Showing posts with label Beema. Show all posts
Showing posts with label Beema. Show all posts

Sunday, May 31, 2020

Nirjala Ekadashi

*நிர்ஜல_ஏகாதசி 2/6/2020*

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

*பாண்டவ நிர்ஜல ஏகாதசி' விரத மகிமை*

'ஜேஷ்ட மாதம்', (May / June)  வளர்  பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "பாண்டவ நிர்ஜல  ஏகாதசி (அ) நிர்ஜல ஏகாதசி" (Paandava Nirjala Ekadasi)  என்று அழைக்கப்  படுகின்றது.

*நிர்ஜல ஏகாதசி பற்றி 'பிரம்ம வைவர்த்த புராண' விளக்கம்:*

ரிஷிகளில் முதன்மையான ஶ்ரீ வியாஸரிடம் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் எழுப்பிய வினாக்களும் (கலியுகத்தில் ஏகாதசி விரதம் இருக்க முடியாது என்ற நிலையில் இருக்கும் பலருக்காகவும்) அதற்கு வியாச மகரிஷி அளித்த விளக்கங்களையும் நாம் இங்கே தொகுத்துள்ளோம் நமது  "அன்பர்களுக்கு

ஒருமுறை யுதிஷ்டிரரின் தம்பிகளிள் ஒருவரான பீமசேனன், தனது பாட்டனாரும், மிகச்சிறந்த ரிஷி முனிகளில் முதன்மையானவருமான ஸ்ரீ வியாசரிடம் தனது சந்தேகத்தைக்   கேட்கிறார்...

ரிஷிகளில் சிறந்த எமது பாட்டனாரே, உங்களுக்கு எனது நமஸ்காரம். வெகு நாட்களாக என் மனதில் இருக்கும் ஐயத்தைத் தீர்த்து வைக்க வேண்டுகிறேன். எமது தாய் குந்தி தேவி, எனது உடன்பிறந்தவர்கள் யுதிர்ஷ்டிரர், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் மற்றும் பாஞ்சாலி இவர்கள் அனைவரும் பிரதி ஏகாதசி தோறும் விரதம் இருக்கின்றனர். ஏகாதசி விரதத்தை முறையாக கடைபிடித்து பகவான் வாசுதேவரை மகிழ்வித்து அவரது ஆசிர்வாதத்திற்கு உரியவர்கள் ஆகின்றனர். மேலும், என்னையும் ஏகாதசி விரதத்தை முறைப்படி இருக்க வலியுறுத்துகின்றனர்.
நான் பகவான் விஷ்ணுவை மனதார பூஜிப்பேன், அவருக்கு உண்டான பூஜைகள் அனைத்தையும் கூட செய்வேன், ஆனால் என்னால் ஒரு வேளை கூட உணவு உண்ணாமல் இருக்க முடியாது. வாயுதேவரின் புத்திரனான 'சமானப்ராணா' (எந்த பொருளையும் செரிமானம் செய்யக்கூடிய வாயு) எனது வயிற்றில் உள்ளது.  அதனால் என்னால் பசி தாங்க இயலாது. ஆகவே, பாட்டனார் அவர்களே, ஏகாதசி விரதம் கடைபிடிக்காமல் இருந்து, நான் முக்தி அடையும் யுக்தியை எனக்கு கூறுவீர்களாக, என்று பீமசேனன், ஸ்ரீ வியாச ரிஷியிடம் கேட்கிறார்.

இதனைக்கேட்ட வியாசரிஷி, பீமா, நீ நரகத்திற்கு செல்லாமல் இருந்து சொர்க்கத்திற்கு  மட்டுமே செல்லவேண்டும் என்றால், பிரதி மாதம் இரண்டு ஏகாதசி விரதமும் கடைபிடித்தே ஆக வேண்டும் என்று கூறுகிறார்.

பீமன், மீண்டும் எடுத்துரைக்கிறார்... ஓ பாட்டனாரே, தயவு செய்து எனது நிலையைப் புரிந்து கொள்ளுங்கள்... என்னால் ஒரு வேளைகூட உண்ணாமல் இருக்க முடியாது, நான் எப்படி வருடம் முழுவதும் 24 ஏகாதசி விரத நாட்களில் மூன்று வேளையும் உண்ணாமல் இருக்க முடியும் ??? வ்ரிகா  (Vrika) எனும் அக்னி எனது வயிற்றில் உள்ளது.  நான் முழுவதும் உண்டால் மட்டுமே, எனது வயிற்றில் உள்ள அந்த அக்னி அடங்கும், என்று மீண்டும் கூறுகிறார்...

