*பத்மினி ஏகாதசி*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
*அதிக மாச சுக்ல பக்ஷ ஏகாதசி*
*27 September 2020 Sunday*
🌹🌹🌹🌹🌹🌹🌹
ஒருமுறை, மகாராஜா யுதிஸ்டிரர் கூறினார். ஓ, கிருஷ்ண ஓ, ஜனார்தனா, அதிக மாசத்தில் சுக்ல பக்ஷ ஏகாதசியின் பெயர் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை பற்றி எனக்கு கூறுங்கள். மேலும் இதை கடைபிடிப்பவர் என்ன பலனை அடைவார் என்பதையும் எனக்கு கூறுங்கள்.
*பத்மினி ஏகாதசி விரத முறை*
பகவான் கிருஷ்ணன் பதில் அளித்தார். ஓ! மன்னா! இந்த *புனிதமான ஏகாதசியின் பெயர் பத்மினி*. இந்த ஏகாதசியை சிரத்தையுடன் கடைப்பிடிப்பவர் பகவான் பத்மநாபரின் பரமபாதத்தை அடைவார். இந்த ஏகாதசி ஒருவரின் எல்லா பாவ விளைவுகளையும் அழித்துவிடும். இந்த ஏகாதசியின் முழு பலன்களை பற்றி எடுத்துரைக்க பிரம்மாவாலும் இயலாது. இருப்பினும் முன்பு ஒரு காலத்தில் செல்வம் மற்றும் முக்தியை அளிக்கக்கூடிய இந்த பத்மினி ஏகாதசியின் புகழை பகவான் பிரம்மா நாரதரிடம் விளக்கி கூறினார்.
பகவான் கிருஷ்ணர் தொடர்ந்தார். ஒருவர் இந்த ஏகாதசியை கடைபிடிக்க, ஏகாதசியின் முன்தினமான தசமி நாளன்றே துவங்க வேண்டும். ஒருவர் மற்றவர்கள் சமைத்த உணவை உட்கொள்ள கூடாது. வெண்கல தட்டில் உண்ணக்கூடாது மற்றும் உளுந்து, கீரை, தேன் ஆகியவற்றை தசமி அன்று உட்கொள்ளக்கூடாது. ஒருவர் ஏகாதசியன்று வெறும் தரையில் படுக்க வேண்டும். மற்றும் பிரம்மச்சரியத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். ஏகாதசியன்று ஒருவர் விடியற் காலையில் எழுந்து பல்தேய்த்து குளிக்க வேண்டும். பிறகு சந்தனம், ஊதுவத்தி, விளக்கு, கற்பூரம், நீர் ஆகியவற்றை கொண்டு முழுமுதற் கடவுளை பூஜிக்க வேண்டும்.
*பலன்கள்*
புனித நாமங்களை ஜபிக்க வேண்டும். ஒருவர் தேவையற்ற பேச்சுக்களில் ஈடுபடக்கூடாது. ஏகாதசி அன்று இரவு விழுத்திருந்து புனித நாமங்கள் மற்றும் பகவானின் தன்மைகளை புகழ வேண்டும். ஏகாதசி இரவில் முதல் மூன்று மணி நேரம் விழுத்திருப்பவர் அக்னிஸ்தோமா யாகத்தை செய்த பலனை அடைவார். முதல் ஆறு மணி நேரம் விழித்திருப்பவர் வாஜ்பேய யாகத்தின் பலனை அடைவார். முதல் ஒன்பது மணி நேரம் விழுத்திருப்பவர் அஸ்வமேத யாகத்தின் பலனை அடைவார். முழு இரவு விழித்திருப்பவர் ராஜசூய யாகத்தின் பலனை அடைவார். துவாதசியன்று வைஷ்ணவர்கள் மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்த பிறகு விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இந்த முறையில் இந்த ஏகாதசியை கடைப்பிடிப்பவர் நிச்சயமாக முக்தி அடைவார்.
*பத்மினி ஏகாதசி கதை*
பகவான் கிருஷ்ணர் தொடர்ந்தார். ஓ, பாவமற்றவனே, உனது வேண்டுக்கோளுக்கு, இணங்கி நான் இந்த ஏகாதசியை கடைப்பிடிக்கும் முறையினை விளக்கினேன். இப்பொழுது புலஸ்ய முனிவர், நாரத முனிவருக்கு கூறிய சுவராஸ்யமான கதையை கூறுகிறேன் கவனமாக கேள்.
*நாரதரின் வியப்பும் புலஸ்ய முனிவரின் விளக்கமும்*
ஒரு முறை கார்த்தவீர்யார்ஜூனா இராவணனை தோற்கடித்து சிறையில் அடைத்தார். இராவணனை இக்கோலத்தில் கண்ட புலஸ்ய முனிவர் கார்த்வீர் யார்ஜீனாவிடம் சென்று இராவணனை விடுதலை செய்யுமாறு வேண்டினார். பெரு முனிவரின் வேண்டுதலுக்கு இணங்கி அரசன் இராவணனை விடுதலை செய்தார். இந்த வியக்கத்தக்க நிகழ்ச்சியை கேட்ட நாரத முனிவர் புலஸ்ய முனிவரிடம் கேட்டார். ஓ முனிவரில் சிறந்தவரே, இந்திரன் உள்பட எல்லா தேவர்களையும் வென்ற இராவணனை கார்த்தவீர்யார்ஜீனா வால் எவ்வாறு வெல்ல முடிந்தது. இதனை எனக்கு விளக்குங்கள்.
புலஸ்ய முனிவர் பதில் அளித்தார். ஓ, நாரதா, திரேதா யுகத்தில் ஹைஹயா வம்சத்தில் பிறந்த கிருதவீர்யா என்ற மன்னர் இருந்தார். இவருடைய தலைநகர் மாஹிஸ்மதீபுரி. இவருக்கு ஆயிரம் மனைவிகள் இருந்தனர். ஆயினும் நாட்டை ஆள தகுந்த ஒரு மகன் இருக்கவில்லை. இவர் தன் முன்னோர்களையும் சாதுக்களையும், பூஜித்து வந்தார். மற்றும் முனிவர்களின் வழிமுறைப்படி பல விரதங்களை மேற்கொண்டார். இருப்பினும் அவருக்கு ஓரு ஆண்வாரிசு உண்டாகவில்லை. ஆகையால் மன்னர் தவம் செய்ய முடிவு செய்தார். தன் ராஜ்யத்தின் பொறுப்புகளை எல்லாம் பிரதம மந்திரியிடம் ஒப்படைத்து விட்டு தவம் செய்வதற்காக மரப்பட்டையால் செய்த ஆடையை அணிந்து காட்டிற்கு சென்றார்.
*தவம்*
தனது மனைவிகளில் ஒருவரான பத்மினி, மன்னர் அரண்மனையை விட்டு வெளியேறுவதை கண்டார். பத்மினி இக்ஸ்வாகு வம்சத்தில் தோன்றிய ஹரிச்சந்திரனின் மகள். பத்மினி தன் கணவர் தவம் செய்வதற்காக காட்டிற்கு செல்வதை அறிந்து உடனே தானும் தன் ஆபரணங்களை துறந்து கணவருடன் மந்தாரா மலைக்கு சென்றனர்.
மந்தார மலை உச்சியில் மன்னர் கிருதவீர்யா மற்றும் தன் மனைவி பத்மினி இருவரும் பத்தாயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்தனர். தன் கணவரின் உடல் நாளுக்கு நாள் மெலிந்து போவதை கண்ட பத்மினி இதற்கு ஒரு தீர்வு காண நினைத்தாள்.
*அனுசுயா தேவியின் ஆலோசனை*
பத்மினி அத்ரி முனிவரின் மனைவியான அனுசுயாவிடம் கேட்டார். ஓ, கற்புக்கரசியே, என் கணவர் தவம் புரிவதில் பத்தாயிரம் ஆண்டுகள் கழித்தார். ஆயினும், அவரின் துன்பங்களை நீக்க கேசவனை திருப்திப்படுத்த முடியவில்லை.
ஓ, அதிர்ஷ்டசாலியே, எந்த ஒருவிரதத்தை மேற்கொண்டால் பகவான் திருப்தியடைந்து சிறந்த மன்னனாகக் கூடிய ஒரு மகனை எனக்கு அருள்வார் என்பதை கூறுங்கள். இவ்வாறு வேண்டிய பத்மினியிடம் அனுசுயா கூறினார். முப்பத்தி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அதிக மாதம் தோன்றும். இந்த *அதிக மாதத்தில் வரக்கூடிய ஏகாதசிகள் பத்மினி மற்றும் பரமா* என்பன. இந்த ஏகாதசியை கடைபிடிப்பதால், பகவான் மகிழ்ச்சி அடைந்து உன்னுடைய கோரிக்கையை நிறைவேற்றுவார்.
*கருடரூடனின் காட்சியும் ஆசியும்*
பகவான் கிருஷ்ணர் மேலும் தொடர்ந்தார். அனுசுயாவின் வழிமுறைப்படி அரசி பத்மினி இந்த ஏகாதசியைக் கடைப்பிடித்தாள். கேசவன் கருட வாகனத்தில் பத்மினியின் முன் தோன்றி தனக்கு வேண்டிய வரத்தை கேட்கச் சொன்னார். அரசி முதலில் பகவானை வணங்கி தனது பிரார்த்தனைகளை சமர்ப்பித்தார். பிறகு தனக்கு ஒரு மகனை அருளுமாறு வேண்டினார். பகவான் கூறினார், ஓ, சாந்தமும், நற்குணமும் நிறைந்த பெண்ணே, உன்னுடைய விரதத்தால் நான் திருப்தி அடைந்தேன். அதிக மாசத்தை விட எனக்கு பிரியமான மாதம் வேறு எதுவும் இல்லை. இந்த மாதத்தின் ஏகாதசிகள் எனக்கு பிரியமானவை. நீ இந்த ஏகாதசியை சரியாக கடைபிடித்திருக்கின்றாய். எனவே நிச்சயமாக உங்களுடைய விருப்பத்தை பூர்த்தி செய்கிறேன்.
பத்மினியிடம் இவ்வாறு கூறிய பகவான் பிறகு, அரசன் முன் சென்று ஓ, சிறந்த மன்னா, உன் மனைவியின் ஏகாதசியின் விரதத்தால் நான் மகிழ்ச்சி அடைந்தேன். உனக்கு வேண்டிய வரத்தை கேள், என்றார்.
விஷ்ணு பகவானின் வார்த்தைகளை கேட்ட அரசன் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். மிக வலிமையுடன் எப்பொழுதும் வெற்றியை அடையும்படியான ஒரு மகனை தனக்கு அருளுமாறு வேண்டினார். ஓ, மதுசூதனா, பிரபஞ்சத்தின் பகவானே, தேவர்கள், மனிதர்கள், பாம்புகள், மற்றும் அரக்கர்கள் போன்றவர்களால் வெல்ல முடியாத ஒரு மகனை எனக்கு அருளுங்கள் என்று வேண்டினான். பகவான் மன்னர் வேண்டிய வரத்தை அருளி மறைந்தார்.
*கார்த்தவீரயார்ஜுன் ஜனனம்*
முழுமையாக திருப்தியடைந்த மன்னனும் அவர் மனைவியும் தங்கள் பழைய உடல்நிலையை அடைந்து தங்கள் நாட்டிற்கு திரும்பினர். அரசி பத்மினி, மிக்க வல்லமைபடைத்த ஒரு மகனை பெற்றெடுத்தாள்.
அவன் கார்த்தவீரயார்ஜுன என புகழ் பெற்றான். மூவுலங்களிலும் அவனை விட வலிமைமிக்க வீரர் இருக்கவில்லை. பத்து தலைகள் கொண்ட இராவணனும் கார்த்தவீயார்ஜுனாவால் தோற்கடிப்பட்டான்.
இந்த அற்புதமான கதையை கூறிவிட்டு புலஸ்திய முனிவர் விலகி சென்றார்.
பகவான் கிருஷ்ணன் கூறினார், ஓ! பாவமற்ற மன்னா, அதிக மாசத்தில் வரும் ஏகாதசியை பற்றி உன்னிடம் விளக்கினேன். ஓ, மன்னர்களில் சிறந்தவனே இந்த ஏகாதசியை கடைபிடிப்பவர் யாராயினும், பகவான் ஹரியின் பரமபாதத்தை அடைவார்.
கிருஷ்ணரின் வாக்கிற்கு இணங்கி, மகாராஜா யுதிஸ்டிரர் தன் குடும்பத்துடன் இந்த ஏகாதசியை கடைப்பிடித்தார். ஒருவர் தன் வாழ்நாளில் இந்த ஏகாதசியை நம்பிக்கையுடன் கடைப்பிடித்தால் அவர் புகழ் அடைவார். யாரேனும் இந்த ஏகாதசியின் பெருமைகளை பற்றி படித்தாலோ அல்லது கேட்டாலோ அவருக்கு மிகுந்த அளவில் தெய்வ பக்தி கிடைக்கும்.
🌷🌷🌷🌷🌷
ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
🌷🌷🌷🌷🌷🌷🌷
திருமதி. சந்திரிகா அர்விந்த்
No comments:
Post a Comment