Showing posts with label காமிக ஏகாதசி. Show all posts
Showing posts with label காமிக ஏகாதசி. Show all posts

Tuesday, July 14, 2020

காமிக ஏகாதசி/ Kaamika ekadhashi



🌻🌻🌻🌻🌻 காமிக ஏகாதசி 🌻🌻🌻🌻🌻

16/07/2020 ஏகாதசியின் பெயர் "காமிக ஏகாதசி" என்றழைக்கப்படுகிறது. அப்படி என்ன இந்த சிறப்புகள் இந்த காமிக ஏகாதசியில் உள்ளது? அதன் வரலாறு என்ன? இந்த ஏகாதசி விரதம் இருப்பதால் கிடைக்கும் பலன்கள் தான் என்ன? என்பதைப் பற்றி நாம் அறிந்து கொள்வோமா?

🌹🌹 கிருஷ்ணனை நமஸ்கரிக்கும் யுதிஷ்டிரர் :-

காமிகா ஏகாதசியின் பெருமைகளைப் பற்றி "பிரம்மவைவர்த்த புராணத்தில்" பகவான் கிருஷ்ணருக்கும், யுதிஸ்டிரருக்கும் இடையேயான உரையாடலில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளது.

யுதிஷ்டிரர் பகவான் கிருஷ்ணரிடம் ஆடி மாதம்(ஆஷாட மாச) தேய்பிறையில் தோன்றக்கூடிய ஏகாதசி பற்றி அறிய விரும்புகிறேன். என் மீது கருணை கொண்டு, அதனைப் பற்றி எனக்கு விரிவாக எடுத்துரையுங்கள் என்று யுதிஷ்டிரர் கிருஷ்ணரிடம் கூறினார்.

பகவான் கிருஷ்ணர் கூறியதாவது, "தர்மத்தை எந்நிலையிலும் விடாது காக்கும் யுதிஷ்டிரா, ஒருவனது அனைத்து பாவங்களையும் அழித்து, சுப நிகழ்வு ஏற்படுத்தக்கூடிய இந்த ஏகாதசி விரதத்தின் மகிமைகளைச் சொல்கிறேன்.கவனமாகக் கேள்" என்று கூறிவிட்டு பின்வருமாறு கூறினார். 

🌷🌷 கிருஷ்ணர் கூறியது :-

ஒருமுறை நாரத முனிவர், பிரம்மாவிடம் இந்த ஏகாதசியின் மஹாத்மியத்தை பற்றி எடுத்துச் சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். நாரதர் தனது தந்தையை நோக்கி, "தண்ணீரில் பிறக்கும் தாமரை மலரின் மீது, அரசன் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதைப் போலக் காட்சி அளிப்பவரே, அனைத்து உயிர்களைக் காக்கும் வல்லமை பெற்றவரே, மைந்தனான எனக்கு ஆடி மாதம் (ஆஷாடா மாச) வரும் கிருஷ்ணபட்சத்தில் வரும் ஏகாதசியின் பெயர் என்ன? அப்புண்ணிய தினத்தன்று வழிபட வேண்டிய கடவுளைப் பற்றியும், கடைப்பிடிக்க வேண்டிய விரத வழிமுறைகளையும், விரதம் மேற்கொள்வதால் கிட்டும் நற்பலன்களையும் விரிவாக எடுத்துச் சொல்லுங்கள் என்று வேண்டிக் கொண்டார்.

பிரம்மா தன் மகனிடம் "அருமை மகனே! நாரதா! இவ்வுலகத்தின் நன்மைக்காக நீ தெரிந்து கொள்ள விரும்பிய இந்த ஏகாதசி பற்றி விரிவாகச் சொல்கிறேன், கவனமாகக் கேள் என்றார்.

ஆடி (ஆஷாடா) மாதத்தில் வரும் கிருஷ்ணபட்சத்தில் "காமிகா ஏகாதசி" என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. மிகவும் புண்ணியமானது இந்த ஏகாதசி. காமிகா ஏகாதசியின் மகத்துவம் சொல்லில் அடங்காதது. அது என்ன சொல்லில் அடங்காதது??? இந்த ஏகாதசியின் மகத்துவத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம் என்பது பொருள்).