இந்த இடத்தில், அக்னி பற்றி ஒரு சில வரிகளில் பார்த்துவிடுவோம்...பொதுவாக அக்னி மூன்று வகைப்படும். 'தவாக்னி' - மரங்களை எரிப்பதன் மூலம் வருவது. 'ஜாடராக்னி' - நமது வயிற்றின் உள்ளே இருந்து நாம் உண்ணும் அனைத்தையும் செரிக்க வைக்கக் கூடியது. , 'வடவாக்னி' - இது சூடான மற்றும் குளிர்ந்த பனி ஒரே நேரத்தில் உராயும் பொழுது வரக்கூடியது, குறிப்பாக கடலின் மேல் ஏற்படும்.
இதில், ஜாடராக்னியின்   உச்ச பட்ச விளைவாக, 'வ்ரிகா' எனும் எதனையும் உடனே செரிமானம் செய்யக்கூடிய அக்னி வடிவம் தான் பீமனின் வயிற்றில் இருந்தது. அதன் காரணமாகத்தான், மற்ற அனைவரையும் விட 100 மடங்கு அதிகம் சாப்பிட்டாலும் கூட, அவை உடனே செரிமானம் ஆகிவிடக்கூடிய வாய்ப்பு பீமனுக்கு இருந்தது.

சரி மீண்டும் புராணத்தினுள் நுழைவோம்...
பீமன், தனது பாட்டனாரிடம் மன்றாடுகின்றார்; தயை கூர்ந்து எனது நிலையைப் புரிந்து கொண்டு எனக்கேற்றார் போல ஒரே ஒரு ஏகாதசி விரதத்தை சொல்லுங்கள், அன்று ஒரு நாள் மட்டும், நான்  முழுவதும் உண்ணாமல் இருக்க முயற்சி செய்கிறேன் என்று மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறார்.

பீமனின் நிலை, ஏற்கனவே ஶ்ரீ வியாசருக்கு நன்றாகத் தெரியும், இருப்பினும், பீமனைப்போன்று கலியுகத்திலும் பலர் எல்லா ஏகாதசி நாட்களிலும் விரதம் இருக்கும் வாய்ப்பு இல்லாமல் இருப்பர் என்பதை மனதில் எண்ணி, பீமனுக்கு உபாயம் கூறுவது போல நமக்கும் உபாயம் அருளினார்...
வியாச மகரிஷி என்ன உபாயம் கூறினார் ?

ஓ, பீமா, நான் உங்கள் அனைவருக்கும் வேத சாஸ்திர நெறிமுறைகளையும், பூஜா விதிகளையும் மற்றும் அனைத்து புராண விளக்கங்களையும் கூட கூறியுள்ளேன்.  இருப்பினும், அடுத்து வரக்கூடிய கலியுகத்தில், இதனை அனைவரும் முறையாகக் கடைப்பிடித்து நரகத்தை தவிர்த்து சொர்க்கத்திற்கு செல்லும் வாய்ப்பு மிகவும் குறைவே...அதற்கு எளிய உபாயமாகத்தான் பிரதி சுக்ல பட்ச ஏகாதசி மற்றும் கிருஷ்ண பட்ச ஏகாதசி விரதம் மானுடர்களுக்கு வரப்பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளது. நீ அதிலும் விதிவிலக்கு கேட்டு ஒரே ஒரு ஏகாதசியை சொல்ல சொல்கிறாய். ?!
சரி, உன்னைப்போன்று ஒவ்வொரு மாதமும் ஏகாதசி விரதம் இருக்க முடியாதவர்கள், சூரியன் ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு பயணிக்கக்கூடிய ஜேஷ்ட மாதத்தில் (May / June) சுக்ல பட்சத்தில் வரக்கூடிய  ஏகாதசி விரதத்தை, உண்ணாமல் மட்டும் அல்ல, ஒரு துளி நீர் கூட அருந்தாமல் இருந்து கடைபிடிக்க வேண்டும்.

('நீர் கூட அருந்தாமல்' என்று பொருள் படுவதால் இது "நிர்-ஜல" ஏகாதசி என்று ஆயிற்று...) இந்த விரத நேரமானது ஏகாதசி அன்று காலை சூர்ய உதயம் முதல் மறுநாள் 'துவாதசி' காலை சூர்ய உதயம் வரை ஆகும்.
பின்னர், துவாதசி அன்று காலை குளித்த பின்னர்  பகவான் விஷ்ணுவை பிரார்த்தனை செய்துவிட்டு, அந்தணருக்கு தங்கம் அல்லது வேறு வஸ்திரம் தானம் செய்துவிட்டு (அல்லது அவரவர்க்கு முடிந்த வரையில் ஏதாவது ஒரு குடை, செருப்பு, கைத்தடி அல்லது முடிந்த  அளவு பணம் தானம் செய்துவிட்டு) அதன்பின்பு கண்டிப்பாக அவருக்கு நீர் அருந்தக் கொடுத்து அதன் பின்னர் அவருக்கும் உணவளித்து, தானும் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று  வியாச மகரிஷி பீமனுக்கு உபாயம் கூறி அருளினார்...

*நிர்ஜல ஏகாதசியின் பலன்கள் என்ன ?*

மேலும், வியாச மகரிஷி தொடர்ந்து கூறுகையில், ஓ வாயுபுத்திரனே, இப்படி நீர் கூட அருந்தாமல் மிகக்கடுமையாக இந்த விரதத்தை கடைபிடித்தால், அவர்களது மலையளவு பாவமும் குறையும். பல்வேறு புண்ய நதிகளில் நீராடிய பலனைப்பெறுவர். மேலும், பிரதி மாதம் சுக்ல பட்ச, கிருஷ்ண பட்ச ஏகாதசி விரதம் இல்லாமல் இருந்தாலும், அதற்கு விரதம் இருந்த பலனையும் சேர்த்து பெறுவர்.

ஓ, 'வ்ருகோதரா' (மிக அதிக விருப்பம் கொண்டு அதிகமாக உண்பவன் என்று அர்த்தம்), இந்த நிர்ஜல ஏகாதசி விரதத்தை கடைப் பிடித்தவர்களுக்கு, தனம், தான்யம், மற்ற அனைத்து செல்வங்களும் தானாக வந்து சேரும். மேலும், அவர்களது இறப்பிற்குப் பின், அவர்களை கூட்டிச்செல்ல யமதூதர்கள் வர மாட்டார்கள், மாறாக விஷ்ணு தூதர்கள் தான் வருவார்கள். அந்த ஆன்மா, விஷ்ணுவின் பாதத்தை அடையும்.
துவாதசியுடன் இணைந்து இருக்கும் இந்த ஏகாதசி நாளில் விரதம் இருந்து, அதன் பின்னர் அந்தணர்களுக்கு அளிக்கும் நீர், குடை, செருப்பு , கைத்தடி ஆகிய தானங்கள், முன்னோர்களுக்கு ஸ்ரார்த்தம் செய்த பலனைத்தரும்.
ஆகவே, பீமசேனா, இந்த 'ஜேஷ்ட சுக்ல ஏகாதசி' அல்லது 'நிர்ஜல ஏகாதசி' விரதத்தை முழு பக்தியுடன் அனுஷ்டித்து, அந்த விஷ்ணுவின் பரமபதத்தினை அடைவாயாக என்று கூறி ஆசி வழங்கினார்...
இவ்வாறு ப்ரம்ம-வைவர்த்த- புராணம் விளக்குகிறது.

பீமன் மூலமாக, நாமும் இந்த அதி உன்னத 'நிர்ஜல ஏகாதசி' விரதத்தினைப் பற்றித் தெரிந்து கொள்ளும் பாக்கியம் கிடைக்கப்பெற்றோம்.

இவ்வாறு, இதன் பெருமைகளை பீமனிடம் கூறிய ஸ்ரீ வியாசமகரிஷி மேலும் கூறுகையில், ஓ பீமசேனா, இந்த 'நிர்ஜல ஏகாதசி' விரத கதையினை படித்தவர்களும், கேட்டவர்களும் மற்றும் பிறருக்கு எடுத்துச் சொல்பவர்களும் மிகுந்த புண்ய பலனைப் பெறுகின்றனர். அவர்கள், அந்தணர் ஒருவருக்கு 'கோ தானம்' செய்த புண்ய பலனைப்பெறுவர், என்று கூறினார்.

ஆகவே, நமது இப்பிறவி எப்படி இருப்பினும், நாம் செய்த பாவங்களை போக்கவும், அடுத்த ஜென்மாவில் (அடுத்த பிறவி வேண்டாம் என்று கூறினாலும், ஒருவேளை கர்ம பலன் தொடர்ச்சி இருப்பின்) மிகுந்த புண்ணிய ஆத்மாவாக பிறக்கவும்  'நிர்ஜல ஏகாதசி'  தினத்தில் நாம் செய்ய வேண்டியவை:

வாய்ப்பு இருப்பவர்கள் முழு நாளும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். (அல்லது அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப ஒரு வேளையோ அல்லது  இரு வேளைகளோ இருக்கலாம்.)  வாய்ப்பு இருப்பவர்கள், அன்று நாள் முழுவதும் பகவான் நாமாவை ஜபிக்கலாம். இருக்கும் இடத்தில் இருந்தே, பெருமாளை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளலாம்...    விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த விரத கதையையும், பலனையும் பிறருக்கு எடுத்து கூறுவதன் மூலம், 'கோ' தானம்  செய்த புண்ணியம் பெறுகிறார்கள்.

ஶ்ரீ கிருஷ்ணார்பணமஸ்து