்திரா ஏகாதசியில் முறைப்படி  விரதமிருந்தால் நமது  பாபம் மட்டுமன்றி நம் முன்னோர்களின் பாபங்களும் நீங்கும்.

நரகத்தில் வாடும் முன்னோர்கள் வைகுண்டம் நோக்கி செல்வார்கள்.

இந்த ஏகாதசி விரத கதை கேட்போருக்கு (குதிரை) அஸ்வம் தானம் செய்த பலன் கிடைக்கும்.

இதனை படிப்போருக்கும் கேட்போருக்கும் வாழ்வில் வளமும்,முக்தியும் கிடைக்கும்.

இத்தனை நன்மை பயக்கும் இந்திரா  ஏகாதசி விரதத்தை கடைபிடித்து நம் வாழ்வை வளப்படுத்தி ,நம் முன்னோர்கள் உய்யவும் வழி தேடுவோம்

🙏🙏🙏🙏🙏🙏

Friday, August 28, 2020

பரிவர்தினி ஏகாதசி/ parivarthini ekadashi

 *பரிவர்தினி ஏகாதசி*


29/08/2020

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷


பாத்ரபத மாச சுக்ல பக்ஷ திதியில் வரும் ஏகாதசி பரிவர்த்தனை ஏகாதசி.


மகாவிஷ்ணுவும் தேவயணி ஏகாதசியில் யோக நித்திரைக்கு ஷீர சாகரத்தில் படுத்துக் கொள்கிறார்.அவர் உறங்கும் நான்கு மாதங்கள் சாதுர்மாஸ்யம் என்று சிறப்பாக நாம் அனைவரும் கடைபிடிக்கிறோம். சாத்தூர் மாதத்தில் வரும் ஐந்தாம் ஏகாதசி பரிவர்தினி ஏகாதசி . தேவசயணி ஏகாதசியில் உறங்கும் மகாவிஷ்ணு,

உத்தான ஏகாதசியில் அவர் மீண்டும் யோக நித்திரையில் இருந்து எழுகிறார். இந்த பரிவர்த்தினி ஏகாதசியின் பொழுதுதான் அவர் தன் உறங்கும் நிலையை மாற்றிக் கொள்கிறார்.



*பரிவர்த்தினி விரத கதை*


திரேதாயுகத்தில்  மகாபலி சக்கரவர்த்தி (king Bali), பிரகலாதனின் பேரன் மூவுலகையும் ஆண்டுவந்தான் ( தேவலோக, பூலோக, பாதாள லோக). அவன் ஒரு அசுரனாவான். ஆனாலும் மகாவிஷ்ணுவின் தீவிர பக்தன். தன் தாத்தா பிரகலாதனை போலவே நன்முறையில் ஆட்சி செய்து வந்தான். பிரகலாதர் அசுரன் ஹிரண்யகசிபுவின் மகன் ஆனாலும் அவர் அந்த குணங்களை வெளிப்படுத்தியது கிடையாது.மகா விஷ்ணுவின் தீவிர பக்தர் ஆவார். மக்களுக்கு நன்முறையில் ஆட்சி செய்து வந்தார்  அவரைப் போலவே மகாபலி சக்கரவர்த்தியும் நன்முறையில் ஆட்சி புரிந்து வந்தார்.



*வாமன அவதாரம்*


 ஒருமுறை பலி சக்கரவர்த்தி இந்திரனுடன் நடந்த யுத்தத்தில் இந்திரனை வீழ்த்திவிட்டார். அதனால் அவர் எந்த எதிர்ப்பும் இன்றி தேவலோகத்தையும் ஆட்சிபுரியும் தேவலோக தலைவன் ஆனார். தேவர்களுக்கு பயம் ஏற்பட்டு விட்டது. அசுரர்கள் தொடர்ச்சியாக ஆட்சி புரிந்தால் உலகத்திற்கு தீங்கு தான் நேரும் என்று புரிந்துகொண்டு, உடனடியாக மகாவிஷ்ணுவிடம் சென்று அனைவரும் முறையிட்டனர். இதை எப்படியேனும் தடுக்க வேண்டும் என்று மகாவிஷ்ணுவிடம் பிரார்த்தனை செய்தனர். 


மகாபலி விஷ்ணுவின் தீவிர பக்தன். நல்ல அரசனும் கூட ஆகையால் மகாவிஷ்ணு ஒரு தீர்மானம் மேற்கொண்டார். தன் பக்தனை சோதிப்பதற்காக.மகாவிஷ்ணு தன் ஐந்தாம் அவதாரமான *வாமன அவதாரத்தை* மேற்கொள்ளும் தருணம் அது. முடிவெடுத்தார், வாமனனாக தன்னை உருமாற்றினார்.



*மூன்று அடி நிலம்*


 மகாவிஷ்ணு வாமன அவதாரம் எடுத்தார். சமயம் வந்தது. மகாபலி தன் அரண்மனையில் யாகம் நடத்திக் கொண்டிருந்தான். அனைவருக்கும் தான தர்மங்களை வாரி வாரி வழங்கிக் கொண்டிருந்தார். யார் எதைக் கேட்டாலும் கொடுத்தார்.


நம் வாமனர் சின்னஞ்சிறு  பிராமண சிறுவன். தன் அன்னை தந்தையிடம் யாசகம் பெற்று வருவதாக சொல்லி கொண்டு சென்றார். மகாபலி சக்கரவர்த்தி அரண்மனை சென்றார்.  எனக்கு யாசகம் வேண்டும் என்றார். மகாபலி சக்கரவர்த்தி அவ்வாறே தங்களுக்கு என்ன வேண்டுமோ தர தயாராக இருப்பதாகவ வாக்கு உரைத்தார்.


எனக்கு நிறைய ஒன்றும் வேண்டாம் என் பாதஅளவில் மூன்று அடி நிலம் கொடுத்தால் போதும் என்று கேட்டார் நம்  வாமனர். அவ்வாறே தருவதாக பலிச்சக்கரவர்த்தி வாக்களித்து விட்டார்.


 இதற்கிடையில் அசுர குருவான சுக்ராச்சாரியார் வாமனனாய் வந்திருப்பது சாட்சாத் மகாவிஷ்ணுவே என்று உணர்ந்தார். இதை பலிச் சக்கரவர்த்தியிடம் எச்சரிக்கவும் செய்தார் ஆனால் பலிச்சக்கரவர்த்தி தான் கொடுத்த வாக்கை திரும்பப் பெற மறுத்துவிட்டார்.


தான் அளித்த வாக்கின்படி வாமனருக்கு மூன்று அடி நிலத்தை தர சங்கல்பம்  செய்யலானர்.


 வாமனர் தன் முதல் அடியிலேயே பூவுலகை அனைத்தும் அடக்கி விட்டார். தன் இரண்டாம் அடி எடுத்து வைத்தார் அதில் தேவலோகம் வான்லோக முழுவதும் அடங்கிவிட்டது. இப்பொழுது மூன்றாவது அடி வைக்க இடமே இல்லை. எங்கு வைப்பது என் மூன்றாவது அடியை? என்று வாமனர் பலி சக்கரவர்த்தியிடம் கேட்டார். வந்திருப்பது மகாவிஷ்ணு என்று உணர்ந்து தன் தவறை எண்ணி வருந்தி, தன் தோல்வியை ஒப்புக் கொண்டு மகாவிஷ்ணுவிடம் மண்டியிட்டு தம் மூன்றாம் பாதத்தை தன் தலையில் வைக்குமாறு கேட்டார். மகாவிஷ்ணு தன் மூன்றாம் பாதத்தை பலிச்சக்கரவர்த்தியின் தலைமீது வைத்து அவரை பாதாள உலகத்திற்கு அனுப்பி விட்டார்.  அங்கு சென்று பாதாள உலகத்திற்கு ராஜாவாக இருக்கும்படி ஆணையிட்டார்.



*ஏகாதசி பலன்*


மகாவிஷ்ணுவே காக்கும் கடவுள். பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து நம்மை காக்க கூடியவர் மகாவிஷ்ணுவே. ஏகாதசி விரதம் இருப்பதால் பூலோகத்தில் மக்கள் மகிழ்ச்சியான வாழ்க்கை பெற்று பிறப்பு இறப்பு சுழற்சியில் இருந்து மீண்டு பகவானையே அடையும் மார்க்கத்தை நமக்கு தரவல்லது ஏகாதசி விரதம்.


*"ஹுட்டிசலு பேட எண்ண ஹு ட்டிதிசிதக காயோ எண்ண  இஷ்டு மாத்ர பேடி கொம்பே ஸ்ரீ கிருஷ்ண.."*


பரிவர்த்தினி ஏகாதசி விரதத்தை ஒருவர் கடைப்பிடிப்பதால், அறியாமல் செய்த குற்றங்கள் மற்றும் பாவங்களிலிருந்து மீளவும் மற்றும் வாஜ்பேய யாகம் செய்த பலன் பெறுவர்.


🌷🌷🌷🌷🌷🌷🌷🌷


Mrs. Chandrika Arvind

Saturday, August 15, 2020

அஜ ஏகாதசி/ Aja Ekadashi

 *அஜ ஏகாதசி*



*முன்வினை பாவங்கள் நீக்கும் அஜ ஏகாதசி விரதம்*


🌷🌷🌷🌷🌷🌷

*15-08-2020*


🌷🌷🌷🌷🌷🌷


இன்றைய தினம் *அஜா ஏகாதசி* இதனை அன்னதா ஏகாதசி என்றும் குறிப்பிடுவர். இந்நாளில் எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிராரோ, அவர் அவரது பாவங்களின் கர்மவினைகளிலிருந்து விடுபடுவர் என்று பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது.


அஜா ஏகாதசி என்பது வருத்தத்தை நீக்கும் ஏகாதசி என்று பொருள்படும். இந்த அஜா ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி, மகாபாரத்தில் தர்மருக்கு ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா விளக்கியுள்ளார்.


முன்னொரு காலத்தில், பகவான் ஸ்ரீராமர் தோன்றிய ரகு வம்சத்தில் அரிச்சந்திரன் என்றொரு அரசன் சத்தியம் தவறாது மாபெரும் வேந்தனாக அரசாண்டு வந்தான். அவனுக்கு சந்திரமதி என்ற மனைவியும், லோகிதாசன் என்ற மகனும் இருந்தனர். நாடும், அவனும் எந்த விதமான குறையும் இன்றி, சுபிட்சத்தோடு விளங்கியது.


*அரிச்சந்திர மகாராஜா*


விதிவசத்தால், அரிச்சந்திர மகாராஜா தனது நாடு, நகரம் அனைத்தையும் இழக்க நேரிட்டதோடு, மனைவி, மக்களையும் விற்கும் மிகக் கொடிய நிலைக்கு தள்ளப்பட்டார். பக்திமானான அரிச்சந்திரனை நாய்களை உண்ணும் சண்டாள குலத்தவனுக்கு அடிமையாகி மயானத்தைக் காக்கும் பணியில் அமர வைத்தது விதி. ஆனால் அந்நிலையிலும் அரிச்சந்திர மகாராஜா தனது சுயத்தன்மையை இழக்காமல் சத்தியத்தினை கைவிடாது கடைபிடித்து வந்தார்.


*முனிவரின் ஆலோசனை*



பல காலங்கள் கடந்தன. ஒரு நாள் அவர், நான் என்ன செய்வேன் ? இன்னும் எத்தனை காலம் இது போன்ற வேதனையில் வாடுவது, இதிலிருந்து மீள வழியே இல்லையா? என்று மிகவும் வருந்தினார். அப்போது அதிர்ஷ்டவசமாக, அவன் அந்த வழியாக சென்ற கௌதம முனிவரைக் கண்டு தனது நிலைமையை எடுத்துக் கூறி, இதிலிருந்து மீள வழி கூறுமாறு வேண்டினார்.



*ஏகாதசி விரதம்*


அரிச்சந்திரனின் சோகக் கதையைக் கேட்டு இரக்கம் கொண்ட முனிவர், அவருக்கு இந்த ஏகாதசி விரதத்தின் மகிமையை எடுத்துக் கூறினார். அரிச்சந்திரா !! உனது நல்ல காலம், இன்னும் ஏழு நாட்களில் பாவங்கள் அனைத்தையும் நீக்கி மிகவும் நற்பலன்களை அளிக்க வல்ல அஜா ஏகாதசி எனப்படும் அன்னதா ஏகாதசி வரவிருக்கிறது. இந்நாள் மிகவும் மங்களமானது.


*கண்விழித்து விரதம்*


இந்நாளில், நீ இருக்கும் இந்த நிலையில் உன்னால் மற்ற அனுஷ்டானங்களைக் கடைபிடிக்க முடியாவிட்டாலும், உபவாசத்தை மட்டுமாவது ஏற்று, அன்று இரவு கண் விழித்து இறைவன் ஸ்ரீஹரியின் திருநாமத்தை உச்சரித்து கொண்டிரு ... இதன் காரணமாக உனது முற்பிறவி பாவங்களில் இருந்து விடுதலை பெற்று நன்னிலையை அடைவாய் எனக் கூறினார்.


*ராஜ்ஜியத்தை அடைந்த அரிச்சந்திரன்*


அரிச்சந்திரன், கௌதம முனிவரின் வழிகாட்டுதலின் படி, அஜா ஏகாதசி நாளில் உபவாசம் இருந்து அவனது பாவங்கள் அனைத்தும் நீங்கி, மீண்டும் நாடு நகரத்தினைப் பெற்று நன்னிலையை அடைந்தான். மேலும் இந்த விரதத்தின் பலனால் மாயையின் காரணத்தால் உயிரிழந்த மகனை மீண்டும் அடைந்ததோடு, மனைவியுடன் ஒன்று சேர்ந்து மீண்டும் ராஜ்ஜியத்தினை அடைந்தார் என்று ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனுக்குக் கூறி முடித்தார்.


*அஜா ஏகாதசியின் சிறப்புகள்*


அதோடு அவர் யுதிஷ்டிரனிடம், ஓ பாண்டு புத்ரா !! நீயும் இப்போது இந்த அஜா ஏகாதசியின் சிறப்புகளை அறிந்து கொள் !! எனக் கூறத் தொடங்கினார். இந்நாளில் மேற்கொள்ளும் விரதம் நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களின் விளைவால் இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கும் துன்பங்களை உடனடியாக நீக்க வல்லது. இதனால் அவர்கள் அனைவரும் இறுதியில் பக்தி லோகத்தை அடைவர் என்று கூறினார்.


*அஸ்வமேத யாகம் செய்த பலன்*


எவரொருவர், இந்நாளில் இந்த விரதத்தின் மகிமையை விவரிக்கும் இந்தக் கதையினை கேட்கிறாரோ அல்லது படிக்கிறாரோ அல்லது சொல்கிறாரோ அவர் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார் என ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனிடம் கூறி முடித்தார் என்று பிரம்ம வைவர்த்த புராணம் விவரிக்கின்றது.


🙏🙏🙏🙏🙏


ராதே கிருஷ்ணா


🌻🌻🌻🌻🌻🌻🌻

Wednesday, July 29, 2020

புத்ரதா ஏகாதசி/ Putradha Ekadashi



Shravana shukla Paksha Ekadashi

ஸ்ராவண சுக்ல பக்ஷ ஏகாதசி


*🌷🌷🌷புத்ரதா ஏகாதசி விரதம்🌷🌷🌷*

*//30-07-2020//*

மனிதர்களைப் பாவிகள் என்று சொல்வது நம் மரபில் இல்லை. மனிதர்கள் பாவிகளாகப் பிறப்பதில்லை என்றும் வினைகளோடே பிறக்கிறார்கள் என்பதுமே நம்பிக்கை. இதையே திருவள்ளுவர் 'இருள்சேர் இருவினை' என்கிறார். இருவினை என்றால் நல்வினை தீவினை ஆகியனவற்றைக் குறிக்கும். நல்வினைகள் நன்மையையும் தீவினைகள் தீமையையும் பயக்கும். ஆனால், இருவினைகளுமே மறுபிறவிக்குக் காரணமாகின்றன.
 
வினைப்பயனால் பிறந்தாலும் அந்த உயிர் இந்த உலகில் வாழ்பவர்களுக்குச் செல்வமாகவே கருதப்படுகிறது. எத்தனை செல்வம் இருந்தாலும் செல்வங்களில் உயரிய மக்கட் செல்வம் இல்லை என்றால் மற்ற செல்வங்கள் அனைத்தும் வீண் என்கின்றன சாஸ்திரங்கள். அந்த மக்கட் செல்வம் வேண்டுவோர் வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்தும் மேற்கொள்ள வேண்டிய விரதங்கள் குறித்தும் சாஸ்திரங்கள் விரிவாகக் குறிப்பிட்டுள்ளன. அவற்றுள் மிகவும் முக்கியமானது பவித்ரோபனா அல்லது புத்ரதா ஏகாதசி.

ஸ்ரவண மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசியே புத்ரதா ஏகாதசி. ஏகாதசி மகாத்மியத்தில் புத்ரதா ஏகாதசியின் மகிமைகளைக் கூறுமாறு யுதிஷ்ட்டிரன் கேட்க அதற்கு பகவான் கிருஷ்ணர் பதில் கூறுகிறார்.

*மக்கட் பேறு வேண்டிய மன்னன் மஹிஜித்*


துவாபர யுகத்தில் மஹிஷமதிபூரி என்னும் ராஜ்ஜியத்தை ஆண்டுவந்த மன்னன் மஹிஜித்க்கு அனைத்து செல்வங்களும் நிறைந்திருந்தன. அவன் தேசத்தில் சகல ஜீவன்களும் குறைவின்றி நிறைவுடன் வாழ்ந்தன. ஆனால், மன்னனுக்கு மனதில் ஒரு பெருங்குறை இருந்தது. தனக்குப் பின் தன் ராஜ்ஜியத்தை ஆள ஒரு வாரிசு இல்லையே என்று வருந்தினான் மஹிஜித்.

தான் தர்மம் தவறாது இருந்தும் தனக்கு இந்த நிலை ஏன் ஏற்பட்டது என்று தன் நாட்டிலிருந்த அறிஞர்களை எல்லாம் அழைத்துக் கேட்டான். அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. நாட்டின் எல்லைக்குட்பட்ட வனத்தில் வசிக்கும் முனிவர் லோசமரைச் சரணடைந்து கேட்டால் வழி பிறக்கும் என்று அறிஞர்கள் கூறினர். அப்படியானால் முனிவரைச் சந்தித்து விடை அறிந்துவாருங்கள் என்று மன்னன் தன் அமைச்சர்களை அனுப்பி வைத்தார்.

லோசமர், பிரம்மனுக்கு நிகரான மகான். அமைச்சர்கள் அவரைத் தேடித்திரிந்து ஒருவழியாக அவரை தரிசனம் செய்தனர். அமைச்சர்களின் வாடிய முகத்தைக் கண்ட முனிவர் அவர்களை உபசரித்து, வந்த காரணத்தை விசாரித்தார். அவர்களும் தாங்கள் வந்த காரணத்தைச் சொன்னார்கள். பொறுமையுடன் அவற்றைக் கேட்ட லோசமர், அவர்களுக்கு பதில் சொன்னார்.