🌺 இந்த ஏகாதசியின் மஹாத்மியத்தை வெறும் காதால் கேட்பவர்களே, "அஸ்வமேத யாகம்" நடத்திய பலனை பெறுவர் என்றால்? இதன் மகிமையை நாமே உணர்ந்து கொள்ளலாம்.

🍁 சங்கு, சக்கரம், கதை, தாமரை ஆகிய நான்கு திவ்ய ஆயுதங்களையும் தன் திருக்கரங்களில் ஏந்தி "கதாகரன்" என்ற திருநாமத்தாலும், ஸ்ரீதரன், ஸ்ரீ ஹரி, ஸ்ரீ விஷ்ணு, மாதவன், மதுசூதனன் என்ற மற்ற திருநாமங்களாலும் போற்றப்படும் மஹாவிஷ்ணுவை வணங்குவோர்க்கும், அவரது பாதார விந்தங்களே சரணாகதி (அதாவது பாதத்தை சரணாகதி அடைபவர்கள்) என்று தியானிப்போர்க்கும், நிச்சயமாக பெரும் நற்பலன் கிட்டும்.

🌾🌾 காமிகா ஏகாதசியின் பலன்கள் :-

🌻காமிகா விரதத்தின் மகிமையைக் காதால் கேட்டாலே "அஸ்வமேத யாகம்" செய்த பலன் கிடைக்கும்.

🌻காமிகா ஏகாதசியன்று மஹாவிஷ்ணுவிற்குச் செய்யப்படும் பூஜை, ஆராதனை ஆகியவை ஒருவருக்கு, "புண்ணிய ஷேத்திரமான, காசியின் கங்கையில் நீராடுதல், நைமிசாரண்ய வனத்தில் நீராடி இறைவனை வழிபடுதல், அல்லது பூமியில் மஹாவிஷ்ணுவான என்னை மூலவராக வழிபடும் கோவிலின் திருக்குளங்களில் நீராடி வழிபடுதல் ஆகியவற்றால் கிடைக்கக்கூடிய அருளாசிகளை விட பன்மடங்கு மேலான புண்ணியத்தைத் தரவல்லது, அருளையும் பெற்றுத் தரக்கூடியது இந்த "காமிக ஏகாதசி".

🌻பனி சூழ்ந்த இமயமலையில் அமைந்துள்ள கேதார்நாத் தரிசனம் அல்லது சூரிய கிரகணத்தின் போது குருஷேத்ரத்தில் புண்ணிய நீராடுதல் அல்லது பூமியையே தானமாக அளிப்பதால் கிட்டும் பலன்கள் அல்லது பூஜைக்குரிய விஷ்ணு மூர்த்திகளாக கருதப்படும் சாளக்கிரமங்களை தன்னுள்ளே கொண்டுள்ள கண்டகீ நதியில் நீராடுதல், அல்லது சிம்ம ராசியில் குரு பகவான் கோட்சாரம் செய்யும் காலம், சோமவார பூர்ணிமா தினத்தில் கோதாவரி நதியில் நீராடுதல் இவை அனைத்தையும் செய்வதால் கிட்டும் நற்பலனை விட ஆடி மாதம், கிருஷ்ணபட்சத்தில் வரும் காமிகா ஏகாதசி விரதத்தை அதற்குரிய வழிமுறைப்படி மேற்கொள்வதுடன், அன்று பகவான் கிருஷ்ணனை ஆராதனையுடன் வழிபடுவது மிக அதிக நற்பலனைத் தந்தருளும் இந்த "காமிக ஏகாதசி".

🍁 இந்த விரதத்தை கடைப்பிடிப்பதால் ஏற்படும் நன்மையானது, பால் சுரக்கும் பசுவை கன்றுடனும், தீவனங்களுடனும் தானமாக அளிப்பதால் உண்டாகும் நற்பலனுக்குச் சமமானது.