``மஹிஜித் இந்தப் பிறப்பில் பாவங்கள் ஏதும் செய்யாதவனாக இருந்தாலும் போன ஜன்மத்தில் செய்த பாவமே அவனை வாட்டுகிறது. அந்தப் பாவம் தீர்ந்தால் அவனுக்கு வேண்டிய செல்வம் தானே கிடைக்கும்” என்றார்.

இதைக் கேட்ட அமைச்சர்கள், அந்தப் பாவம் நீங்க தாங்களே வழி கூறுமாறு கோரினர். ``பகவான் விஷ்ணுவே காக்கும் தெய்வம். விஷ்ணுவின் அவதாரங்களில் மிகவும் முக்கியமான அவதாரமான கிருஷ்ணாவதாரத்தைப் போற்றி விரதமிருந்து வழிபட்டால் பாவங்கள் அனைத்தும் தீரும். அதிலும் ஸ்ரவண மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி நாளில் விரதமிருந்து வழிபடுவது உத்தமம். உங்கள் மன்னனை அந்த விரதத்தை மேற்கொள்ள வழிகாட்டுங்கள். அந்த நாளில் உபவாசம் இருக்க வேண்டும். நாள் முழுவதும் நாராயணனின் நாமத்தை உச்சரிக்க வேண்டும். இரவில் கண்விழித்து அவனின் பெருமைகளைச் சொல்லும் புராணங்களை வாசிக்கவும் கேட்கவும் வேண்டும். இவ்வாறு செய்து துவாதசி அன்று விரதம் முடித்தால் முன்வினைப் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு நன்மைகள் உண்டாகும்” என்றார்.

அமைச்சர்கள் மகிழ்ந்து முனிவருக்கு நன்றிகூறிப் புறப்பட்டு நாடடைந்தனர். மன்னரிடம் முனிவரின் வார்த்தைகளைக் கூறினர். இதைக் கேட்ட மஹிஜித் மிகவும் மகிழ்ந்து முனிவர் கூறியதுபோலவே ஏகாதசி விரதத்தை மேற்கொண்டான். அதன் பயனாக பகவான் கிருஷ்ணனின் அருளால் அவன் தேசம் மேலும் செழிப்புற்றதோடு அடுத்த ஆண்டே அவனுக்குக் குழந்தைச் செல்வமும் கிடைத்தது. அன்றுமுதல் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் மேற்கொள்ள வேண்டிய விரதங்களில் ஒன்றாக புத்ரதா ஏகாதசி விரதம் மாறியது.


*உடலைப் புத்துணர்ச்சி கொள்ளச் செய்யும் ஒருநாள் உபவாசம்...*


ஏகாதசி என்பது அமாவாசை மற்றும் பௌர்ணமியிலிருந்து 11வது நாள். பத்துநாள்கள் உடலும் மனமும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்க 11வது நாள் அதற்கு ஓய்வு தரும் விதமாக மேற்கொள்ளப்படும் விரதமே ஏகாதசி விரதம். இந்த நாளில் உணவைத் தவிர்ப்பதன் மூலம் உடல் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள உதவலாம். மேலும், மனமும் அன்றாடக் கவலைகளிலிருந்து விலகி இறைவழிபாட்டில் ஈடுபட்டுப் புத்துணர்ச்சி கொள்ளும். அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் இதை உணர்ந்தே ஏகாதசி விரதத்தை ஏற்படுத்தினார்கள்.

உடல் வலு உள்ளவர்கள் ஏகாதசி நாளில் உணவைத் தவிர்க்க வேண்டும். இயலாதவர்கள் குறைந்தபட்சம் முழு அரிசிச் சோற்றைத் தவிர்க்க வேண்டும். பழங்கள் எடுத்துக்கொள்ளலாம். முதல் நாளே பறித்து வைத்த துளசியால் தயாரிக்கப்பட்ட துளசித் தீர்த்தத்தை உட்கொள்ளலாம். நாள் முழுவதும் ராம நாமத்தையோ கிருஷ்ண நாமத்தையோ உச்சரிக்க வேண்டும். மறுநாள் துவாதசி அன்று காலை பாரனை முடித்துப் பின்பு உணவு உட்கொண்டு விரதம் முடிக்கலாம்.

🌷🌷🌷🌷🌷🌷🌷

ஹரே கிருஷ்ணா

🌷🌷🌷🌷🌷🌷🌷

Tuesday, July 14, 2020

காமிக ஏகாதசி/ Kaamika ekadhashi



🌻🌻🌻🌻🌻 காமிக ஏகாதசி 🌻🌻🌻🌻🌻

16/07/2020 ஏகாதசியின் பெயர் "காமிக ஏகாதசி" என்றழைக்கப்படுகிறது. அப்படி என்ன இந்த சிறப்புகள் இந்த காமிக ஏகாதசியில் உள்ளது? அதன் வரலாறு என்ன? இந்த ஏகாதசி விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் தான் என்ன? என்பதைப் பற்றி நாம் அறிந்து கொள்வோமா?

🌹🌹 கிருஷ்ணனை நமஸ்கரிக்கும் யுதிஷ்டிரர் :-

காமிகா ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி "பிரம்மவைவர்த்த புராணத்தில்" பகவான் கிருஷ்ணருக்கும், யுதிஸ்டிரருக்கும் இடையேயான உரையாடலில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

யுதிஷ்டிரர் பகவான் கிருஷ்ணரிடம் ஆடி மாதம்(ஆஷாட மாச) தேய்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசி பற்றி அறிய விரும்புகிறேன். என் மீது கருணை கொண்டு, அதனைப் பற்றி எனக்கு விரிவாக எடுத்துரையுங்கள் என்று யுதிஷ்டிரர் கிருஷ்ணரிடம் கூறினார்.

பகவான் கிருஷ்ணர் கூறியதாவது, "தர்மத்தை எந்நிலையிலும் விடாது காக்கும் யுதிஷ்டிரா, ஒருவனது அனைத்து பாவங்களையும் அழித்து, சுப நிகழ்வு ஏற்படுத்தக்கூடிய இந்த ஏகாதசி விரதத்தின் மகிமைகளைச் சொல்கிறேன்.கவனமாகக் கேள்" என்று கூறிவிட்டு பின்வருமாறு கூறினார். 

🌷🌷 கிருஷ்ணர் கூறியது :-

ஒருமுறை நாரத முனிவர், பிரம்மாவிடம் இந்த ஏகாதசியின் மஹாத்மியத்தை பற்றி எடுத்துச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். நாரதர் தனது தந்தையை நோக்கி, "தண்ணீரில் பிறக்கும் தாமரை மலரின் மீது, அரசன் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதைப் போலக் காட்சி அளிப்பவரே, அனைத்து உயிர்களைக் காக்கும் வல்லமை பெற்றவரே, மைந்தனான எனக்கு ஆடி மாதம் (ஆஷாடா மாச) வரும் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசியின் பெயர் என்ன? அப்புண்ணிய தினத்தன்று வழிபட வேண்டிய கடவுளைப் பற்றியும், கடைப்பிடிக்க வேண்டிய விரத வழிமுறைகளையும், விரதம் மேற்கொள்வதால் கிட்டும் நற்பலன்களையும் விரிவாக எடுத்துச் சொல்லுங்கள் என்று வேண்டிக் கொண்டார்.

பிரம்மா தன் மகனிடம் "அருமை மகனே! நாரதா! இவ்வுலகத்தின் நன்மைக்காக நீ தெரிந்து கொள்ள விரும்பிய இந்த ஏகாதசி பற்றி விரிவாகச் சொல்கிறேன், கவனமாகக் கேள் என்றார்.

ஆடி (ஆஷாடா) மாதத்தில் வரும் கிருஷ்ணபட்சத்தில் "காமிகா ஏகாதசி" என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. மிகவும் புண்ணியமானது இந்த ஏகாதசி. காமிகா ஏகாதசியின் மகத்துவம் சொல்லில் அடங்காதது. அது என்ன சொல்லில் அடங்காதது??? இந்த ஏகாதசியின் மகத்துவத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம் என்பது பொருள்).

🌺 இந்த ஏகாதசியின் மஹாத்மியத்தை வெறும் காதால் கேட்பவர்களே, "அஸ்வமேத யாகம்" நடத்திய பலனை பெறுவர் என்றால்? இதன் மகிமையை நாமே உணர்ந்து கொள்ளலாம்.

🍁 சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகிய நான்கு திவ்ய ஆயுதங்களையும் தன் திருக்கரங்களில் ஏந்தி "கதாகரன்" என்ற திருநாமத்தாலும், ஸ்ரீதரன், ஸ்ரீ ஹரி, ஸ்ரீ விஷ்ணு, மாதவன், மதுசூதனன் என்ற மற்ற திருநாமங்களாலும் போற்றப்படும் மஹாவிஷ்ணுவை வணங்குவோர்க்கும், அவரது பாதார விந்தங்களே சரணாகதி (அதாவது பாதத்தை சரணாகதி அடைபவர்கள்) என்று தியானிப்போர்க்கும், நிச்சயமாக பெரும் நற்பலன் கிட்டும்.

🌾🌾 காமிகா ஏகாதசியின் பலன்கள் :-

🌻காமிகா விரதத்தின் மகிமையைக் காதால் கேட்டாலே "அஸ்வமேத யாகம்" செய்த பலன் கிடைக்கும்.

🌻காமிகா ஏகாதசியன்று மஹாவிஷ்ணுவிற்குச் செய்யப்படும் பூஜை, ஆராதனை ஆகியவை ஒருவருக்கு, "புண்ணிய ஷேத்திரமான, காசியின் கங்கையில் நீராடுதல், நைமிசாரண்ய வனத்தில் நீராடி இறைவனை வழிபடுதல், அல்லது பூமியில் மஹாவிஷ்ணுவான என்னை மூலவராக வழிபடும் கோவிலின் திருக்குளங்களில் நீராடி வழிபடுதல் ஆகியவற்றால் கிடைக்கக்கூடிய அருளாசிகளை விட பன்மடங்கு மேலான புண்ணியத்தைத் தரவல்லது, அருளையும் பெற்றுத் தரக்கூடியது இந்த "காமிக ஏகாதசி".

🌻பனி சூழ்ந்த இமயமலையில் அமைந்துள்ள கேதார்நாத் தரிசனம் அல்லது சூரிய கிரகணத்தின் போது குருஷேத்ரத்தில் புண்ணிய நீராடுதல் அல்லது பூமியையே தானமாக அளிப்பதால் கிட்டும் பலன்கள் அல்லது பூஜைக்குரிய விஷ்ணு மூர்த்திகளாக கருதப்படும் சாளக்கிரமங்களை தன்னுள்ளே கொண்டுள்ள கண்டகீ நதியில் நீராடுதல், அல்லது சிம்ம ராசியில் குரு பகவான் கோட்சாரம் செய்யும் காலம், சோமவார பூர்ணிமா தினத்தில் கோதாவரி நதியில் நீராடுதல் இவை அனைத்தையும் செய்வதால் கிட்டும் நற்பலனை விட ஆடி மாதம், கிருஷ்ணபட்சத்தில் வரும் காமிகா ஏகாதசி விரதத்தை அதற்குரிய வழிமுறைப்படி மேற்கொள்வதுடன், அன்று பகவான் கிருஷ்ணனை ஆராதனையுடன் வழிபடுவது மிக அதிக நற்பலனைத் தந்தருளும் இந்த "காமிக ஏகாதசி".

🍁 இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மையானது, பால் சுரக்கும் பசுவை கன்றுடனும், தீவனங்களுடனும் தானமாக அளிப்பதால் உண்டாகும் நற்பலனுக்குச் சமமானது.

🍀 இந்த காமிக ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் வைகுண்டத்திற்குச் செல்வார்கள்.

🌹 இந்த தினமானது மற்ற தினங்களை விடவும் பவித்ரமான நாளாகும்.

🌻 நாரதா! ஸ்ரீ ஹரியே, எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணரே இந்த ஏந்த ஏகாதசி விரதத்தைப் பற்றிக் கூறும் போது, "காமிகா ஏகாதசியன்று விரதத்துடன் உபவாசம் இருப்பதால் கிடைக்கும் புண்ணியம், பக்தி இலக்கியங்கள் அனைத்தையும் படிப்பதால் கிட்டும் புண்ணியத்தை விட பன்மடங்கு மேலானது" என்று அருளியுள்ளார்.

🌺 காமிகா ஏகாதசியன்று விரத வழிமுறைகளின் படி உபவாசம் இருந்து, இரவில் கண் விழித்து ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் மகிமையை விளக்கும் புராணங்களை பாராயணம் செய்பவர் யமதர்மராஜனின் கோபத்திற்கு ஒரு போதும் (எப்போதும்) ஆளாக மாட்டார்கள். 

🍁 அவர்கள் பிறப்பு, இறப்பு என்ற மாயச் சக்கரத்திலிருந்து விடுபட்டு மறுபிறப்பில்லா நிலையை அடைவர் என்பது நிச்சயம்.

🍀 முனிவர்களும், யோகிகளும் இந்த விரதத்தை மேற்கொண்டு உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர்.

🌸 ஆகவே, நாமும் நம்மால் இயன்றவரை விரதமிருப்பது நல்லது. 

🌻 பகவான் ஸ்ரீமந்நாராயணரை துளசி இலைகளால் வணங்குவோர் தன்னுடைய பாவத்தின் விளைவுகளிலிருந்து விடுதலை அடைவார்கள்.

எப்படி தாமரை இலையானது தண்ணீரில் இருந்தாலும், தண்ணீருடன் தொடர்பு இல்லாமல் இருக்கிறதோ!!! அதே போல அவர்கள் பாவங்கள் தீண்டாமல் வாழ்வார்கள்.

🌹 எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணருக்கு அன்று பவித்ரமான ஒரு துளசி இலையை சமர்ப்பித்து பூஜிப்பவர் அடையும் புண்ணியமானது, ஒருவர் 200 கிராம் தங்கம், 800 கிராம் வெள்ளி தானம் செய்வதால் அடையும் புண்ணியத்திற்குச் சமமானது இந்த ஏகாதசி. 

🌴 முத்து, பவளம், மாணிக்கம், புஷ்பராகம், வைரம், வைடூரியம், கோமேதகம் போன்ற விலைமதிப்பில்லாத கற்களினால் செய்யப்படும் பூஜையை விட பவித்ரமான துளசி இலைகளால் மட்டும் செய்யப்படும் பூஜையானது பகவான் விஷ்ணுவிற்கு மிகுந்த சந்தோசத்தை அளிக்கிறது.

🌺 துளசி தேவிக்கு (துளசி மாடம்) தினம் அணையாமல் எரியும் நெய் விளக்கேற்றி பூஜிப்பவரின் புண்ணியக் கணக்கை சித்ரகுப்தனாலும் கணக்கிட இயலாது. பவித்ரமான காமிகா ஏகாதசி பகவானுக்கு மிகவும் பிரியமான நாளாகும். ஆகையால் அன்று முன்னோர்கள் அனைவரும் நெய் விளக்கேற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு சுவர்க்கத்தை அடைந்து அமிர்தத்தை அருந்தும் பாக்கியம் பெற்றனர். 

🍀 எவரொருவர் இன்று நெய் அல்லது எள் எண்ணையினால் விளக்கேற்றி ஸ்ரீ கிருஷ்ணரை பூஜித்து ஆராதிக்கிறாரோ, அவர் தன் பாவங்களிலிருந்து விடுதலை பெற்று, முடிவில் சூரியனின் வாசஸ்தலமான சூரிய மண்டலத்தை பத்து மில்லியன் விளக்குகளின் பிரகாசத்திற்கு சமமான பிரகாச உடலுடன் அடைவர்.

🐚 இந்த ஏகாதசி மிகவும் பவித்ரமானதாகும். உபவாசம் இருக்க இயலாதோர் இங்கு குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றினாலே, தங்கள் முன்னோர்களுடன் ஸ்வர்க்கம் அடைவர்". இவ்வாறு பிரம்மதேவர் காமிக ஏகாதசி விரதத்தைப் பற்றி நாரதருக்குக் கூறினார்.

🌾🌾 கிருஷ்ணர் கூறுவது :-

யுதிஷ்டிரரிடம் இதைக் கூறிய கிருஷ்ணர் "யுதிஷ்டிரா, பாவங்களை நீக்கி, எண்ணில்லாத பலன்களை வழங்கும் காமிகா ஏகாதசியின் பெருமைகளை, பிரஜாபதி பிரம்மா தனது புதல்வன் நாரதருக்கு உரைத்ததை அப்படியே நான் உனக்கு உரைத்துள்ளேன்".

இப்புனித காமிக ஏகாதசி விரதமானது பிராமணனை கொன்றதால் உண்டான பாவம் (பிரம்மஹத்தி தோஷம்), கருவில் வளரும் குழந்தையை அழித்த பாவம் போன்ற கொடிய பாவத்திலிருந்து நிவர்த்தி அளிக்கும் பேறு பெற்றது.

இந்த விரதம் அதிக புண்ணியத்தை அளிக்க வல்லது. எனவே, இவ்விரதத்தைக் கடைப்பிடிப்போர் பக்தியில் சிறந்து விளங்குவர்.

அப்பாவிகளைக் கொல்வதால் உண்டாகும் பிரம்மஹத்தி தோஷம், சிசு ஹத்தி தோஷம், பக்தியான் மற்றும் களங்கமில்லாத பெண்ணைக் கொன்ற பாவங்களின் விளைவுகளிலிருந்து காமிகா ஏகாதசியின் மஹாத்மியத்தைக் கேட்பதால் நிவர்த்தி பெறலாம்.

ஆனால், இதைக் கொண்டு ஒருவர் முதலில் கொலைப் பாதகம் புரிந்து விட்டு பின்னர் காமிகா ஏகாதசியின் மகாத்மியத்தைக் கேட்பதால் நிவர்த்தி பெறலாம் என்று நினைக்கக் கூடாது. அது தவறானது. அறிந்தே கொலை பாதகம் போன்ற கொடிய பாவங்களைப் புரிவதற்கு எந்த சாஸ்திரத்திலும் மன்னிப்பே கிடையாது என்பதை ஞாபகத்தில் இருத்தவும்" என்றார்.

எவரொருவர் பவித்ரமான இந்த காமிக ஏகாதசியின் பெருமையை விவரிக்கும் மஹாத்மியத்தை பக்தியுடனும், சிரத்தையுடனும், நம்பிக்கையுடனும் கேட்கிறாரோ, அவர் தன் பாவத்திலிருந்து விடுபட்டு மஹாவிஷ்ணுவின் வாசஸ்தலமான விஷ்ணுலோகம் அடைவர், என்று பகவான் கிருஷ்ணர் யுதிஷ்டிரருக்கு காமிக ஏகாதசி விரத மஹாத்மியத்தைக் கூறி முடித்தார்.