🍀 இந்த காமிக ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் வைகுண்டத்திற்குச் செல்வார்கள்.

🌹 இந்த தினமானது மற்ற தினங்களை விடவும் பவித்ரமான நாளாகும்.

🌻 நாரதா! ஸ்ரீ ஹரியே, எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணரே இந்த ஏந்த ஏகாதசி விரதத்தைப் பற்றிக் கூறும் போது, "காமிகா ஏகாதசியன்று விரதத்துடன் உபவாசம் இருப்பதால் கிடைக்கும் புண்ணியம், பக்தி இலக்கியங்கள் அனைத்தையும் படிப்பதால் கிட்டும் புண்ணியத்தை விட பன்மடங்கு மேலானது" என்று அருளியுள்ளார்.

🌺 காமிகா ஏகாதசியன்று விரத வழிமுறைகளின் படி உபவாசம் இருந்து, இரவில் கண் விழித்து ஸ்ரீ மஹாவிஷ்ணுவின் மகிமையை விளக்கும் புராணங்களை பாராயணம் செய்பவர் யமதர்மராஜனின் கோபத்திற்கு ஒரு போதும் (எப்போதும்) ஆளாக மாட்டார்கள். 

🍁 அவர்கள் பிறப்பு, இறப்பு என்ற மாயச் சக்கரத்திலிருந்து விடுபட்டு மறுபிறப்பில்லா நிலையை அடைவர் என்பது நிச்சயம்.

🍀 முனிவர்களும், யோகிகளும் இந்த விரதத்தை மேற்கொண்டு உயர்ந்த நிலையை அடைந்துள்ளனர்.

🌸 ஆகவே, நாமும் நம்மால் இயன்றவரை விரதமிருப்பது நல்லது. 

🌻 பகவான் ஸ்ரீமந்நாராயணரை துளசி இலைகளால் வணங்குவோர் தன்னுடைய பாவத்தின் விளைவுகளிலிருந்து விடுதலை அடைவார்கள்.

எப்படி தாமரை இலையானது தண்ணீரில் இருந்தாலும், தண்ணீருடன் தொடர்பு இல்லாமல் இருக்கிறதோ!!! அதே போல அவர்கள் பாவங்கள் தீண்டாமல் வாழ்வார்கள்.

🌹 எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணருக்கு அன்று பவித்ரமான ஒரு துளசி இலையை சமர்ப்பித்து பூஜிப்பவர் அடையும் புண்ணியமானது, ஒருவர் 200 கிராம் தங்கம், 800 கிராம் வெள்ளி தானம் செய்வதால் அடையும் புண்ணியத்திற்குச் சமமானது இந்த ஏகாதசி. 

🌴 முத்து, பவளம், மாணிக்கம், புஷ்பராகம், வைரம், வைடூரியம், கோமேதகம் போன்ற விலைமதிப்பில்லாத கற்களினால் செய்யப்படும் பூஜையை விட பவித்ரமான துளசி இலைகளால் மட்டும் செய்யப்படும் பூஜையானது பகவான் விஷ்ணுவிற்கு மிகுந்த சந்தோசத்தை அளிக்கிறது.

🌺 துளசி தேவிக்கு (துளசி மாடம்) தினம் அணையாமல் எரியும் நெய் விளக்கேற்றி பூஜிப்பவரின் புண்ணியக் கணக்கை சித்ரகுப்தனாலும் கணக்கிட இயலாது. பவித்ரமான காமிகா ஏகாதசி பகவானுக்கு மிகவும் பிரியமான நாளாகும். ஆகையால் அன்று முன்னோர்கள் அனைவரும் நெய் விளக்கேற்றி பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட்டு சுவர்க்கத்தை அடைந்து அமிர்தத்தை அருந்தும் பாக்கியம் பெற்றனர். 