ப்ரஹ்ம வைவதர்த்தன புராணம், *ஆஷாடா (ஆடி) மாதம் கிருஷ்ண பட்ச ஏகாதசி* அதாவது காமிகா ஏகாதசி என்று அழைக்கப்படும் ஏகாதசியின் படலம் முடிவுற்றது.

"ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ!!! ஓம் நமோ நாராயணாய நமஹ!!!".

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே

Monday, June 29, 2020

Deva sayani ekadashi story







தேவசயனி ஏகாதசி - ஆஷாட ஏகாதசி.....!!!
(1.07.2020)

தேவசயன ஏகாதசி  ஆனி மாதத்தில் வளர்பிறையில் வரும் ஏகாதசியாகும்.

தேவர்களுடன் சயனத்திற்கு பகவான் விஷ்ணு செல்லும் நேரமாக இந்த ஏகாதசி வரும் நேரம் இருப்பதால் இந்த ஏகாதசிக்கு தேவசயன ஏகாதசி எனப் பெயர் வந்தது. தேவர்கள் சயனத்திற்கு செல்லும் நேரமாக இருப்பதால் இந்த ஏகாதசி விரதத்திற்கு பிறகு வைதீக காரியங்கள் சிறிது நாட்களுக்கு நடப்பதில்லை.(தேவர்கள் ஹோமத்தில் அளிக்கும் அன்னத்தை உண்ண வர மாட்டார்கள். இது அவர்கள் உறங்கும் வேளை).

தேவசயன ஏகாதசிக்கு பத்ம ஏகாதசி என்றும் ஆஷாட ஏகாதசி என்றும் பெயர் உண்டு. மகாராஷ்டிர மாநிலத்தில் இதனை ஆஷாட ஏகாதசி என அழைத்து இந்த நாளில் பண்டரிபுரம் சென்று விட்டலனை வழிபடுகிறார்கள். மற்ற வட இந்திய மாநிலங்களில் இன்றைய தினம் கோதாவரி நதியில் நீராடி காலா ராமர் கோவில் சென்று வழிபடுகிறார்கள்

ஆஷாட ஏகாதசி மராட்டியர்களால் பெரிதும் கொண்டாடப்படுகிறது.

மராட்டிய பக்தர்களும் சாதுக்களும் ஆன ஞானேஷ்வரர் ,துக்காராம் ஆகியோர் தங்கள் கிராமங்களில் இருந்து பாதயாத்திரையாக 15 நாட்கள் நடந்து ஆஷாட ஏகாதசி அன்று பண்டரிபுரம் சென்று விட்டலனை வணங்கினர்.

இதனை கொண்டாடும் விதமாக பக்தர்கள் இந்த சாதுக்களின் உருவ சிலைகளை பல்லக்கில் தூக்கிக் கொண்டு பாத யாத்திரை மேற்கொண்டு ஆஷாட ஏகாதசி அன்று  பண்டரிபுரம் அடைந்து விட்டலனை வழிபடுவது வழக்கம்.

சயனி ஏகாதசி கதையை பகவான் கிருஷ்ணன் தருமருக்கு எடுத்து  சொல்லும் போது அதனை நாரதருக்கு பிரம்மா எடுத்து சொல்லியதாக கூறினார்.

பிரம்மா சொன்ன கதையாவது:

முன்னொரு காலத்தில் மந்தாதர் என்னும் அரசர் செம்மையாக இராஜிய பரிபாலனம் செய்து வந்தார். அவரின் அரசாட்சியில் குடிமக்கள் குறையில்லா வாழ்வு வாழ்ந்தார்கள். அரசரும் முறை தவறாத ஆட்சி மேற்கொண்டார். ஒரு தடவை வறட்சியும் பஞ்சமும் மூன்று வருடங்களுக்கு தொடர்ந்து இருந்து குடிமக்களை வாட்டி வதைத்தன. மக்கள் வழி தெரியாது மன்னனிடம் முறையிட்டனர்.

மன்னனும் காரணம் அறியாது கலங்கினார். அவருக்கு தெரிந்த வரை அவர் ஒரு தவறும் இழைக்கவில்லை. தனது சேனைகளையும், பரிவாரங்களையும் கூட்டிக் கொண்டு காடு காடாக சென்று சாதுக்களை தரிசித்தார். எங்காவது ஒரு வழி கிடைக்குமா எனத் தேடினார்.

இவ்வாறு  பிரயாணம் செய்த நேரத்தில் ஆங்கிரஸ முனிவரை மன்னன் தரிசித்தார். அவரிடம் தனது  கஷ்டத்தை அவர் எடுத்து  கூறிய போது, முனிவர் தனது  தவ வலிமையால் கண்டறிந்து மன்னனின் ராஜ்யத்தில் பிராமணன் இல்லாத ஒருவன் வேள்வி யாகங்களில் ஈடுபட்டதன் பலனே இது என உரைத்தார். அவனை கொன்றுவிடும்படி மன்னனிடம் கூறினார்.

கொல்லும் அளவுக்கு இது பெரிய குற்றமில்லை என்பதால் மன்னன் அதனை மறுத்து வேறு உபாயம் கேட்டார். முனிவரும் சயன ஏகாதசி விரதத்தை கடைபிடிக்க சொன்னார். பிரச்னை தீரும் என்றார். நாடு திரும்பிய மன்னன் தன் பிரஜைகளையும் தேவ சயன ஏகாதசி விரதம் இருக்க சொன்னான். விளைவாக நாட்டில் வரட்சியும், பஞ்சமும் நீங்கியது. சுபிக்ஷம் ஏற்பட்டது.

சயன ஏகாதசி விரத பலன்கள்:

தேவ சயன ஏகாதசி விரதமிருந்தால் எந்தொரு பாபமாக இருந்தாலும் தொலையும்.

ஆன்மீக சக்தி  அதிகரிக்கும். அதில் ஒரு முழுமை கிடைக்கும். நடுவில் இருக்கும் தடை கற்கள் நீங்கும்.

பாபத்தினால் விளையும் தீமைகள் மறையும். வாழ்வு வளம் பெரும்.

இப்படியாக கிருஷ்ண பரமாத்மா தருமருக்கு தேவ சயன ஏகாதசியை பற்றி எடுத்தியம்பியதாக பவிஷ்ய உத்தர புராணத்தில் சொல்லப்பட்டு உள்ளது.


ஹரே கிருஷ்ணா!!!!

Sunday, May 31, 2020

Nirjala Ekadashi

*நிர்ஜல_ஏகாதசி 2/6/2020*

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

*பாண்டவ நிர்ஜல ஏகாதசி' விரத மகிமை*

'ஜேஷ்ட மாதம்', (May / June)  வளர்  பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "பாண்டவ நிர்ஜல  ஏகாதசி (அ) நிர்ஜல ஏகாதசி" (Paandava Nirjala Ekadasi)  என்று அழைக்கப்  படுகின்றது.

*நிர்ஜல ஏகாதசி பற்றி 'பிரம்ம வைவர்த்த புராண' விளக்கம்:*

ரிஷிகளில் முதன்மையான ஶ்ரீ வியாஸரிடம் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் எழுப்பிய வினாக்களும் (கலியுகத்தில் ஏகாதசி விரதம் இருக்க முடியாது என்ற நிலையில் இருக்கும் பலருக்காகவும்) அதற்கு வியாச மகரிஷி அளித்த விளக்கங்களையும் நாம் இங்கே தொகுத்துள்ளோம் நமது  "அன்பர்களுக்கு

ஒருமுறை யுதிஷ்டிரரின் தம்பிகளிள் ஒருவரான பீமசேனன், தனது பாட்டனாரும், மிகச்சிறந்த ரிஷி முனிகளில் முதன்மையானவருமான ஸ்ரீ வியாசரிடம் தனது சந்தேகத்தைக்   கேட்கிறார்...

ரிஷிகளில் சிறந்த எமது பாட்டனாரே, உங்களுக்கு எனது நமஸ்காரம். வெகு நாட்களாக என் மனதில் இருக்கும் ஐயத்தைத் தீர்த்து வைக்க வேண்டுகிறேன். எமது தாய் குந்தி தேவி, எனது உடன்பிறந்தவர்கள் யுதிர்ஷ்டிரர், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் மற்றும் பாஞ்சாலி இவர்கள் அனைவரும் பிரதி ஏகாதசி தோறும் விரதம் இருக்கின்றனர். ஏகாதசி விரதத்தை முறையாக கடைபிடித்து பகவான் வாசுதேவரை மகிழ்வித்து அவரது ஆசிர்வாதத்திற்கு உரியவர்கள் ஆகின்றனர். மேலும், என்னையும் ஏகாதசி விரதத்தை முறைப்படி இருக்க வலியுறுத்துகின்றனர்.
நான் பகவான் விஷ்ணுவை மனதார பூஜிப்பேன், அவருக்கு உண்டான பூஜைகள் அனைத்தையும் கூட செய்வேன், ஆனால் என்னால் ஒரு வேளை கூட உணவு உண்ணாமல் இருக்க முடியாது. வாயுதேவரின் புத்திரனான 'சமானப்ராணா' (எந்த பொருளையும் செரிமானம் செய்யக்கூடிய வாயு) எனது வயிற்றில் உள்ளது.  அதனால் என்னால் பசி தாங்க இயலாது. ஆகவே, பாட்டனார் அவர்களே, ஏகாதசி விரதம் கடைபிடிக்காமல் இருந்து, நான் முக்தி அடையும் யுக்தியை எனக்கு கூறுவீர்களாக, என்று பீமசேனன், ஸ்ரீ வியாச ரிஷியிடம் கேட்கிறார்.

இதனைக்கேட்ட வியாசரிஷி, பீமா, நீ நரகத்திற்கு செல்லாமல் இருந்து சொர்க்கத்திற்கு  மட்டுமே செல்லவேண்டும் என்றால், பிரதி மாதம் இரண்டு ஏகாதசி விரதமும் கடைபிடித்தே ஆக வேண்டும் என்று கூறுகிறார்.

பீமன், மீண்டும் எடுத்துரைக்கிறார்... ஓ பாட்டனாரே, தயவு செய்து எனது நிலையைப் புரிந்து கொள்ளுங்கள்... என்னால் ஒரு வேளைகூட உண்ணாமல் இருக்க முடியாது, நான் எப்படி வருடம் முழுவதும் 24 ஏகாதசி விரத நாட்களில் மூன்று வேளையும் உண்ணாமல் இருக்க முடியும் ??? வ்ரிகா  (Vrika) எனும் அக்னி எனது வயிற்றில் உள்ளது.  நான் முழுவதும் உண்டால் மட்டுமே, எனது வயிற்றில் உள்ள அந்த அக்னி அடங்கும், என்று மீண்டும் கூறுகிறார்...

இந்த இடத்தில், அக்னி பற்றி ஒரு சில வரிகளில் பார்த்துவிடுவோம்...பொதுவாக அக்னி மூன்று வகைப்படும். 'தவாக்னி' - மரங்களை எரிப்பதன் மூலம் வருவது. 'ஜாடராக்னி' - நமது வயிற்றின் உள்ளே இருந்து நாம் உண்ணும் அனைத்தையும் செரிக்க வைக்கக் கூடியது. , 'வடவாக்னி' - இது சூடான மற்றும் குளிர்ந்த பனி ஒரே நேரத்தில் உராயும் பொழுது வரக்கூடியது, குறிப்பாக கடலின் மேல் ஏற்படும்.
இதில், ஜாடராக்னியின்   உச்ச பட்ச விளைவாக, 'வ்ரிகா' எனும் எதனையும் உடனே செரிமானம் செய்யக்கூடிய அக்னி வடிவம் தான் பீமனின் வயிற்றில் இருந்தது. அதன் காரணமாகத்தான், மற்ற அனைவரையும் விட 100 மடங்கு அதிகம் சாப்பிட்டாலும் கூட, அவை உடனே செரிமானம் ஆகிவிடக்கூடிய வாய்ப்பு பீமனுக்கு இருந்தது.

சரி மீண்டும் புராணத்தினுள் நுழைவோம்...
பீமன், தனது பாட்டனாரிடம் மன்றாடுகின்றார்; தயை கூர்ந்து எனது நிலையைப் புரிந்து கொண்டு எனக்கேற்றார் போல ஒரே ஒரு ஏகாதசி விரதத்தை சொல்லுங்கள், அன்று ஒரு நாள் மட்டும், நான்  முழுவதும் உண்ணாமல் இருக்க முயற்சி செய்கிறேன் என்று மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறார்.

பீமனின் நிலை, ஏற்கனவே ஶ்ரீ வியாசருக்கு நன்றாகத் தெரியும், இருப்பினும், பீமனைப்போன்று கலியுகத்திலும் பலர் எல்லா ஏகாதசி நாட்களிலும் விரதம் இருக்கும் வாய்ப்பு இல்லாமல் இருப்பர் என்பதை மனதில் எண்ணி, பீமனுக்கு உபாயம் கூறுவது போல நமக்கும் உபாயம் அருளினார்...
வியாச மகரிஷி என்ன உபாயம் கூறினார் ?

ஓ, பீமா, நான் உங்கள் அனைவருக்கும் வேத சாஸ்திர நெறிமுறைகளையும், பூஜா விதிகளையும் மற்றும் அனைத்து புராண விளக்கங்களையும் கூட கூறியுள்ளேன்.  இருப்பினும், அடுத்து வரக்கூடிய கலியுகத்தில், இதனை அனைவரும் முறையாகக் கடைப்பிடித்து நரகத்தை தவிர்த்து சொர்க்கத்திற்கு செல்லும் வாய்ப்பு மிகவும் குறைவே...அதற்கு எளிய உபாயமாகத்தான் பிரதி சுக்ல பட்ச ஏகாதசி மற்றும் கிருஷ்ண பட்ச ஏகாதசி விரதம் மானுடர்களுக்கு வரப்பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளது. நீ அதிலும் விதிவிலக்கு கேட்டு ஒரே ஒரு ஏகாதசியை சொல்ல சொல்கிறாய். ?!
சரி, உன்னைப்போன்று ஒவ்வொரு மாதமும் ஏகாதசி விரதம் இருக்க முடியாதவர்கள், சூரியன் ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு பயணிக்கக்கூடிய ஜேஷ்ட மாதத்தில் (May / June) சுக்ல பட்சத்தில் வரக்கூடிய  ஏகாதசி விரதத்தை, உண்ணாமல் மட்டும் அல்ல, ஒரு துளி நீர் கூட அருந்தாமல் இருந்து கடைபிடிக்க வேண்டும்.

('நீர் கூட அருந்தாமல்' என்று பொருள் படுவதால் இது "நிர்-ஜல" ஏகாதசி என்று ஆயிற்று...) இந்த விரத நேரமானது ஏகாதசி அன்று காலை சூர்ய உதயம் முதல் மறுநாள் 'துவாதசி' காலை சூர்ய உதயம் வரை ஆகும்.
பின்னர், துவாதசி அன்று காலை குளித்த பின்னர்  பகவான் விஷ்ணுவை பிரார்த்தனை செய்துவிட்டு, அந்தணருக்கு தங்கம் அல்லது வேறு வஸ்திரம் தானம் செய்துவிட்டு (அல்லது அவரவர்க்கு முடிந்த வரையில் ஏதாவது ஒரு குடை, செருப்பு, கைத்தடி அல்லது முடிந்த  அளவு பணம் தானம் செய்துவிட்டு) அதன்பின்பு கண்டிப்பாக அவருக்கு நீர் அருந்தக் கொடுத்து அதன் பின்னர் அவருக்கும் உணவளித்து, தானும் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று  வியாச மகரிஷி பீமனுக்கு உபாயம் கூறி அருளினார்...

*நிர்ஜல ஏகாதசியின் பலன்கள் என்ன ?*

மேலும், வியாச மகரிஷி தொடர்ந்து கூறுகையில், ஓ வாயுபுத்திரனே, இப்படி நீர் கூட அருந்தாமல் மிகக்கடுமையாக இந்த விரதத்தை கடைபிடித்தால், அவர்களது மலையளவு பாவமும் குறையும். பல்வேறு புண்ய நதிகளில் நீராடிய பலனைப்பெறுவர். மேலும், பிரதி மாதம் சுக்ல பட்ச, கிருஷ்ண பட்ச ஏகாதசி விரதம் இல்லாமல் இருந்தாலும், அதற்கு விரதம் இருந்த பலனையும் சேர்த்து பெறுவர்.

ஓ, 'வ்ருகோதரா' (மிக அதிக விருப்பம் கொண்டு அதிகமாக உண்பவன் என்று அர்த்தம்), இந்த நிர்ஜல ஏகாதசி விரதத்தை கடைப் பிடித்தவர்களுக்கு, தனம், தான்யம், மற்ற அனைத்து செல்வங்களும் தானாக வந்து சேரும். மேலும், அவர்களது இறப்பிற்குப் பின், அவர்களை கூட்டிச்செல்ல யமதூதர்கள் வர மாட்டார்கள், மாறாக விஷ்ணு தூதர்கள் தான் வருவார்கள். அந்த ஆன்மா, விஷ்ணுவின் பாதத்தை அடையும்.
துவாதசியுடன் இணைந்து இருக்கும் இந்த ஏகாதசி நாளில் விரதம் இருந்து, அதன் பின்னர் அந்தணர்களுக்கு அளிக்கும் நீர், குடை, செருப்பு , கைத்தடி ஆகிய தானங்கள், முன்னோர்களுக்கு ஸ்ரார்த்தம் செய்த பலனைத்தரும்.
ஆகவே, பீமசேனா, இந்த 'ஜேஷ்ட சுக்ல ஏகாதசி' அல்லது 'நிர்ஜல ஏகாதசி' விரதத்தை முழு பக்தியுடன் அனுஷ்டித்து, அந்த விஷ்ணுவின் பரமபதத்தினை அடைவாயாக என்று கூறி ஆசி வழங்கினார்...
இவ்வாறு ப்ரம்ம-வைவர்த்த- புராணம் விளக்குகிறது.

பீமன் மூலமாக, நாமும் இந்த அதி உன்னத 'நிர்ஜல ஏகாதசி' விரதத்தினைப் பற்றித் தெரிந்து கொள்ளும் பாக்கியம் கிடைக்கப்பெற்றோம்.

இவ்வாறு, இதன் பெருமைகளை பீமனிடம் கூறிய ஸ்ரீ வியாசமகரிஷி மேலும் கூறுகையில், ஓ பீமசேனா, இந்த 'நிர்ஜல ஏகாதசி' விரத கதையினை படித்தவர்களும், கேட்டவர்களும் மற்றும் பிறருக்கு எடுத்துச் சொல்பவர்களும் மிகுந்த புண்ய பலனைப் பெறுகின்றனர். அவர்கள், அந்தணர் ஒருவருக்கு 'கோ தானம்' செய்த புண்ய பலனைப்பெறுவர், என்று கூறினார்.

ஆகவே, நமது இப்பிறவி எப்படி இருப்பினும், நாம் செய்த பாவங்களை போக்கவும், அடுத்த ஜென்மாவில் (அடுத்த பிறவி வேண்டாம் என்று கூறினாலும், ஒருவேளை கர்ம பலன் தொடர்ச்சி இருப்பின்) மிகுந்த புண்ணிய ஆத்மாவாக பிறக்கவும்  'நிர்ஜல ஏகாதசி'  தினத்தில் நாம் செய்ய வேண்டியவை:

வாய்ப்பு இருப்பவர்கள் முழு நாளும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். (அல்லது அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப ஒரு வேளையோ அல்லது  இரு வேளைகளோ இருக்கலாம்.)  வாய்ப்பு இருப்பவர்கள், அன்று நாள் முழுவதும் பகவான் நாமாவை ஜபிக்கலாம். இருக்கும் இடத்தில் இருந்தே, பெருமாளை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளலாம்...    விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த விரத கதையையும், பலனையும் பிறருக்கு எடுத்து கூறுவதன் மூலம், 'கோ' தானம்  செய்த புண்ணியம் பெறுகிறார்கள்.

ஶ்ரீ கிருஷ்ணார்பணமஸ்து

Saturday, May 16, 2020

அபரா ஏகாதசி/Apara Ekadashi

அபரா ஏகாதசி.......!!!
(18.5.2020)

இதை அசலா ஏகாதசி என்றும் கூறுவர். இந்த ஏகாதசி விரதத்தினால் ஒருவர் மக்கள் மத்தியில் பெரும் பேரும், புகழும் அடைவதோடு, அளவில்லா செல்வத்தையும் பெறுவர் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

இந்நாளின் மகிமையைப் பற்றி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவிற்கு அவருடைய வேண்டுதலின் பெயரில் எடுத்துரைக்கிறார். அதனை நாமும் காண்போம்.

ஒ யுதிஷ்டிரா ! அபரா ஏகாதசி விரதம் மக்கள் அனைவரும் அவசியம் கடைபிடிக்க வேண்டிய விரதம் ஆகும். இது மற்ற அனைத்து விரதங்களை விட ஸ்ரேஷ்டமானதும், உத்தமமானதும் ஆகும். இந்நாளில் அனைவரும் பக்தியுடன் பகவான் மகாவிஷ்ணுவை ஓங்கி உலகளந்த உத்தமனாகிய திரிவிக்ரமனாக வணங்க வேண்டும்.

இந்த ஏகாதசி விரதம் ஒருவர் செய்த பாவங்கள் அனைத்தையும் அழிப்பதோடு, அவருக்கு அளவில்லா செல்வத்தை வாரி வழங்குவதால் இது இப்பெயர் பெற்றது. மேலும் இவ்விரதத்தை நம்பிக்கையோடு கடைபிடிப்பவர்கள் மக்களிடத்தில் பெரும் பேரும், புகழும் பெறுவர்.

அதோடு இந்த அபரா ஏகாதசி விரத பிரபாவத்தால் பிரம்மஹத்தி, பிறரை நிந்திப்பது, போரில் புறமுதுகிடுதல், குரு நிந்தனை, பைசாச பிறவி, பொய் சாட்சி கூறுதல், ஸ்திரீ கமனம், போலி மருத்துவம் செய்தல், போலி ஜோதிடம் கூறுதல் போன்ற பாவங்களிலிருந்து விடுதலை அளிப்பதோடு அவர்களுக்கு சுவர்க்கப் ப்ராப்தியை அளிக்க வல்லது என்றார்.

3 புஷ்கரங்களில் நீராடுதல், கார்த்திகை மாத புனித நீராடல், கங்கையில் பிண்ட தானம் செய்தல், பத்ரிகாஸ்ரமத்தில் தங்குதல், இறைவன் கேதாரநாதரை தரிசித்து வணங்குதல் இவற்றால் கிடைக்கும் புண்ணியத்தினை இந்த அபரா ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக கடைபிடிப்பதால் ஒருவர் அடைய முடியும் என்று கூறினார்.

கிரகண காலத்தில் குருக்ஷேத்திரத்தில் புனித நீராடி, கஜ தானம், ஸ்வர்ண தானம் செய்தல், சினைப்பசுவினை ஸ்வர்ணம் மற்றும் பூமி தானத்தோடு செய்வதால் அடையும் புண்ணிய பலன்கள் அனைத்தும் இந்த அபரா ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக கடைபிடிப்பதால் ஒருவர் அடைய முடியும் என்று கூறினார்.

ஒ யுதிஷ்டிரா ! இந்த விரத மகாத்மியத்தை விளக்கும் கதையினை உனக்கு கூறுகிறேன் கவனமாகக் கேள், என்று கூறத் தொடங்கினார்.

முன்னொரு காலத்தில் மஹித்வஜன் என்னுமொரு அரசன் தன்னுடைய நகரை நல்ல முறையில் அரசாண்டு வந்தான். அவனுக்கு வஜ்ரத்வஜன் என்றொரு சகோதரன் இருந்தான். அவன் மிகவும் கொடூர குணம் கொண்டவனாகவும், நாத்திகனாகவும் விளங்கினான்.

ஒருநாள் வஜ்ரதவஜன், தனது சகோதரன் மீது பொறாமை கொண்டு, இரவில் அவன் தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அவனைக் கொன்று ஊரில் உள்ளதொரு அரசமரத்தின் அடியில் புதைத்து விட்டான். பின்னர் அவன் அரசாட்சியைக் கைப்பற்றினான்.

அபமிருத்யுவின் காரணமாக மஹித்வஜன், ஆவியாக அந்த மரத்தையே சுற்றி அலைந்தான். அந்த வழியாகப் போவோர், வருவோர் அனைவரையும் தொல்லை செய்து துன்புறுத்தினான்.

ஒருநாள் அவ்வழியே வந்த தௌமிய மகரிஷி, மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த மஹித்வஜனின் ஆன்மாவினைக் கண்டார். அவருடைய தவோபலத்தால் அவனுடைய பிரேத ஜன்மாவிற்கான காரணத்தினை அறிந்தார். அதன் பின்பு அவர் அந்த ஆன்மாவினை அழைத்து அதற்கு தகுந்த புத்திமதிகளைக் கூறி அதனை நல்வழிபடுத்தினார்.

அதனைக் கேட்டு மனம் திருந்திய அந்த ஆவி, இத்தகு கொடிய பிரேத ஜன்மாவிலிருந்து விடுதலை அடைய அவரிடம் மார்க்கம் வேண்டி நின்றது. அதனைக் கேட்ட தௌமிய மகரிஷி, அதற்கு அபரா ஏகாதசியின் விதிமுறைகள், மகாத்மியம் ஆகியவற்றை கூறி அதனை கடைபிடிக்கும் படி அறிவுறுத்தினார்.

அதன்படி, மஹித்வஜன் இவ்விரதத்தை கடைபிடித்து அவனுடைய பிரேத ஜென்மம் நீங்கி நன்னிலையை அடைந்தான் என்று பகவான் யுதிஷ்டிரனிடம் கூறினார்.

இந்த அபரா ஏகாதசி விரதமானது பாப விருட்சத்தினை வெட்டி வீழ்த்தும் கோடரியைப் போன்றதாகும். அஞ்ஞானம் மற்றும் பாவத்தினால் இருண்டிருக்கும் உலகத்தினில் ஒளி வீசும் சூரியனைப் போன்றதாகும் என்றார்.

எனவே ஓ யுதிஷ்டிரா ! தனது கர்மவினை பாவங்களைக் கண்டு அஞ்சுபவர் அனைவரும் இந்த விரதத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மேலும் இந்த விரதத்தை கடைபிடிக்காத ஒருவர், ஒரு மகா சமுத்திரத்தில் தோன்றும் பல நீர்குமிழிகள் போன்று ஜனன-மரண சக்கரத்தில் சிக்கி, மீண்டும் மீண்டும் இவ்வுலகில் பிறந்து கொண்டே இருப்பார்கள் என்றார்.

எனவே இந்த அபரா ஏகாதசி விரதத்தினை பக்தி சிரத்தையுடன் கடைபிடித்து இறைவன் திரிவிக்ரமனை வணங்கி வழிபடுவதால் பாவ வினைகள் அனைத்தும் அழிந்து, இறுதியில் வைகுந்தத்தை அடைவர் என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரரிடம் கூறி முடித்தார்.

எனவே நாம் அனைவரும் பெறுதற்கரிய இந்த மனித தேகத்தை இறைவனை வணங்கி வழிபட பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி இல்லையெனில் நம்முடைய வாழ்கை அர்த்தமற்ற ஒன்றாகி விடும்.

மேலும் எவரொருவர் இந்த நன்னாளில் இவ்விரத மஹாத்மியத்தை சொல்கிறாரோ / கேட்கிறாரோ /படிக்கிறாரோ அவரும் அவருடைய அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபட்டு புதுவாழ்வு பெறுவர் என்று பிரம்மாண்ட புராணம் குறிப்பிடுகிறது.

Sunday, May 03, 2020

மோஹினி ஏகாதசி/ Mohini Ekadashi

மோகினி ஏகாதசி
04.05.2020, திங்கட்கிழமை

சித்திரை-வைகாசி  மாதம் சுக்ல பட்சத்தில் வரும்  ஏகாதசி  திதியை மோகினி  ஏகாதசியாக கொண்டாடுவர்.  மோகினி ஏகாதசி விரத  மகிமையை நாம் இப்போது காண்போம்.சுயகட்டுப்பாடு மற்றும் சிரத்தையின் மகத்துவத்தை  விளக்கும் வரூதினீ  ஏகாதசி விரத கதையைக் கேட்ட தனுர்தாரி அர்ஜூனன் பரமாத்மா கிருஷ்ணரிடம்," ஹே கிருஷ்ணா!,சித்திரை –வைகாசி மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசியின்  பெயர், விரதம் அனுஷ்டிப்பதற்கான  விதிமுறை,இவற்றைப்  பற்றி விரிவாக  கூற வேண்டும்." என்று வேண்டினான்.
• ஸ்ரீ கிருஷ்ணர் பதிலளிக்கையில்," ஹே பாண்டு நந்தனா! , மகரிஷி  வசிஷ்டர் ஸ்ரீராமனுக்கு கூறிய  ஒரு புராதன கதையை  உனக்கு கூறுகிறேன். கவனத்துடன் கேள்." என்றார்.• ஒரு சமயம்  ஸ்ரீ ராமர் ,மகரிஷி வசிஷ்டரிடம்," குரு  தேவா!,ஜனகநந்தினி  ஸ்ரீ சீதையின் பிரிவால் நான் மிகுந்த துயரத்தை அனுபவிக்கிறேன். சொல்லவொண்ணா மனவேதனையில் ஆழ்த்தும் இத்துயரத்தை  நீக்குவது   எப்படி?  அனைத்து  பாபங்களையும், துக்கங்களையும்  அழித்து மகிழ்ச்சியையும், சுகத்தையும்அளிக்கக்கூடிய விரதம் ஏதாவது  உண்டென்றால், அதை அனுஷ்டிக்கும் விதிமுறையுடன் எனக்கு கூறி அருளுங்கள்."என்றார்.• மகரிஷி வசிஷ்டர்," ஸ்ரீ ராமா,மிக நல்லதொரு கேள்வி இது. நீ மேன்மை மற்றும் பவித்ரதன்மையுடன் கூடிய ஆழ்ந்த அறிவாற்றலை கொண்டவன்.உன் நாமத்தை  உச்சரித்த மாத்திரத்தில் மனிதர்கள் புண்ணியத்தைபெறுவர். இவ்வுலகத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய நல்லதொரு  கேள்வியை கேட்டுள்ளாய். உனக்கு  ஒரு ஏகாதசி விரதத்தின் மகத்துவத்தை கூறுகிறேன்.சித்திரை- வைகாசி மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதியை  மோகினி ஏகாதசி என அழைப்பர். இவ்ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் மனிதர்களின் சகல   பாபங்களும்,துக்கங்களும் அழிக்கப்படுகிறது. இதன் பிரபாவத்தால் மனிதர்கள் மோகம்  என்னும்  மாயையின்  பிடியிலிருந்தும்  விடுதலை  பெறுவர்.• ஸ்ரீ ராமா! துக்கத்தால் வாழ்க்கையில்  துன்பப்படும்  அனைவரும்  இவ்  மோகினிஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கவேண்டியது அவசியமானதும். இவ் விரதத்தை மேற் கொள்வதால்  ஒருவரது பாபங்கள் அனைத்தும்  நீங்கப்  பெறுகிறது. இவ் மோகினி ஏகாதசி விரத  மஹாத்மிய கதையை கூறுகிறேன்.கவனத்துடன் கேள்.•சரஸ்வதி நதியின்  கரையில் பத்ராவதி என்னும்  பெயர் கொண்ட நகரம்  அமைந்திருந்தது. அந்நகரைத்  யூதிமான் என்னும்  பெயர் கொண்ட  அரசன் ஆட்சி புரிந்துவந்தான். அந்நகரில்  வற்றாத தனம், தான்ய சம்பத்துக்களுடன் தனபால்  என்னும் பெயர்கொண்ட ஒரு வியாபாரி வசித்து வந்தான். பகவான் மஹாவிஷ்ணுவின் பக்தனாக அவன் மிகுந்த தர்மசிந்தனையுடன்  நகரில் ஆங்காங்கே அன்னதான உணவகங்கள், குடிநீர்  பந்தல்,குளம், குட்டை,  தர்மசத்திரங்கள் ஆகியவற்றை அமைத்திருந்தான்.   பாத யாத்ரிகர்களின் நன்மைக்காக சாலையின் ருமருங்கிலும் மாமரம், நாவல்கனி  மரம், வேப்பமரம் ஆகியவற்றை நட்டு பராமரித்து வந்தான்.• வியாபாரிக்கு ஐந்து புதல்வர்கள் இருந்தனர்.அவர்களில் மூத்தவன் கொடிய பாப வினைகளை புரியும்பாபியாகவும், துஷ்டனாகவும் இருந்தான். அவன்துஷ்டர்களுடனும்,வேசிகளுடனும் நட்பு கொண்டு நேரத்தை வீணாக  கழித்து வந்தான். இவை தவிர கிட்டிய மீதி நேரம் அனைத்தையும் சூதாட்டத்தில் செல வழித்தான். அவன் நீசனாகவும், தெய்வம்,பித்ருக்கள்  என எவற்றின் மீதும் நம்பிக்கை இல்லாமல் வீணாக தந்தை ஈட்டும் செல்வத்தை இம்மாதிரியான  கெட்ட காரியங்களில் செலவழித்துக் கொண்டிருந்தான். மதுபானம்,புலால்  உண்பது அவனுடைய  தினசரி வாடிக்கையாக இருந்தது. அநேக முறைஅறிவுரை கூறியும் திருந்தாமல் தான் செய்வதையே  செய்துகொண்டிருந்தான். அவனது செய்கையால் துக்கத்தில் வாடிய வியாபாரி தனபால்,  அவனது சகோதரர்கள், குடும்பத்தினர் அனைவரும் அவனை  கடும்சொற்களால் நிந்தனை செய்து,வீட்டை விட்டு வெளியேற்றினர். வீட்டிலிருந்து வெளியேறியவுடன், அணிந்திருந்த விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்களை விற்று கிடைக்கும் பணத்தில் நாட்களை கடத்தி வந்தான். பணம் கரைந்துபோனதும் அதுவரை அவனுடன் இருந்த துஷ்ட நண்பர்களும்,வேசிகளும் அவனை விட்டு விலகிப் போயினர்.• பசியும், தாகமும் வருத்தி எடுக்க வேதனை  தாளாமல் திருடுவது  என்னும் முடிவுக்கு வந்தான். இரவு நேரங்களில் திருட்டு தொழிலில் ஈடுபட்டு அதன் மூலம்  கிட்டிய வருமானத்தால் வாழ்க்கையை  நடத்தி வந்தான். ஒரு  நாள் அவன் திருடும் வேளையில், நகர காவலரிடம் கையும்,  களவுமாக பிடிபட்டான். ஆனால் வியாபாரியின் மகன்  என்று அறிந்ததும்,  அவனை தண்டியாமல் திருந்தி வாழுமாறு அறிவுரை கூறி விட்டு விட்டனர். ஆனால் சில நாட்களில் இரண்டாவது  முறையாக மீண்டும் அகப்பட்ட போது, அவன்பேச்சை  கேளாமல், அவனை இழுத்து சென்று அரசனின் முன் நிறுத்தி, நடந்த அனைத்தையும் எடுத்துரைத்தனர்.  அரசன் அவனை சிறையில்  அடைக்க உத்தரவிட்டான். சிறையில் அவன் தண்டனையாக சித்திரவதையை    அனுபவித்தான். பிறகு அவனை அந்நகரை  விட்டும் வெளியேற்றினர். மிகுந்த மன வருத்தத்துடன் நகரை விட்டு வெளியேறி காட்டில்  வசிக்கத் தொடங்கினான். அங்கு வாழும் பிராணிகளைக்  கொன்று தன் பசியை தணித்துக் கொண்டான். நாளடைவில் பிராணிகளை வேட்டையாடும் ஒரு  வேடுவனாக மாறி விட்டான்.  வில் அம்புகளைக் கொண்டு காட்டில் வாழும் பிராணிகளை  தன் பசிக்காக மட்டும்  அல்லாமல் விற்பதற்காகவும் கொல்லத் தொடங்கினான். ஒரு நாள் வேட்டையில்  ஏதும் சிக்காமல் போக, வேட்டையாடிய களைப்பில் பசியும்,  தாகமும் வருத்தி எடுக்க,  உணவைத் தேடிஅலைந்து அங்கும் இங்கும் அலைந்து கடைசியில் கௌடின்ய  முனிவரின் ஆசிரமத்தை அடைந்தான். .கௌடின்ய  முனிவர் கங்கையில் நீராடி விட்டு வந்து கொண்டிருந்தார். அவரின் நனைந்த வஸ்திரத்தின் நுனியிலிருந்து  விழுந்த  நீர்துளிகள் அவன் மீது பட்டமாத்திரத்தில், பாபியான அவனுக்கு  நற் சிந்தனையும், நல்லெண்ணமும் உருவாகியது. அவன்  முனிவரின் அருகில் சென்று  இருகரம்  கூப்பி கண்ணில் நீர் மல்க "முனிசிரேஷ்டரே!, நான்  என் வாழ்க்கையில் மன்னிக்கமுடியாத அளவு பாபம் புரிந்துள்ளேன்.
என் பாப வினைகளிலிருந்து  நான்முக்தி பெறுவதற்கு ஏதாவது எளிதான, செலவில்லாமல் கடைப்பிடிக்கக் கூடிய  ஒருவழியை கூறி  அருள வேண்டும்."என்றான்.முனிவர் அதற்கு," நான்சொல்வதை கவனத்துடன் கேள்.• சித்திரை- வைகாசி மாதம்  சுக்லபட்சத்தில் வரும்  ஏகாதசி,மோகினி  ஏகாதசி  என்று அழைக்கப்படுகிறது.  அவ் மோகினி ஏகாதசி  விரதத்தை விதிப்பூர்வமாக கடைப்பிடித்தால் உன் பாபங்கள் எல்லாம் நீங்கி,புது வாழ்வு பெறுவாய் என்றுஅருளினார். முனிவரின் வார்த்தையைக் கேட்டு அவன் மிகுந்த சந்தோஷமடைந்தான்.முனிவர் கூறிய  ஏகாதசி விதிப்படி அவ் மோகினி ஏகாதசி விரதத்தை  கடைப்பிடித்தான்.• ஸ்ரீ ராமா, அவ் மோகினி ஏகாதசி விரதத்தின் பிரபாவத்தால் அவனதுஅனைத்து பாபவினைகளும் அகன்று நல்வாழ்க்கைபெற்றான்.இறுதியில் விரதத்தின்புண்ணிய பலனால்,கருடவாகனத்தில்  விஷ்ணுலோகத்தை  அடையும் பிராப்தியும்  பெற்றான். இவ் விரதத்தினால் மோகம்  என்னும் மாயை  அகன்று, மனிதர் முக்தியை பெறுகிறார்.இவ்வுலகில் இவ்விரதத்திற்கு இணையான விரதம் வேறெதுவும் இல்லை. இவ்விரதமஹாத்மிய  கதையை  கேட்பவரும்,  படிப்பவரும்,ஒராயிரம்  பசு தானம் செய்த  புண்ணியத்திற்கு  இணையான புண்ணியத்தை பெறுவர். மனிதர்கள் எப்போதும் நற் சிந்தனையுள்ள  சான்றோர்,சாதுக்கள் ஆகியோரிடம்  நட்பு கொண்டிருந்தல் வேண்டும்.நற்சிந்தனையுள்ளவர்களின் நட்பு மனிதர்களுக்கு நல்அறிவை மட்டுமல்லாது வாழ்க்கை  லட்சியத்தையும் அடைவதற்கும் உதவும். கெட்டசகவாசம்,  அதனால் விளையும் பாபவினைகள்  ஒருவரை நரகத்திற்கு மட்டுமே  இழுத்துச்செல்லும். அத்தகைய நட்பு துன்பம்  வரும் காலங்களில் கைவிட்டு விலகி விடுவதால்,அனாதையாக  தவிக்க நேரிடுகிறது.  அப்போதும் கௌடின்ய ரிஷி  போன்ற சாது,சான்றோர்கள்  ஒருவரை கைவிடாமல்  நன்மார்க்கத்தைக் கூறி  அருளுவர்.

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே

On 05.05.2020, செவ்வாய்க்கிழமை Parana  Time = 05:46 to 09.59. Hrs  . Chennai.

*Shree Krishnarpanamastu*

Wednesday, February 12, 2020

விஜய ஏகாதசி/vijaya ekadashi

விஜய ஏகாதசி,
🌷🌷🌷🌷🌷🌷🌷

நாள்: 19.02.2020- புதன்கிழமை
 மாசி  மாதம் - கிருஷ்ணபட்சம்
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

   மாசிமாதம் - கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி திதியை விஜய ஏகாதசியாக ‌கொண்டாடுவர். விஜய ஏகாதசி விரத மகிமையை நாம் காண்போம்.ஏகாதசிவிரத மஹாத்மிய கதைகள் அர்ஜூனனின் மனதிற்கு அளவில்லாத ஆனந்தம் அளித்தாலும், திருப்தி அடையாமல், ஜெயா ஏகாதசி விரத மஹிமையை கேட்டு முடித்தவுடன், ஸ்ரீகிருஷ்ணரிடம், " ஹே மதுசூதனா! தாங்கள் கிருபை புரிந்து, பால்குண மாசி  மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசியின் பெயர், விரதம் அனுஷ்டிக்கும் விதி, இவற்றைப்பற்றி விஸ்தாரமாக கூற வேண்டுகிறேன்." என்றான்.

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், "ஹே பார்த்தா! மாசி மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் ஏகாதசி, விஜய ஏகாதசி என்னும் பெயரால்அழைக்கப்படுகிறது. இவ் விரதம் அனுஷ்டிப்பதால் கிட்டும் புண்ணிய பிரபாவத்தால் அனைத்திலும் வெற்றி கிட்டுகிறது. மிகவும் மேன்மை வாய்ந்த இவ்விரத மஹாத்மியகதையைக் கேட்பதாலும், படிப்பதாலும் அனைத்து பாபங்களும் அழியப் பெறுகின்றன.

ஒரு சமயம் தேவரிஷி நாரதர், ஜகத்தைப் படைப்பவரான தன் தந்தை பிரம்ம தேவரிடம், "தந்தையே ! தாங்கள் எனக்கு மாசி-பங்குனி மாதம், கிருஷ்ண பட்சத்தில் வரும் விஜயா ஏகாதசியின் விரத விதானத்தை கூறி அருள வேண்டும்." என்றார். பிரம்மதேவர் பதிலளிக்கையில், "மகனே நாரதா!, விஜயா ஏகாதசி விரதமானது முற்பிறவி மற்றும் இப்பிறவி இரண்டின் பாபத்தையும் அழிக்க வல்லது. இவ்விரதம் அனுஷ்டிக்கும் விதியை இதுவரை நான் யாருக்கும்சொன்னதில்லை. நீ கேட்ட கேள்வியின் பதில், இவ்வுலக ஜீவராசிகள் அனைத்திற்கும் பயன் அளிக்கும் என்பதால் கூறுகிறேன். இவ்விரதத்தின் பலனானது, அனுஷ்டிப்பவர் அனைவருக்கும் அனைத்திலும் வெற்றியை அளிக்கக்கூடியது. ஆகையால் நான் விவரித்து கூறப் போகும் இவ்விரத மஹாத்மியத்தை கவனத்துடன் கேள்."என்றார்.

திரேதாயுகத்தில், புருஷோத்தமனான ஸ்ரீ இராமச்சந்திரமூர்த்தி, தனது பதினான்கு வருட வனவாசத்தின் போது பஞ்சவடியில், மனைவி சீதா மற்றும் தமையன்லக்ஷ்மணனுடன் வசித்து வந்தார். அக்கால கட்டத்தில், மஹா பாபியான இலங்கை வேந்தன் இராவணன், அன்னை சீதா தேவியை அபகரித்துச் சென்றான். சீதையின் நிலையை அறியாது, இழந்த சோகத்தால் துக்கம் பீடிக்க, கவலையுடன் அன்னையை தேடி அலைந்தனர். வனத்தில் அங்குமிங்கும் அலைந்து திரிந்து, கடைசியில் மரண வேதனையில் துடித்துக் கொண்டிருந்த ஜடாயுவை கண்டு, அவரருகில் சென்றனர்.

 ஜடாயு, அன்னை சீதையை இராவணன் கவர்ந்து சென்ற விபரத்தை பகவான் ஸ்ரீராமனிடம் கூறி விட்டு, அண்ணலின் மடியில் தனது உயிரை நீத்து, ஸ்வர்க்கலோகம் அடைந்தார். சீதை இருக்கும் இடம் அறிந்து, ஸ்ரீராமரும் லக்ஷ்மணனும், அன்னையைத் தேடும் பயணத்தைத் தொடர்ந்தனர். சிறிது தூரம் சென்றதும், சுக்ரீவன் இருப்பிடத்தை அடைந்தனர். ராமபக்த ஹனுமான் முலம் சுக்ரீவனுடன் தோழமை  பூண்டு,  வானர ராஜன் வாலியை வதம் செய்தார் ஸ்ரீராமர். ஸ்ரீஹனுமான், கடலைக் கடந்து, லங்கா நகருக்குச் சென்று, அன்னை சீதையைக் கண்டு அண்ணல் ஸ்ரீ ராமர், சுக்ரீவன் இருவரின் தோழமைப் பற்றி விவரித்து உரைத்தார். லங்கையிலிருந்து திரும்பி வந்து ஸ்ரீராமச்சந்திரமூர்த்தியிடம் அசோகவனத்தில் அன்னை சீதையின் நிலையைப் பற்றி விவரமாக கூறினார்.

 அன்னையின் நிலைஅறிந்ததுடம், அன்னையை மீட்பதற்காக, வானர ராஜன் சுக்ரீவனின் அனுமதியுடன் வானரர் மற்றும் கரடிகளின் சேனையுடன் இலங்கையை நோக்கி புறப்பட்டனர் ஸ்ரீராமலக்ஷ்மணர்கள்.  பயணம் இறுதியில் தென் கோடி சமுத்திரத்தின் கரையில் வந்து நின்றது. முதலை, மீன் ஆகிய ஜீவராசிகள் அடங்கிய பரந்து விரிந்த சமுத்திரத்தைப் பார்த்த ஸ்ரீராமர், லக்ஷ்மணனிடம், " ஹே லக்ஷ்மணா, அனேக நீர் வாழ் ஜீவராசிகள் அடங்கிய பிரம்மாண்டமான இச்சமுத்திரத்தை எங்ங‌னம் கடப்பது?" என்று வியந்து நின்றார்.

அதற்கு லக்ஷ்மணன்," மதிப்பிற்குரிய சகோதரா! தாங்களே புருஷோத்தமனான ஆதிபுருஷன் ஆவீர். தாங்கள் அனைத்தும் அறிவீர். இங்கிருந்து அரை யோஜ‌னை தூரத்தில் குமாரி தீபம் என்னும்  இடத்தில் வக்தால்ப்ய ரிஷியின் ஆசிரமம் இருக்கிறது. அவர் அனேக பிரம்ம ஜனனங்களை கண்டவர். தாங்கள் அவரிடத்தில் சென்று நம் வெற்றிக்கான உபாயத்தை  கேட்பது உசிதம்." என்றான்.லக்ஷ்மணனின் வார்த்தைகளைக் கேட்ட ஸ்ரீ ராமர் அதன்படி வக்தால்ப்ய ரிஷியின் ஆசிரமத்திற்குச் சென்று முனிவரைக் கண்டு தனது பணிவானவணக்கத்தைச் சமர்ப்பித்து அவர் முன் அமர்ந்தார். மனிதனாக‌ அவதாரம் எடுத்துள்ள புருஷோத்தமனான ஸ்ரீ ராமரை அறிந்து கொண்ட வக்தால்ப்ய முனிவர், ஸ்ரீ ராமரிடம்," ஹே   ஸ்ரீ ராம்!, எக்காரியத்திற்காக இங்கு  நீ எழுந்தருளியுள்ளாய்." என்று வினவினார்.

அதற்கு ஸ்ரீராமர்," ஹே மஹரிஷி!, நான் என்னுடைய படைகளுடன் சமுத்திரத்தின் கரையில்  முகாமிட்டுள்ளேன். என் மனைவி சீதையை இலங்கை வேந்தனான இராவணன் கவர்ந்து சென்று அசோகவனத்தில் சிறை வைத்துள்ளான். ஆகவே என் மனைவி சீதையை  மீட்பதற்காகவும், அரக்கர்களை யுத்தத்தில் வெல்லவும் பிரம்மாண்டமான இச் சமுத்திரத்தைக் கடந்து இலங்கை செல்ல வேண்டியது மிகவும் அவசியம். இதற்கான உபாயத்தைவேண்டி தங்களிடம் வந்துள்ளேன். தாங்கள் தயவு கூர்ந்து பிரம்மாண்டமான இச்சமுத்திரத்தைக் கடப்பதற்கான உபாயத்தைக் கூறி அருள வேண்டும்." என்றார்.

வக்தால்ப்ய ரிஷிஸ்ரீ ராமரிடம்," ஹே ராமா!, தங்களுக்கு மேலான ஒரு விரதத்தைப் பற்றி கூறுகிறேன். கேளுங்கள். இதை அனுஷ்டிப்பதால் தங்களுக்கு வெற்றி மீது வெற்றி வந்து சேரும்."என்றார்.இதைக் கேட்டு உற்சாகமடைந்த ஸ்ரீ ராமர் " முனிவரே, அப்படி ஒரு மகத்தான விரதம் எது? அதன் பெயர் என்ன? அதை அனுஷ்டிப்பதால் எடுத்த காரியம் யாவிலும் வெற்றிகிட்டுமா?" என்று வினவினார். முனிவரின் ஆக்ஞைப்படி, ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி தனது படைகளுடன் விதிப்பூர்வமாக விஜயா ஏகாதசி விரதத்தை மேற்கொண்டார். இவ்விரதத்தின்பலனால் அவருக்கு அரக்கர்களுடனான யுத்தத்தில் வெற்றி கிட்டியது. இவ்வாறு கூறிய பிரம்ம தேவர், நாரதரிடம், " மகனே, இவ்விரத நாளன்று, எவர் ஒருவர் இவ்விரத  மஹாத்மியத்தை கேட்கிறாரோ அல்லது படிக்கிறாரோ, அவருக்கு வாஜ்பேய யக்ஞம் செய்த பலன் கிட்டுகிறது" என்றார்.இதைக் கூறிய ஸ்ரீகிருஷ்ணர், 'ஹே ராஜன்!, எவர் ஒருவர்இவ்விரதத்தை விதி பூர்வமாக அனுஷ்டிக்கிறாரோ, அவருக்கு இவ்வுலகில் மட்டுமல்லாது மேலுலகிலும் வெற்றி நிச்சயம்' என்று அருளினார்.

 குறிப்பாக: பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் நாமத்தை சொல்வது அதிலும் குறிப்பாக கலியுக தாரகமந்திரமான
ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே
ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே
என்ற மந்திரத்தை 108 முறை (ஒரு சுற்று) சொல்ல வேண்டும். இதுபோல குறைந்தபட்சம் 25 சுற்றுகள் தொடர்ந்து உச்சரிக்க வேண்டும். மற்றும் பகவத்கீதை, ஸ்ரீமத்பாகவதம் போன்ற பகவான் சம்பந்தமான புத்தகங்களை படிக்கவும். ஏகாதசி அன்று சினிமா பார்ப்பது, பரமபதம் ஆடுவது, வீண் பேச்சு பேசி காலவிரயம் செய்யகூடாது

 விரதம் முடிக்கும் நாள்:20.02.2020
நேரம்: 06:30 to 10:25

Sunday, January 19, 2020

ஷட் தில ஏகாதசி/ shat thila ekadashi

ஷட் தில ஏகாதசி.....!!!
(21.01.2020)

இதில் ஷட் என்பது 6 என்றும் திலம் என்பது எள் என்றும் பொருள்படும். இப்படி 6 வகையான எள் பயன்பாடு ஷட்திலா என்று அழைக்கப்படுகிறது.

அன்னதானம் செய்யாத ஒரு பெண் எள் மட்டும் கொடுத்து சுவர்க்கம் புகுந்த கதை இந்த ஏகாதசிக்கு அடிப்படையாக அமைந்தது. அவரைச் சோதிக்க விஷ்ணு, ஒரு பிச்சைக்காரர் வேஷத்தில் வந்தார் என்றும் அப்போது அவர் மண் உருண்டை ஒன்றை மட்டுமே கலயத்தில் போட்டார் என்றும் கதை. அவர் சொர்க்கம் புகுந்தபோதும் தானம் என்ற ஒன்றைச் செய்யாததால் பூமிக்கு அனுப்பப்பட்டார். அவர் வறட்டி தட்டியதில் எள்ளும் கலந்ததாகவும் அது ஹோமத்தில் பயன்படுத்தப்பட்ட போது அந்தப் புண்ணியமே அவரைக் காப்பாற்றியது என்றும் கூறுவர்.

இந்த நாளில் விரதம் மேற்கொள்வோர் எள்ளை ஆறு விதமாகப் பயன்படுத்துவார்கள்.

1. எள்ளை அரைத்து உடலில் பூசிக்கொண்டு நீராடுவது.

2. எள் தானம் செய்வது.

3. எள்ளால் ஹோமம் செய்வது.

4. எள்ளுடன் நீரும் சேர்த்து தானம் செய்வது.

5. எள் அன்னம் உண்பது.

6. எள் தானம் பெறுவது.

இப்படி 6 வகையான எள் பயன்பாடு ஷட்திலா என்று அழைக்கப்படுகிறது. இதனால் அநேகப் பாவங்கள் விலகுகின்றன என்றும் எள்தானம் செய்த அளவிற்கேற்ப அத்தனை ஆயிரம் வருடகாலம் சுவர்க்கத்தில் வசிக்கும் பேறு பெறுவர். முன்னொரு காலத்தில் பூலோகத்தில் பல தர்மங்கள் செய்த பெண்ணொருத்தி இறந்தபின் சொர்க்கம் சென்றாள்.

சொர்க்கத்தின் எல்லா வசதிகளும் அவளுக்குக் கிடைத்தாலும் உணவு மட்டும் கிடைக்கவில்லை. ஏனெனில் பூவுலகில் இருக்கும்போது அவள் அன்னதானம் செய்யவில்லை. ஒருவன் அன்னதானம் செய்யாமல் அவனால் தேவலோகத்தில் ஜீவிப்பது கூட கடினம். எனவே அவளது இக்குறையைத் தீர்க்க எண்ணி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரே பிச்சைக்காரன் வடிவில் சென்று அவளிடம் அன்னபிக்ஷை வேண்டினார். அதைக் கேட்டவள் ஆத்திரத்தில் மணலால் ஆனதொரு பிண்டத்தை அவருக்கு தானமளித்தாள். அதனை எடுத்துக் கொண்டு அவரும் வந்துவிட்டார்.

அதனைக்கொண்டு சுவர்க்கத்தில் ஒரு அழகான வீட்டை ஸ்ரீ கிருஷ்ணர் அமைத்தார். மணலால் ஆன பிண்டத்தை தானம் அளித்த பலனால் அவள் வாழ்வு முடிந்து சுவர்க்கம் வந்தபோது மாமரத்துடன் கூடிய வீடு இருந்தது. ஆனால் வீட்டினுள் தனம், தானியம், இருக்கைகள் ஏதுமின்றி அவள் அளித்த மண்ணைப் போலவே இருந்தது. அதனைக் கண்டவள் மிகவும் பயத்துடனும், கோபத்துடனும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் வந்து பூவுலகில் இத்தனை விரதங்கள் கடைப்பிடித்து வந்தேன். ஆனால் எனது வீட்டில் ஏதும் இல்லாததற்கான காரணம் என்ன இறைவா? என்றாள்.

அவளிடம் ஸ்ரீ கிருஷ்ணர் அதற்கான காரணத்தைக் கூறிய போது, அதிலிருந்து மீள வழி என்ன என்று கேட்டாள். அப்போது அவளிடம், இப்போது உன் இல்லத்திற்கு உன்னைக் காண தேவஸ்த்ரீகள் வருவர். அவர்கள் வரும் வேளையில் கதவை அடைத்து, அவர்களிடம் இந்த ஷட்திலா ஏகாதசி மகாத்மியத்தைக் கேள். அவர்கள் கூறும் வரை கதவைத் திறக்காதே என்றார். அவளும் அப்படியே செய்தாள். அதனைக் கேட்ட அனைத்துப் பெண்களும் சென்றுவிட்டனர். சற்று நேரத்தில் அவளைக் காணும் ஆவலில் திரும்பி வந்த தேவஸ்த்ரீகள், அவளிடம் ஷட்திலா ஏகாதசியின் மகாத்மியத்தைக் கூறினர். பிறகு அதனைக் கேட்டு, கதவைத் திறந்தாள். அந்த வீட்டில் இருப்பது ஒரு கந்தர்வியோ, நாகரோ, இல்லாமல் ஒரு மானுடப்பெண் நிற்பது கண்டு வியந்து சென்றனர்.

அதன் பின்னர், அந்த பிராமணஸ்திரீ ஷட்திலா ஏகாதசி விரதத்தை நியமம் தவறாது கடைப்பிடித்தாள். அதன் பலனாக அவளது உடல் தேவஸ்த்ரீகளைப் போன்று ஜொலித்தது. அவளது இல்லம் முழுவதும் தனம், தானியங்களால் நிரம்பி வழிந்தது. அவளது வீடு ஸ்வர்ணமயமான மாளிகையாக மாறி பேரொளியோடு மின்னியது. எனவே, பகட்டுக்காக இல்லாமல் பக்தியுடன் ஒருவர் இந்த ஏகாதசி விரதத்தைக் கடைப்பிடித்தால் இறுதியில் சுவர்க்கமும், எல்லாப் பிறவிகளிலும் ஆரோக்கியமும், இறுதியில் முக்தியும் கிடைக்கும்.

எவரொருவர் இந்த விரதத்தை கடைப்பிடிக்கிறாரோ, அவர் அவருடைய பாவங்களிலிருந்து விடுபடுகிறார். மேலும் இந்த விரதத்தினால் அவரை எந்தவொரு தீய சக்தியும், தீய சகுனங்களும் பின்தொடராது என்றும் அவரது இல்லத்தில் வறுமை என்ற பேச்சுக்கே இடமின்றி தனம், தானியங்களால் நிரம்பி வழியும். அது மட்டுமின்றி, இந்த விரதத்தினை தான, தர்மங்களோடு கடைப்பிடிப்பவருக்கு என்றும் உணவுப் பஞ்சமே வராது என்றும் அவர்கள் பல பிறவிகளிலும் நித்ய ஆரோக்கியத்துடன் விளங்குவதோடு இறுதியில் அவர்கள் முக்தி அடைவர் என்று புலஸ்திய முனிவர் தாலப்ய முனிவருக்குக் கூறியதாக பவிஷ்யோத்ர புராணம் குறிப்பிடுகிறது.

Friday, December 06, 2019

கைசிக ஏகாதசி/ kaisika ekadashi

🌻🌹கைசிக ஏகாதசி மஹாத்மியம்🌹🌻

கார்த்திகை மாதம் "சுக்லபக்ஷ ஏகாதசி" மற்றும்  "துவாதசி" அன்று இந்த கைசிக மஹாத்மியத்தை படிப்போர்க்கு சுவர்க்கம் நிச்சயம்.

அப்பேர்ப்பட்ட மகத்துவமான "கைசிக ஏகாதசி" வரும் 08/12/2019 அன்று வருகிறது.

🌾🌾 இரண்டு ஏகாதசியின் சிறப்பு :-

மாதம் தோறும் இருமுறை ஏகாதசி வந்தாலும், இரண்டு ஏகாதசிகளுக்கு மிக்க ஏற்றம். ஒன்று மார்கழி சுக்லபக்ஷ ஏகாதசியான "வைகுண்ட ஏகாதசி".

மற்றது கார்த்திகை மாதம் சுக்லபக்ஷ ஏகாதசியான "கைசிக ஏகாதசி".  மேலும், கைசிக ஏகாதசி விரதம் இருந்தால், ஓராண்டில் எல்லா ஏகாதசி விரதங்களும் இருந்த பலன் என்றும் சொல்வர்.

🌹🌹 கைசிக ஏகாதசி மஹாத்மியம் :-

கைசிக ஏகாதசி பற்றி வராக புராணத்தில் "ஸ்ரீ வராக மூர்த்தியே" கூறுவதாக உள்ளது. இதற்கு "ஸ்ரீ பராசர பட்டர் வியாக்யானம்" அருளியுள்ளார்.

ஒரு முறை பூமியானது பிரளய ஜலத்தில் மூழ்கி விட, பகவான் வராக உருவம் கொண்டு, பூமிப்பிராட்டியைக் காத்து, அவள் ஆயாசம் தீர தன் மடியில் அமர்த்தினார்.

மகிழ்ந்த பூமித்தாய், இவ்வுலக மக்களின் துயர் தீர, பகவானிடம் ஓர் உபாயம் வேண்டினார். பகவானும் தன் பக்தர்கள் தன் மீது வைத்திருக்கும் பக்தியே உபாயம் எனக் காட்ட, இந்த "கைசிக புராணத்தை பூமித் தாயாருக்கு" உரைத்தார்.

🌾🌾 பகவான் கூறியது :-

தென் பாரத தேசத்தில், மகேந்திர பர்வதத்தைக் கொண்ட திவ்யதேசம் "திருக்குறுங்குடி". இங்கு தாழ்த்தப்பட்ட குலத்தில் பிறந்த ஒருவன், பூர்வ ஜென்ம பலத்தால் "திருக்குறுங்குடி நம்பியான அழகிய நம்பி" மீது அளவில்லா பக்தியுடன் இருந்தான்.   பத்து ஆண்டுகள், ஒவ்வொரு இரவும் கையில் வீணையுடன், மலை ஏறி, பிரம்ம முகூர்த்தத்தில், பகவான் அழகிய நம்பியை "திருப்பள்ளியெழுச்சி" செய்து வந்தான்.   இந்த புண்ணியவானே "நம்பாடுவான்".

நம் பாடுவான் என்பவன் நல்ல கவிதிறன் கொண்டவன். திருகுறுங்குடி நம்பி பெருமாளை பற்றியே பாடுவான். நம்பி பெருமாளை பாடுவதையே மூச்சாக கொண்டவன். அவன் தாழ்த்த பட்ட குலத்தில் பிறந்ததால் அன்றைய காலக்கட்டத்தில் அவனுக்கு கோயிலுக்கு செல்ல அனுமதியில்லாமல் இருந்தது. ஆனால், அவனுக்கு அதைப் பற்றி துளியும் வருத்தமில்லை. கோயிலின் வாசலில் நின்று அன்றாடம் பெருமாளை போற்றி பாடுவான். வாசல் வரை வந்து நிற்பதற்கு மட்டுமே நம்பாடுவானுக்கு அனுமதி உண்டு.

🌾🐚🌷 கைசிகப்பண் :-

கோயிலின் வாசலிலிருந்து பகவானைப் பார்க்க முடிய வில்லை. கொடிமரமும் தடுக்கிறது. என்னால் பெருமாளை பார்க்கமுடியவில்லை என்றாலும், அழகிய நம்பியான பெருமாள் என்னைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார். என் பாடல்களை எல்லாம் அவர் கேட்டுகொண்டிருக்கிறார், அதுவே போதும்!!! அதிலே எனக்குப் பரமதிருப்தி! என்ற திருப்தியுடன் வாழ்க்கையை நடத்திவந்தான் நம்பாடுவான்.

"கைசிகம்" என்ற பண்ணில் நம்பியின் புகழைப் பாடி மகிழ்வான்.
நம்பாடுவான் தினமும் விடியற் காலையில் ஸ்நானம் செய்து பிரம்ம முஹுர்த்தத்தில் கோயிலின் வாயிலுக்குச் சென்று பெருமாள் பேரில் பண் இசைத்து அவரது பெருமைகளைப் பாடுவான்.

இவனது பெருமையையும் பிரதிபலன் கருதாத பக்தியையும் "ஸ்ரீ வராஹ பெருமான் பூமிபிராட்டியாரிடம் ஸ்லாகித்து சொல்கிறார் என்றால் அந்த நம் பாடுவான்" எப்பேர்பட்ட பக்தனாக இருந்திருப்பான்.

இந்த மஹாத்மியம் "கைசிக புராணம்" என்ற நாமம் தாங்கி வாராஹ புராணத்தில் உள்ளது.

🌺🌺 பிரம்மராட்சசன் வழிமறித்தல் :-

ஒரு கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ ஏகாதசி துவாதசி இரவில், ஒரு யாமத்திற்கு மேல் வீணையும், கையுமாய் எம்பெருமானைத் துயிலெழுப்ப மலையேறினான்.

அந்த இரவு நேரத்தில் நடு வழியில், பூர்வத்தில் "சோமசர்மா" என்பவன் அந்தணணாய் இருந்து, யாகம் ஒன்றில் செய்த பெரும் பிழையால் பிரம்மராக்ஷஸனாய் திரிந்தான்.

அந்த பிரம்மராக்ஷஸன் நம்பாடுவானை வழி மறித்து அவனை பிடித்துக் கொள்கிறான். தான் பத்து தினங்கள் பட்டினியாய் அலைவதாயும், அவனே தனக்கு தெய்வம் தந்த உணவு என்றான் நம்பாடுவானிடம்.

பிரம்மராக்ஷஸன் தேகமோ கொழுத்து பெருத்த தேகம். நம்பாடுவானோ மிகவும் இளைத்து மெலிந்த தேகம் உடையவன். அதனால் பிரம்மராக்ஷஸன் பிடியிலிருந்து தப்ப இயலாதவனாக இருந்தான். ஆனால், பயப்படவில்லை.

பிரம்மராக்ஷஸனை பார்த்து, "நான் ஏகாதசி விரதமிருந்து நம்பெருமாளை பிரம்ம முகூர்த்தத்தில் துயில் எழுப்பித், துதிக்க சென்று கொண்டிருக்கிறேன் என்னை விட்டு விடு என் விரதத்திற்கு பங்கம் செய்து விடாதே என்று கெஞ்சினான்.

ஆனால், பிரம்மராக்ஷஸன் நம்பாடுவானை நோக்கி நான் பத்து நாட்களாக கொலை பட்டினியாக இருக்கிறேன். ஆகவே ,எனக்கு இப்போது தெய்வாதீனமாக கிடைத்த உன்னை நான் விடுவதாக இல்லை. உன்னை கண்டிப்பாக புசிக்கப் போகிறேன் என்று கூறியது.

🌻🌻 கடும் வாக்குவாதம் :-

நம்பாடுவானோ தான் இறைவனை திருப்பள்ளியெழுச்சி செல்ல மலையேற வழிவிடுமாறு மன்றாடினான்.  பிரம்மராக்ஷஸனோ காது கொடுத்து கேட்கவே இல்லை.  எவ்வளவு சொல்லியும் கேட்காத பிரம்மராக்ஷஸனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டான் நம்பாடுவான். 

இதற்கு மேல் என்ன சொன்னாலும், பிரம்மராக்ஷஸன் கேட்கப் போவது இல்லை என்று உண்மைச் சூழ்நிலையான தனது நிலையை உணர்ந்தான். ஆம் தன்னை மரணம் சூழ இருப்பதை புரிந்துக் கொண்டான் நம்பாடுவான்.

உடனே, பிரம்மராக்ஷஸனைப் பார்த்து நடக்க இருப்பதை தவிர்க்க முடியாது. நான் உனக்கு உணவாகப் போவதை பற்றி எனக்கு கவலை இல்லை. ஆனால் எனது இந்த அற்புதமான விரதத்தை அதாவது கோயிலின் வாசலில் வீணையை மீட்டி எனது நம்பி பெருமாளை பண்ணிசைத்து "திருப்பள்ளியெழுச்சி" பாடி எனது விரதத்தை முடித்து விட்டு வருகிறேன் பிறகு நீ உன் இஷ்டம் போல் என்னை புசித்துக் கொள் என்று வேண்டினான்.

🌾🌾 பிரம்மராக்ஷஸனின் மனம் மாறுதல் :-

அதற்கு பிரம்மராக்ஷஸன் பலமாக சிரித்து, "சண்டாளனே!!! பிறவிக்கு ஏற்ப அதத்யம் செய்கிறாய். இந்த பிரம்மராக்ஷஸன் கையில் மீண்ட எவன் மறுபடியும் திரும்பி வருவான்.??? என்றதோடு மட்டுமல்லாமல்,,,

""நீயோ தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவன், உன்னால் கொடுத்த வார்த்தையை காப்பாற்ற முடியாது. நீ என்னிடமிருந்து தப்ப பொய்சொல்கிறாய்; மேலும் நீ திரும்பி இந்த வழியே வராமல் வேறு வழியில் சென்று தப்பி விடுவாய்"" என்றது.

அதற்கு நம் பாடுவான் பதினெட்டு விதமான பாவங்களைச் சொல்லி, நான் மீண்டும் வராவிடில் இந்தப் பாவங்கள் என்னை வந்தடையும் என்றான் நம்பாடுவான்.   (ஒரு பாவத்தை விட அடுத்த பாவம் கொடியது என்ற வரிசையில் சொல்லி சபதம் இட்டான் நம்பாடுவான்). 

17 வது சபதம் வரை சற்றும் மசியாத பிரம்மராக்ஷஸன் 18 வதாக நம்பாடுவான் செய்த சபதம் "மிகக் கொடிய பாவம்" என்று அறிந்து, நம்பாடுவானை மலையேறிச் செல்ல வழிவிட்டது.

🌺🌺🌺 சபதங்கள் :-

அப்படி என்ன சபதங்கள் செய்தார் நம்பாடுவான்?????

மலையேறி எம்பெருமான் அழகியநம்பியைத் தரிசித்து நான் திரும்ப வரவில்லை என்றால் :

1. சத்தியம் தவறியவர்களுக்கு என்ன தண்டனையோ அந்த தண்டனை எனக்கு கிடைக்கட்டும்.

2. பிறன் மனைவியை அடைவதால் ஏற்படும் பாவம் என்னை அடையட்டும்.

3. எவன் ஒருவன் சாப்பிடும் போது தன்னுடன் சாப்பிடுகிறவனுக்கு பந்தி வஞ்சனம் செய்கின்றானோ அந்த மாதிரியான பாவம் என்னை அடையட்டும்.

4. எவன் ஒருவன் பிராமணனுக்கு பூமி தானம் செய்துவிட்டு அதை திரும்பவும் அபஹரிக்கிறானோ அவன் அடையும் பாவத்தை நான் அடைவேன்.

5. எவன் ஒரு பெண்ணை யவன காலத்தில் அவளை அனுபவித்து விட்டு பின்பு ஏதாவது ஒரு தோஷத்தை சொல்லிவிட்டு அவளை கைவிடுவானாகில் அவன் அடையும் பாவத்தை நான் அடைய கடவேன்.

6. எவன் அமாவாசை பௌர்ணமி நாட்களில் தன் பத்தினியுடன் சேருகிரானோ அதனால் என்ன பாவம் வருமோ அந்த மாதிரியான பாவம் என்னை வந்தடையட்டும்.

7. எவன் ஒருவன் பிறருடைய அன்னத்தை நன்றாக புசித்துவிட்டு அவனையே தூஷிக்கின்றானோ அவனது பாவம் என்னை அடையட்டும்.

8. எவன் ஒருவன் பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதாக வாக்களித்துவிட்டு பிறகு எதோ சாக்கு போக்கு சொல்லிவிட்டு அவனுக்கு கொடுக்காமல் இருக்கிறானோ அவனது பாவத்தை நான் அடைவேன்.

9. எவன் சஷ்டி, அஷ்டமி, சதுர்த்தசி அமாவாசை திதிகளில் ஸ்நானம் பண்ணாமல் புசிக்கிரானோ அவனது பாவத்தை அடைவேன்.

10.ஒரு பொருளை தானமாக கொடுப்பதாகக் கூறி, பின்பு  மறுக்கிறானோ அந்த பாவத்தை நான் அடையக்கடவேன்.

11. எவன் ஒருவன் நண்பனின் மனைவியை அபஹரிக்கின்றானோ அதனால் வரும் பாவத்தை அடையக்கடவேன்.

12.எவன் ஒருவன் குருவின் பத்தினி அல்லது அரசனின் பத்தினியை அபஹரிக்கின்றானோ அதனால் வரும் பாவத்தை அடையக்கடவேன்.

13. எவன் ஒருவன் இரண்டு பெண்களை மணம் செய்து பின் ஒருத்தியை மட்டும் அலட்சியம் செய்வதால் ஏற்படும் பாவம் என்னை அடையட்டும்.

14. எவன் ஒருவன் கதியற்ற தனது பதிவிரதையான பத்தினியை யௌவன வயதில் (வயதான காலத்தில் தனியே) விட்டுவிடுகிறானோ அவன் அடையும் பாவம் என்னை சூழட்டும்.

15. தாகத்துடன் தண்ணீர் குடிக்க வரும் பசுவை குடிக்கவிடாமல் செய்வதால் வரும் "மகா பாவம்" என்னை வந்தடையட்டும்.

16. எவன் பிரம்மகத்தி தோஷம் செய்கிறானோ, கள்ளை குடிக்கிறானோ, விரதத்திற்கு பங்கம் பண்ணுகிறானோ இப்படிப்பட்ட மஹாபாவிகளின் பாவத்தை அடைய கடவேன்.

17. எவன் ஸர்வவ்யாபியாய் (எங்கும் நிறைந்திருக்கும்) எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ வாசுதேவனை ஆராதனை பண்ணாமல் இதர தேவதைகளை உபாசிக்கிரானோ அவனது பாவத்தை அடைவேன்.

இந்த "17 சபதங்கள்" நம்பாடுவான் சொல்லியும் கூட பிரம்மராக்ஷஸன் அசைந்து கொடுக்கவில்லை.

18. சர்வ ஜனங்களையும் காப்பவனும், எல்லோர் இதயத்திலும் அந்தர்யாமியாய் இருப்பவனும், எல்லா உயிரினங்களையும் இயக்குபவனும், முப்பத்து முக்கோடி தேவர்களாலும், முனிவர்களாலும் ஆராதிக்கப்படுபவனுமான சர்வேஸ்வரனான அந்த "ஸ்ரீமன் நாராயணனையும்" மற்றவர்களையும் சமமாக பாவிப்பதால் வரும் பாவம் என்னை அடையட்டும்.

இந்த பதினெட்டாவது சபதத்தைக் கேட்டதும் பிரம்மராக்ஷஸன் திகைத்து நின்றது. அது மிகக் கொடிய பாவம் என்று அறிந்து கொண்டது பிரம்மராக்ஷஸன்.

🌾🌾 மலையேற வழி விடுதல் :-

நம்பாடுவான் மேலே சொன்ன சபதங்களைக் கேட்டதும் நம்பாடுவானது அபார ஞானத்தைப் புரிந்து கொண்டது. இவன் சாதாரணமான ஆள் இல்லை என்று உணர்ந்தது.

இவனை விடாவிட்டால் இன்னும் துயரமே வரும் என்று நம்பாடுவானை விடுவித்து சீக்கிரமே விரதத்தை முடித்துவிட்டு வா என்று சந்தேகத்துடன் அனுப்பியது.   பிரம்மராக்ஷஸன் வழிவிடவும் நம்பாடுவான் அழகிய நம்பியைக் காணும் ஆவலில் ஓடோடி மலையேறினான்.

🙏🙏🙏 இதோ நம்பியைக் கண்டார் :-

பிரம்மராக்ஷஸனால் விடப்பட்ட நம்பாடுவான் திருக்குறுங்குடி கோவிலை நோக்கி ஓடினான்! நம்பியின் கோயிலுக்கு முன் வந்த நம்பாடுவானின் கண்களிலிருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்தது.

பெருமாளே! எங்கே என் ஆயுள் உன்னை பாடாமலேயே முடிந்து விடுமோ என்று பயந்து கொண்டிருந்தேன். நல்ல வேளை உன்னைப் பாட வந்து விட்டேன். இதுவே, எனது இறுதி பாடலாக இருக்கும் என்று மனம் நெகிழ்ந்து பண்ணிசைத்து உருக்கமாகப் பாடினான். ஏனெனில், பிரம்மராக்ஷஸன் நம்பாடுவானை உண்டு விட்டால், அவரது உயிர் பிரிந்து விடும் அல்லவா!!!! இறைவனை இனிமேல் காண முடியாது என்று மிகவும் உருக்கமாகப் பண் இசைத்து பாடினார் நம்பாடுவான்.

உள்ளிருந்த "அழகிய நம்பி பெருமாள்" நம்பாடுவானின் குரலிலிருந்த சோகத்தை உணர்ந்தார். எதிரே நோக்கினார்.

ஆம்!!! தான் ஆட்கொள்ளவேண்டிய தனது பக்தனின் திருமுகத்தைத் தானே பார்க்காவிட்டால், பிறகு அவனுடைய பக்திக்குத், தான் அளிக்கும் மதிப்புதான் என்ன???? என்று யோசித்தார்.

எம்மை நம்பாடுவானான அவன் காண இயலாதிருந்தும், அவனை நாம் பார்த்து அருள்புரிவோம் என்று எதிரே பார்த்தார். கொடி மரம் தடுத்தது.

"விலகி நில் கொடிமரமே என் பக்தன் என்னைக் காணவேண்டும்!!! அதை விட நான் அவனைக் காண வேண்டும் !!!  விலகு" என்று தனது பார்வையைச் சற்றே கொடிமரத்தை நோக்கி பார்வையாலேயே சற்று விலக்கினார்.

எம்பெருமான் அழகியநம்பிக்குத் தான் தன் பக்தர்களின் மேல் எப்பேர்ப்பட்ட அன்பு! கருணை! பாசம் எல்லாம். தன் பக்தன் என்னைக் காணாவிடிலும், நான் அவனைக் கண்டு அவனுக்கு என் தரிசனத்தைக் கொடுப்பேன் என்று பார்வையாலேயே கொடிமரத்தை விலக்குகிறார் எம்பெருமான்!!!!

கொடிமரம் விலகிய அடுத்த நொடியே ""பளிச்சென்று ஓர் ஒளி உள்ளே இருந்து வெளியே வந்து நம்பாடுவானை ஆரத் தழுவியது. கொடிமரம் விலகிய கோணத்தில் நேர் எதிரே தன் கண் முன்னே, தான் பார்ப்பது நம்பிதானா"" என்று உள்ளம் குதூகலித்தான் நம்பாடுவான்.

🌺🌻🌹 நம்பாடுவான் அடைந்த பேரானந்தம் :-

ஆஹா!!! பெருமாளை நேரில் தரிசிக்கும் பேறு பெற்ற பின் வேறு என்ன பாக்கியம் வேண்டும். அர்ச்சாவதார மூர்த்தியை நேரில் தரிசனம் கண்டாயிற்று. இந்த ஜன்மம் சாபல்யம் அடைந்துவிட்டது. இனி பிரம்ம ராட்சசனுக்கு மகிழ்வுடன் உணவாகலாம்.

நம்பாடுவான் என்ற அந்த அற்புத பக்தன் தொடர்ந்து இறைவனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. அந்த சில கண தரிசனத்திலே முழு நிறைவடைந்தான். பேராசையற்ற பக்தி. இறைவனை காண முடியாமல் தன் ஆயுள் முடிந்து விடுமோ என்ற ஏக்கத்தில் இருந்தவனுக்கு இந்த தரிசனமே போதுமானதாக இருந்தது.  அதைவிடத் தான் வாக்கு கொடுத்ததால் பெரும் பசியுடன் இருந்த பிரம்மராட்சசனை நோக்கி விரைந்தான்.

இப்படியாக தனது விரதத்தை முடித்துவிட்டு பிரம்மராக்ஷஸனிடம் செல்ல முற்பட்டான். வந்த வேகத்தை விட செல்லும் வேகம் அதிகமாகக் காணப்பட்டது.

🌹🌻🌺 வராகமூர்த்தி காட்சி கொடுத்தல் :-

நம்பாடுவான் பிரம்மராக்ஷஸனை நோக்கி வேகமாகச் செல்லும் பொழுது, ஒரு சுந்தர புருஷன் அவன் முன் தோன்றி, "யாரப்பா நீ! எங்கு செல்கிறாய்???.  நீ செல்லும் திசையில் ஒரு பிரம்மராட்க்ஷஸன் இருக்கிறான்! அங்கே போகாதே"" என்று கூறினான்.

நம்பாடுவானும், "சுவாமி அடியேனுக்கு அந்த பிரம்மராட்க்ஷஸனைப் பற்றித் தெரியும்; நான் அவனுக்கு என் விரதத்தை முடித்துவிட்டு வருவதாக வாக்களித்துள்ளேன். ஆகவே அங்கு செல்கிறேன் என்று கூறினான்.

அதற்கு அந்த சுந்தரபுருஷன், நீ நினைப்பது போல் அந்த பிரம்மராக்ஷஸன் நல்லவன் இல்லை. அவன் உன்னை தின்று விடுவான் வேறு வழியில் சென்று விடு என்று சொன்னார்.

நம்பாடுவான் "சுவாமி சத்தியத்தை துறந்து உயிர் வாழ விரும்பவில்லை, ஆகவே என்னைச் செல்ல அனுமதியுங்கள்" என்று வேண்டினான்.

தன் உயிரான பிராணனை விட்டாவது சத்தியத்தைக் காப்பாற்றுவேன் என்று சொன்ன நம்பாடுவானின் வார்த்தைகளை கேட்டுச் சந்தோசம் அடைந்த "சுந்தரபுருஷன்" உனக்கு மங்களம் உண்டாகட்டும் என்று ஆசிர்வதித்துவிட்டு சென்றான்.

அந்த சுந்தர புருஷன் வேறு யாருமில்லை!! எம்பெருமான் பூமிபிராட்டிக்கு உபதேசித்துக் கொண்டிருக்கும் ரூபமான சாக்ஷாத் வராஹ மூர்த்தியே! நம்பாடுவானையும் நம்பாடுவனால் அந்த பிரம்மராட்க்ஷஸனையும் ஒருங்கே கடாட்ஷித்து அருள்புரிய எண்ணினார் வராஹமூர்த்தி...

🌾🌹 பிரம்மராக்ஷஸன் பேசுவது :-

நம்பாடுவானும் பிரம்மராட்க்ஷஸன் இருப்பிடம் வந்து சேர்ந்தான். இதோ உன் அனுமதியுடன் அழகிய நம்பி பெருமாளை வாயாரப் பாடி நான் புனிதனாகி வந்துள்ளேன். எனது சரீரத்திலுள்ள ரத்த மாமிசங்களை புசித்து உன் பசியைப் போக்கிக் கொள் என்று கூறி நின்றான்.

பசியுடன் மிக பயங்கரமாய் இருந்த பிரம்மராட்க்ஷஸனுக்கு, நம்பாடுவான் வந்த பின்பு பசியே இல்லாமல் இருந்தது. நம்பாடுவானைப் புசிக்க வேண்டும் என்ற எண்ணம் பிரம்மராக்ஷஸனுக்கு வரவில்லை. அதற்குப் பதிலாக மற்றொன்றை நம்பாடுவானிடம் பிரம்மராக்ஷஸன் கேட்டது!!!! ... அது என்ன கேட்டது தெரியுமா??????

"ஏ நரனே! நீ நேற்றிரவு சர்வேஸ்வரனான, ஸ்ரீமந்நாராயணரான
அழகியநம்பியை போற்றிப் பாடிய பாட்டின் பலனை எனக்குக் கொடுத்தால் நான்உன்னை விட்டு விடுகிறேன்" என்றது.

அதற்கு நம்பாடுவான் நான் கொடுத்த சத்தியத்தைக் காக்க வேண்டும்... ஆகவே என்னை புசித்துக்கொள்... நான் பாடிய "கைசிகப் பண்" ஆகிய இந்த பாட்டின் பலனைக் கொடுக்க மாட்டேன் என்றான்.

அதற்கு பிரம்மராட்க்ஷஸன் பாட்டின் பாதி பலனையாவது கொடு உன்னை விட்டுவிடுகிறேன் என்று மன்றாடியது. அதற்கும் மசியாத நம்பாடுவான் நான் உனக்கு கொடுத்த வாக்கின் படி வந்து விட்டேன் நீ செய்த ப்ரதிக்ஞை படி என்னைப் புசித்து விடு என்று கூறினான்.

🌹🌻 பிரம்மராக்ஷஸனின் பூர்வ ஜென்ம ஞாபகம்  :-

பிரம்மராட்க்ஷஸனும், "அப்பா! ஒரு யாமத்தின் பலனையாவது கொடுத்து என்னை இந்த பிறவியான பிரம்மராட்க்ஷஸன்  ஜன்மத்திலிருந்து காப்பாற்று" என்று மன்றாடியது.

"நீ பிரம்மராட்க்ஷஸனாகப் பிறக்கக் காரணம் என்ன?" என்று கேட்டான் நம்பாடுவான்.

அப்பொழுது பிரம்மராட்க்ஷஸனுக்குத் தன்னுடைய பூர்வ ஜென்ம ஞாபகம் வந்தது. பூர்வ ஜென்மத்தில் நான் பிராமண குலத்தில் பிறந்து எந்த அனுஷ்டானங்களும் இன்றி திரிந்தேன்.

பண ஆசையால் யாகம் பண்ண எண்ணினேன். அப்பொழுது எனது பாவத்தின் காரணமாய் யாகத்தின் இடையில் மரணமடைந்தேன். இப்பொழுது பிரம்மராட்க்ஷஸனாக அலைந்துக் கொண்டிருக்கிறேன்.

தயை கூர்ந்து என்னைக் காப்பாற்று என்று நம்பாடுவானைச் சரண் அடைந்தது.

🌻🌺🌹 நம்பாடுவான் உதவுதல் :-

தன்னை அண்டிய அந்த பிரம்மராட்க்ஷஸனிற்கு உதவ முடிவு செய்தான் நம்பாடுவான்.

அதன்படியே, "நேற்றிரவு கைசிகம் என்ற பண்" பாடினேன். அதனால் வரும் பலனை அப்படியே உனக்குக் கொடுக்கின்றேன் அதன் காரணமாய் நீ ராக்ஷச ஜென்மத்திலிருந்து விடுபட்டு மோட்சத்தை அடைவாய் என்று கூறினான் நம்பாடுவான்.

நம்பாடுவானின் வரத்தை பெற்ற பிரம்மராட்க்ஷஸன் ராட்க்ஷஸ ஜென்மத்திலிருந்து விடுபட்டு நல்ல குலத்தில் பிறந்து பகவத் பக்தனாக இருந்து மோட்சத்தை அடைந்தது.

🌹🌻🌺 மகிமைகள் :-

நம்பாடுவானும் நெடுங்காலம் அழகியநம்பி பெருமாளைப் போற்றிப் பாடி, கால முடிவில் திருநாடு (பரமபதம்) அடைந்தான்.

ஸ்ரீரங்கத்தில் அரங்கனை அன்றாடம் ஆராதித்து வந்த "பராசர பட்டர்" என்பவர் இந்த புராணத்தை தெளிவாக விளக்கியதைக் கேட்டு சந்தோசமடைந்த அரங்கன், பராசர பட்டருக்கும் பரமபதத்தைத் தந்து தன்னுடன் சேர்த்துக் கொண்டார்.

ஒவ்வொரு கார்த்திகை மாதம் "சுக்லபக்ஷ ஏகாதசி" அன்று எல்லா வைஷ்ணவ கோயில்களிலும் இந்த மகாத்மியம் இன்றும் வாசிக்கபடுகிறது.

அப்பேற்பட்ட இந்த "கைசிக மகாத்மியத்தை" கோயிலுக்குச் சென்று பெருமாள் முன்னோ அல்லது வீட்டில் பூஜை அறையில் பெருமாள் முன் சொல்கின்றவனும் அதை கேட்கின்றவர்கள் யாவரும் இந்த லோகத்து ஐஸ்வர்யங்கள் அனைத்தையும் அனுபவித்து பின் வைகுந்தத்தையும் அடைவார்கள் என்று பூமி பிராட்டிக்கு "வராஹ பெருமாளே சொன்ன சத்தியம்" இந்த மஹாத்மியம்.

🌺🌻🌹 வராஹமூர்த்தி கூறுவது :-

நம்பாடுவானும் கால முடிவில் "திருநாடு பெற்றான்" என்ற வராகமூர்த்தி, மேலும் பூமிதேவியிடம் உரைப்பது :-

""""எவனொருவன் கார்த்திகை சுக்லபட்சத்து துவாதசி அன்று நம் சன்னிதியில் இந்த கைசிக மஹாத்மியத்தை வாசிக்கின்றானோ!!!! அல்லது செவி மடுக்கிறானோ (கேட்கிறானோ)!!! அவன் நமக்குப் பல்லாண்டு பாடிக்கொண்டு ஆத்மானுபாவம் பண்ணிக் கொண்டிருப்பான்!!!!"""".

என்று பூமிதேவி தாயாரிடம் இந்த "கைசிக ஏகாதசி மஹாத்மியம்" பற்றி எடுத்துரைத்தார். பூமிதேவி தாயாரும் பகவான் சொன்னதைக் கேட்டு ஆனந்தமடைந்தார். 

🌺🌺🌺 விசேஷம் :-

பாவங்களை அறிவாளிகள் உணர்ந்து விலக வேண்டும் என்பதே இந்த வராக புராணத்தின் உள்ளீடான "கைசிக ஏகாதசி மஹாத்மியம்" என்பதன் சாரமாகும்.

இந்த கைசிக ஏகாதசியன்று எம்பெருமானின் அனைத்து திவ்யதேசங்களிலும், திருக்கோவில்களிலும் விசேஷமாக நடைபெறும்.

🌻🌺🌹 ஸ்ரீரங்கம் கைசிக ஏகாதசி விழா:-

ஸ்ரீரங்கம் கோவிலில்  "கைசிக ஏகாதசி" நடைபெறுகிறது. அதோடு 365 வஸ்திரங்கள் எம்பெருமானுக்கு அன்று இரவு முழுவதும் சாற்றப்படும்.

இரவு 9.30 மணி முதல் 11 மணி வரை வஸ்திரங்கள் சாற்றி, அரையர் சேவையும் நடைபெறும். ஸ்ரீபட்டர் சுவாமிகளால் "கைசிக புராணம்" விடிய விடிய வாசிக்கப்படும்.  மறுநாள் அதிகாலை 5.45 மணிக்கு கற்பூர படியேற்ற சேவை நடைபெறும். இந்த காணக்கிடைக்காத காட்சியை "ஸ்ரீரங்கம்" சென்று தரிசித்திடுங்கள்.

🌺🌻🌹 புண்ணியவான்களான நாம் :-

திருக்குறுங்குடி திவ்யதேசத்தில் கைசிக ஏகாதசி சேவிக்கப்படுவதுடன், அன்று இரவு நாடகமாகவும் நடிக்கப்படுகிறது.  திருக்குறுங்குடியில் வருடந்தோறும் இந்த நம்பாடுவானின் "கைசிகப்பண்" மற்றும் வராக மூர்த்தி காட்சி கொடுத்தல் போன்றவை மிகச் சிறப்பாக நடைபெறுகிறது.

இந்த கைசிக ஏகாதசி மஹாத்மியத்தின் மகிமைகளைப் படிக்கும் அன்பர்கள் அனைவரும் கொடுத்து வைத்தவர்கள் என்று மட்டுமா சொல்ல வேண்டுயம்???? நாம் அனைவரும் "பாக்கியசாலிகள்" "புண்ணியவான்கள்" என்று கூட சொல்லலாம்!.

அறிவாளிகள் தெரிந்தோ, தெரியாமலோ செய்த பாவங்களில் இருந்து இனிமேலாவது விலகிக் கொள்ள வேண்டும்.  மறுபடியும் பல பாவங்களைச் செய்யாமல் இருக்க வேண்டும் என்பதே இதன் சாரம்சம்.

இன்று படிக்க இயலாதவர்களும், நாளை கைசிக ஏகாதசி மற்றும் துவாதசி அன்று எம்பெருமானின் சன்னிதியிலோ, வீட்டின் பூஜை அறையிலோ வைத்து பக்தியோடு படித்து, எம்பெருமானின் கருணையைப் பெறுங்கள்.

உங்களுக்கு எம்பெருமானின் பரிபூர்ண அனுக்ரஹம் உண்டாகட்டும்.

இப்பிறவியில் எல்லா கஷ்டங்களும் நீங்கி, மகிழ்ச்சியாகிய சந்தோசத்தை அனுபவித்து, அனைத்து செல்வங்களையும் பெற்று, எம்பெருமானின் கருணையைப் பெற்று ஆனந்த வாழ்வு நம் அனைவரும் வாழ அவர் அருள் நம் அனைவரையும் வழி நடத்தட்டும்.

ஓம் நமோ நாராயணாய நமஹ!!!!!
ஓம் வராஹ மூர்த்தியே நமஹ!!!

திருக்குறுங்குடி அழகிய நம்பி திருவடிகளே சரணம்!!!!! எம்பெருமானின் திருப்பாதங்களே சரணம்!!!

🌹🌻🌾கைசிக ஏகாதசி மஹாத்மியம் 🌹முற்றும்🌾🌻
‌ஸ்ரீராமஜெயம்

 #கைசிக_ஏகாதசி_விரத_மகிமை

வருடத்தில் 12 மாதங்களிலும் 24 ஏகாதசிகள் வருகின்றன. இந்த 24 ஏகாதசிகளுக்கும் தனித்தனிப் பெயர்களும் அதற்கான பலன்களும் இருப்பதாக நமது சாஸ்திரங்கள் சொல்கின்றன. நமக்கு அதிகம் தெரிந்தது வைகுண்ட ஏகாதசி. இது மார்கழி மாத சுக்ல பட்சத்தில் வருவது. அதுபோல ஒவ்வொரு மாதமும் வருகின்ற ஏகாதசிகளும் சிறப்பானவையே.

கார்த்திகை மாதக் கிருஷ்ணபட்ச ஏகாதசிக்கு பிரபோதினி என்று பெயர். இதை உத்தான ஏகாதசி என்றும் சொல்வர். இதைக் கைசிக ஏகாதசி என்றும், துளசி கல்யாண வைபவத்தால் பிருந்தாவன ஏகாதசி என்றும் கூறுவர்.  இந்த ஏகாதசியை சிரத்தையுடன் அனுஷ்டித்தால் பிரம்மஹத்தி போன்ற கொடிய பாவங்களும் விலகும். இந்த விரதம் இருப்பவர்களுக்கு அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும். உலகத்தில் உள்ள புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய புண்ணியம் அருள கூடியவை இந்த ஏகாதசி விரதம்.

கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி *கைசிக ஏகாதசி* அன்றுதான் யோக நித்திரையிலிருந்து பகவான் கண் விழிக்கிறார். அதனால் இதற்கு *உத்தான ஏகாதசி* அல்லது *ப்ரபோத ஏகாதசி* என்ற பெயர்களும் உண்டு. *ஸ்ரீ பராசர பட்டரால்* கைசிக ஏகாதசியன்று ஸ்ரீ வராஹ புராணத்தின் ஒரு பகுதியான கைசிக மஹாத்மியம் படிக்கப்பட்டு அவர் அருளிச் செய்த விளக்கவுரையைக் கேட்டு மகிழ்ந்த நம்பெருமாள் அவருக்கு கைசிக துவாதசியன்று மோக்ஷத்தைத் தந்தருளினார்.

கைசிக மஹாத்மியத்தில் *ஸ்ரீ வராஹ மூர்த்தி, பூமிப்பிராட்டிக்கு,* *நம்பாடுவான்* என்பான் *திருக்குறுங்குடி* திவ்ய தேசத்தில் கைசிகம் என்னும் பண்ணால் தன்னை ஏத்தி மகிழ்ந்ததைக் குறிப்பிடுகிறார். 

#ஓம்_நமோ_வேங்கடேசாய.

Wednesday, October 23, 2019

ரமா ஏகாதசி/ rama ekadashi

ரமா ஏகாதசி.......!!!
(24.10.2019)

நாளை க்ருஷ்ணபக்ஷ ரமா ஏகாதசி.
தனது பெயருக்குத் தக்கவாறு ஐச்வர்யத்தை அளிக்கும் அதை ஸ்திரப்படுத்தும். இதில் உபவாஸமிருப்பவன் ஸ்திரமான ராஜ்யத்தை அடைந்து விளங்குவான்.

சந்திரஸேனனின் புதல்வன் சோபனன். அவன் பசி தாங்காதவன். ஒரு வேளை கூட ஆஹார மில்லாமல் இருக்க முடியாதவன். இவனுக்கு முசுகுந்தன் என்ற அரசன் தன் பெண்ணான சந்தரபாகையை மணம் செய்து வைத்தான். இந்த அரசன் ஒவ்வொரு ஏகாதசிகளிலும் உபவாஸம் இருப்பவன். ப்ரஜைகளும் இவனது நிர்பந்தத்தால் உபவாஸம் இருப்பவர்கள். ஏகாதசி முந்தய தினம் ஒவ்வொரு வீதியிலும் நாளை ஏகாதசி, ஒவ்வொருவரும் உபவாஸம் இருக்க வேண்டும், விஷ்ணு பூஜை செய்ய வேண்டும் என்று தமுக்கு அடிக்கச் செய்வான்.

 உபவாஸமில்லாதவனை தூக்கில் இட்டுவிடுவான். இது அவனது ராஜ்ய தர்மம். ஒரு சமயம் சோபனன் மாமனாரின் அகத்துக்கு வந்தான். அன்று ஏகாதசி. படர்கள் வழக்கம்போல முன் இரவும் அன்றும் பறைசாத்தினர். சோபனன் கவலைப்பட்டான். உணவு உண்டால் தலை போய்விடும் என்றும் மனைவி கூறினாள். இவன் பயந்து உபவாஸம் இருக்க அது தாங்க முடியாமல் மறுநாள் காலை இறந்துவிட்டான். முறைப்படி ஸம்ஸ்காரம் செயதனர். சில நாட்கள் கழிந்தன. இவன் மனைவி துன்ப ஸாகரத்தில் மூழ்கியிருக்க ஸோமசர்மா என்ற பெரியவர் தனது தீர்த்த யாத்ரையை முடித்து இவ்வூருக்கு வந்தார். கவலையுடன் உள்ள இப்பெண்ணைக் கண்டார். பெண்ணே நீ ஏன் அழுகிறாய். உன் கணவன் மந்தரமலையின் அருகில் ஒரு திவ்ய நகரத்தை ஆண்டு வருகிறானே. உன் பர்த்தா உயிருடன் இருக்க வ்யஸனம் ஏன் என்றார். இதைக் கேட்ட இவன் மனைவி தன் தந்தையுடன் அங்கு சென்று தன் கணவனைப் பார்த்து மகிழ்ந்தாள். அவனும் இங்கு வாமதேவமுனிவரின் அருளால் எனக்கு உயிர் வந்தது. ராஜ்யமும் கிட்டியது. நான் நிர்பந்தத்தின் பேரில் ச்ரத்தை இல்லாமல் ரமா என்னும் ஏகாதசியை உன் ஊரில் அநுஷ்டித்தேன். அதன் பலன் இது என்றான். இது அழியாமல் இருக்க என்ன செய்வது என்றும் கேட்டான். அப்பொழுது முனிவர் வந்து உன் மனைவி செய்த ஏகாதசியின் மஹிமையால் இது அழியாது என்று வரம் கொடுத்தார். இருவரும் ஸுகமாக இராஜ்யத்தில் வாழந்து ஏகாதசி வ்ரதத்தையும் நடத்தி வந்தனர்.

ஏகாதசி விரதத்தை சிரத்தையுடன் அனுஷ்டிப்பவர் சந்தேகமின்றி ஒரு அந்தணரைக் கொல்லும் பாவத்திலிருந்து விடுபடுவார் கருப்பு நிற பசுக்களும் வெண்ணிற பசுக்களும் வெண்ணிற பாலையே கொடுப்பது போல் தேய்பிறை மற்றும் வளர்பிறையில் தோன்றும் இரு ஏகாதசிகளும் அதை அனுஷ்டிப்பவர்களுக்கு முக்தி அளிக்கிறது. இந்த ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி கேட்பவர் தன் எல்லா பாவ விளைவுகளில் இருந்து விடுபட்டு பகவான் விஷ்ணுவின் பரமத்தில் ஆனந்தமாக வாழ்வார்.

Tuesday, September 24, 2019

இந்திரா ஏகாதசி/ Indira Ekadashi

நம் முன்னோரை கடையேற்றும் இந்திரா ஏகாதசி.....!!!
(நாளை 25.9.2019)

இந்திரா ஏகாதசி மஹாலய பக்ஷத்தில் அமைவதால் இதற்கு தனி மகத்துவம் உண்டு.இந்த ஏகாதசி விரதம் நம் பாபங்களை போக்குவதோடு நம் முன்னோர்களின் பாபங்களையும் போக்குவதாக அமைகிறது.

இந்திரா ஏகாதசி விரத கதை.....!

முன்பொரு காலத்தில் மகிஷ்மதிபுரி ராஜ்யத்தை இந்திரசேனர் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவர் சிறந்த முறையில் ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தார்.அவரது ஆட்சியில் மக்கள் குறை இல்லாமல் வாழ்ந்து வந்தார்கள். மன்னர் சிறந்த விஷ்ணு பக்தரும் கூட. விஷ்ணுவை போற்றி வணங்குவதில் சிரத்தை உள்ளவர்.

ஒரு நாள் மன்னர் தர்பாரில் இருந்த போது அங்கு  நாரத முனிவர் வந்தார். அவரை சகல மரியாதையுடன் வணங்கிய மன்னர் அவர் வந்த காரணம் வினவினார். நாரதர் தான் வந்த காரணத்தை விவரிக்க ஆரம்பித்தார்.

நாரதர் பிரம்மலோகத்தில் இருந்து யமலோகத்திற்கு இறங்கிய போது யமராஜரால் வரவேற்கப்பட்டார். அவரின் சபையில் சகல மரியாதைகளுடன் அமர்ந்திருந்த போது சபையினருக்கு நடுவே இந்திரசேனரின் தந்தையும் இருக்கக் கண்டார். ஆச்சர்யப்பட்ட நாரதரிடம் இந்திரசேனரின் தந்தை தான் ஒரு ஏகாதசி விரதத்தை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே முறித்ததன் விளைவாக தான் நரகத்தில் அல்லல்படுவதாக உரைத்தார்.

இந்திரசேனரின் தந்தை இந்திரசேனரை இந்திரா ஏகாதசி விரதம் இருக்குமாறு நாரதர் மூலம் கேட்டுக் கொண்டார். இதனால் தான் நரகத்திலிருந்து விடுபட்டு வைகுண்டம் சேர முடியுமென உரைத்தார். அவர் கூறியதை இந்திரசேன மன்னரிடம் கூறவே நாரதர் மன்னரை நாடி வந்துள்ளார்.

இதனை அறிந்தவுடன் நாரதரிடம் மன்னர் இந்திரா ஏகாதசி பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். அதன்படி தனது சுற்றத்தோடும், ஏனையரோடும் விரதமிருந்து தனது தந்தைக்கு நல்வழி காட்டினார். தனது தந்தை கருட வாகனம் ஏறி வைகுண்டம் செல்வதை கண்டார். அவர் த்வாதசி அன்று விரதம் முடிக்கும் போது அவரது பக்தியை மெச்சி  அவர் மீது ஆகாயத்திலிருந்து பூமாரி பெய்தது. மன்னரும் பிற்காலத்தில் வைகுண்டம் சேர்ந்தார்.

இந்திரா ஏகாதசியில் முறைப்படி  விரதமிருந்தால் நமது  பாபம் மட்டுமன்றி நம் முன்னோர்களின் பாபங்களும் நீங்கும்.

நரகத்தில் வாடும் முன்னோர்கள் வைகுண்டம் நோக்கி செல்வார்கள்.

இந்த ஏகாதசி விரத கதை கேட்போருக்கு குதிரையை தானம் செய்த பலன் கிடைக்கும்.

இதனை படிப்போருக்கும் கேட்போருக்கும் வாழ்வில் வளமும்,முக்தியும் கிடைக்கும்.

இத்தனை நன்மை பயக்கும் இந்திரா  ஏகாதசி விரதத்தை கடைபிடித்து நம் வாழ்வை வளப்படுத்தி ,நம் முன்னோர்கள் உய்யவும் வழி தேடுவோமே?

Friday, November 16, 2018

உத்தான ஏகாதசி/ uthana Ekadashi

(19-11-18) உத்தான ஏகாதசி தொடர்பான ஒரு அரிய பதிவு!

வருடத்தில்... மூன்று ஏகாதசிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யர்கள்.

கைசிக ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி, உத்தான ஏகாதசி ஆகிய மூன்று ஏகாதசிகளும் மிக மிக முக்கியமான நாட்கள் என்று ஆச்சார்யர்களால்
போற்றப்படுகின்றன.

(18-11-18) மதியம் 11-52 முதல் திங்கட்கிழமை மதியம் 12-57 முடிய உத்தான ஏகாதசி திதி அமைந்துள்ளது.

எனவே திங்கட்கிழமை(19-11-18) உத்தான ஏகாதசி விரதம் இருந்து,மதியம் 12 மணிக்குள் பெருமாள் கோவிலுக்கு மகாவிஷ்ணுவை வழிபடுவோர் மகத்தான பலன்களைப் பெற்று மகோன்னதமாக வாழ்வார்கள் என்பது உத்தான ஏகாதசியின் சிறப்பாகும்.

(19-11-18)
உத்தான ஏகாதசி விரதம் இருப்பது, வீட்டின்  தரித்திர நிலையை மாற்றிவிடும்.

வீட்டில் சுபிட்சம் நிலவும்.

கூடுமானவரை, உத்தான ஏகாதசி விரதத்தை முறையாக அனுஷ்டிப்பது உத்தமம்.

இயலாதவர்கள், வயதானவர்கள் பால், பழம், மிதமான உணவுகள் எடுத்துக் கொள்ளலாம், தவறில்லை.
இனரு தினம்(19-11-18) மதியம் 12-57 முடிய உத்தான ஏகாதசி திதி இருப்பதால் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு மதியம் 12.00 மணிக்குள் சென்று பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வழிபடுவதால் எல்லா நல்ல விஷயங்களும் உங்களைத் தேடி வரும்.

மிக முக்கியமாக, நாளைய உத்தான ஏகாதசி நாளில், துளசி தீர்த்தத்தைப் பருகுவது, அத்தனைப் புண்ணியங்கள் கொண்டது என்கிறது சாஸ்திரம்.

ஆகவே,நாளை உத்தான ஏகாதசியில் விரதம் மேற்கொள்ளுங்கள். இயலாதவர்கள் மறக்காமல் துளசித் தீர்த்தம் பருகுங்கள்.

கார்த்திகை மாத வளர்பிறையில் தோன்றக்கூடிய உத்தான ஏகாதசி ஒருவரின் அனைத்து பாவங்களையும் எரித்து சாம்பலாக்குகிறது.

ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்வதாலும், நூறு ராஜசூய யாகங்கள் செய்வதாலும் அடையக் கூடிய பலனை ஒருவர் இந்த உத்தான ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதாலேயே அடையலாம்.

இந்த உத்தான ஏகாதசி ஒருவருக்கு, காணாதவை, விரும்பாதவை மற்றும் மூவுலகங்களிலும் அரிதானவை போன்ற அனைத்தையும் அளிக்கிறது.

இந்த உத்தான ஏகாதசி மந்தார மலை அளவிற்கு உள்ள கடுமையான பாவங்களையும் எரித்து சாம்பலாக்குகிறது.

இந்த உத்தான ஏகாதசியன்று புண்ணியத்தை சேர்ப்பவர் சுமேரு மலைக்கு ஈடான அளவு பலன்களை அடைவார்.

உத்தான ஏகாதசி விரதத்தை முழு நம்பிக்கையுடன் அனுஷ்டிப்பவரின் நூறு பிறவிகளின் பாவ விளைவுகள் அனைத்தும் மறைந்துவிடும்.

ஒருவர் உத்தான ஏகாதசியின் இரவு(18-11-18) முழுவதும் விழித்திருந்து விஷ்ணு வழிபாடு செய்வதால் அவருடைய முற்கால, நிகழ்கால மற்றும் வருங்கால தலைமுறைகள் அனைவரும விஷ்ணுவின் பரமத்தை அடைவர்.


கார்த்திகை மாத வளர்பிறையில் வரும் உத்தான ஏகாதசியன்று
ரோஜா மலர்களால் பகவான் விஷ்ணுவை வழிபடுபவர்கள் நிச்சியமாக முக்தி அடைவார்கள்.

கார்த்திகை மாத  வளர்பிறையில் வரும் ஏகாதசி என்பது 'ப்ரபோதினி' அல்லது 'உத்தான ஏகாதசி' ஆகும்.

பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள பெருமாள், இந்த உத்தான ஏகாதசி அன்றுதான் விழித்தெழுகிறார்.

எனவே இந்த உத்தான ஏகாதசி நாளில் மஹாவிஷ்ணுவையும் துளசிதேவியையும் வழிபடுவது மிகவும் விசேஷம்.

 (19-11-18)உத்தான ஏகாதசி நாளில் மதியம் 12.00 மணிக்குள் பெருமாள் கோயில் தீர்த்தத்தை அருந்துவது மகத்தான புண்ணியம் கொண்டது என்கிறது சாஸ்திரம்.

 (19-11-18)உத்தான ஏகாதசி நாளில் அதிகாலையில் குளித்து முடித்து வீட்டில் பூஜையறயில் உள்ள பெருமாள் படம் முன்பாக அமர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தால் சகல சத்விஷயங்களையும் அடைவீர்கள் என்பது உறுதி.

விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்ய தெரியாதவர்கள் விஷ்ணு சஹஸ்ரநாம ஒலி நாடாவினை
கேட்டுக்கொண்டே பெருமாளை வழிபடலாம்.

அதுவும் முடியாதவர்கள் சிவ பெருமானால் பார்வதி தேவிக்கு உபதேசிக்க பட்ட கீழ்கண்ட எளிமையான ஸ்ரீ ராம மந்திரத்தை ஜெபிக்கலாம்.

ஸ்ரீ ராம மந்திரம்

"ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம்
ஸ்ரீ ராம நாம வரானனே".

இந்த மந்திர ஸ்லோகத்தில் மூன்று முறை "ராம" என்ற நாமம் வருகிறது.

ராம நாமம் தாரக நாமம்.

அதாவது த்ரேதா யுகம் முடிந்து த்வாபர யுகம் முடிந்து கலியுகத்தில் ஸ்ரீ ராமனின் நாமத்தை அனுதினமும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்,கேட்டுக் கொண்டிருக்கிறோம்.

அதுதான் ராம நாமத்தின் மகிமை.

ராம என்பவை இரண்டு அக்ஷரங்கள்.

நாராயணா என்ற நாமத்திலிருந்து "ரா" அக்ஷரத்தை முதல் அக்ஷரமாகவும்,
நமசிவாய என்ற நாமத்திலிருந்து
"ம" அக்ஷரத்தை இரண்டாவது அக்ஷரமாகவும் இந்த ராம நாமத்தில் உள்ளது.

"ரா" என்பது அக்னி பீஜம்.

"ம" என்பது அம்ருத பீஜம்.

"ரா" என்ற உச்சரித்ததும் நம்முடைய அனைத்து பாபங்களும் நம்மை விட்டு விலகி விடுகிறது.

"ம" என்று உச்சரித்ததும் பாபங்கள் ஏதும் நம்முள் செல்லாமல் தடுக்கப்படுகின்றது.

இந்த எழுத்துக்களுக்கு இணையாக எண்கள் உள்ளன.

"ர" என்ற எழுத்துக்கு எண் 2ம்,
"ம" என்ற எழுத்துக்கு எண் 5ம் ஆகும்.

மேலே ஸ்லோகத்தில் "ராம" என்ற நாமம் மூன்று முறை வருகின்றது.

 அதாவது 2X5 2x5 2x5. என்றால் 2X5=10x2=20x5=100x2=200x5=1000 ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.

இதுதான் இந்த ராம நாமத்தின் அற்புதம்.

இந்த கார்த்திகை மாத வளர்பிறை "உத்தான ஏகாதசி" நாளன்று கிடைக்கும் அனைத்து பழங்களையும் விஷ்ணு பகவானுக்கு
நிவேதனம் செய்து வேண்டிக் கொண்டால் மங்கள வாழ்வு மலரும், பூலோகத்திலேயே சொர்க்க வாழ்வு கிடைக்கும்.

ஆகவே, உத்தான ஏகாதசி நாள் ஆன 19-11-18 அன்று விரதம் மேற்கொண்டு விஷணுவை வழிபடுங்கள்,
முக்தியடையுங்கள்.