🍀 எவரொருவர் இன்று நெய் அல்லது எள் எண்ணையினால் விளக்கேற்றி ஸ்ரீ கிருஷ்ணரை பூஜித்து ஆராதிக்கிறாரோ, அவர் தன் பாவங்களிலிருந்து விடுதலை பெற்று, முடிவில் சூரியனின் வாசஸ்தலமான சூரிய மண்டலத்தை பத்து மில்லியன் விளக்குகளின் பிரகாசத்திற்கு சமமான பிரகாச உடலுடன் அடைவர்.

🐚 இந்த ஏகாதசி மிகவும் பவித்ரமானதாகும். உபவாசம் இருக்க இயலாதோர் இங்கு குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றினாலே, தங்கள் முன்னோர்களுடன் ஸ்வர்க்கம் அடைவர்". இவ்வாறு பிரம்மதேவர் காமிக ஏகாதசி விரதத்தைப் பற்றி நாரதருக்குக் கூறினார்.

🌾🌾 கிருஷ்ணர் கூறுவது :-

யுதிஷ்டிரரிடம் இதைக் கூறிய கிருஷ்ணர் "யுதிஷ்டிரா, பாவங்களை நீக்கி, எண்ணில்லாத பலன்களை வழங்கும் காமிகா ஏகாதசியின் பெருமைகளை, பிரஜாபதி பிரம்மா தனது புதல்வன் நாரதருக்கு உரைத்ததை அப்படியே நான் உனக்கு உரைத்துள்ளேன்".

இப்புனித காமிக ஏகாதசி விரதமானது பிராமணனை கொன்றதால் உண்டான பாவம் (பிரம்மஹத்தி தோஷம்), கருவில் வளரும் குழந்தையை அழித்த பாவம் போன்ற கொடிய பாவத்திலிருந்து நிவர்த்தி அளிக்கும் பேறு பெற்றது.

இந்த விரதம் அதிக புண்ணியத்தை அளிக்க வல்லது. எனவே, இவ்விரதத்தைக் கடைப்பிடிப்போர் பக்தியில் சிறந்து விளங்குவர்.

அப்பாவிகளைக் கொல்வதால் உண்டாகும் பிரம்மஹத்தி தோஷம், சிசு ஹத்தி தோஷம், பக்தியான் மற்றும் களங்கமில்லாத பெண்ணைக் கொன்ற பாவங்களின் விளைவுகளிலிருந்து காமிகா ஏகாதசியின் மஹாத்மியத்தைக் கேட்பதால் நிவர்த்தி பெறலாம்.

ஆனால், இதைக் கொண்டு ஒருவர் முதலில் கொலைப் பாதகம் புரிந்து விட்டு பின்னர் காமிகா ஏகாதசியின் மகாத்மியத்தைக் கேட்பதால் நிவர்த்தி பெறலாம் என்று நினைக்கக் கூடாது. அது தவறானது. அறிந்தே கொலை பாதகம் போன்ற கொடிய பாவங்களைப் புரிவதற்கு எந்த சாஸ்திரத்திலும் மன்னிப்பே கிடையாது என்பதை ஞாபகத்தில் இருத்தவும்" என்றார்.

எவரொருவர் பவித்ரமான இந்த காமிக ஏகாதசியின் பெருமையை விவரிக்கும் மஹாத்மியத்தை பக்தியுடனும், சிரத்தையுடனும், நம்பிக்கையுடனும் கேட்கிறாரோ, அவர் தன் பாவத்திலிருந்து விடுபட்டு மஹாவிஷ்ணுவின் வாசஸ்தலமான விஷ்ணுலோகம் அடைவர், என்று பகவான் கிருஷ்ணர் யுதிஷ்டிரருக்கு காமிக ஏகாதசி விரத மஹாத்மியத்தைக் கூறி முடித்தார்.

ப்ரஹ்ம வைவதர்த்தன புராணம், *ஆஷாடா (ஆடி) மாதம் கிருஷ்ண பட்ச ஏகாதசி* அதாவது காமிகா ஏகாதசி என்று அழைக்கப்படும் ஏகாதசியின் படலம் முடிவுற்றது.

"ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ!!! ஓம் நமோ நாராயணாய நமஹ!!!".

ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே 
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே