Showing posts with label Shravana shukla paksha. Show all posts
Showing posts with label Shravana shukla paksha. Show all posts

Wednesday, July 29, 2020

புத்ரதா ஏகாதசி/ Putradha Ekadashi



Shravana shukla Paksha Ekadashi

ஸ்ராவண சுக்ல பக்ஷ ஏகாதசி


*🌷🌷🌷புத்ரதா ஏகாதசி விரதம்🌷🌷🌷*

*//30-07-2020//*

மனிதர்களைப் பாவிகள் என்று சொல்வது நம் மரபில் இல்லை. மனிதர்கள் பாவிகளாகப் பிறப்பதில்லை என்றும் வினைகளோடே பிறக்கிறார்கள் என்பதுமே நம்பிக்கை. இதையே திருவள்ளுவர் 'இருள்சேர் இருவினை' என்கிறார். இருவினை என்றால் நல்வினை தீவினை ஆகியனவற்றைக் குறிக்கும். நல்வினைகள் நன்மையையும் தீவினைகள் தீமையையும் பயக்கும். ஆனால், இருவினைகளுமே மறுபிறவிக்குக் காரணமாகின்றன.
 
வினைப்பயனால் பிறந்தாலும் அந்த உயிர் இந்த உலகில் வாழ்பவர்களுக்குச் செல்வமாகவே கருதப்படுகிறது. எத்தனை செல்வம் இருந்தாலும் செல்வங்களில் உயரிய மக்கட் செல்வம் இல்லை என்றால் மற்ற செல்வங்கள் அனைத்தும் வீண் என்கின்றன சாஸ்திரங்கள். அந்த மக்கட் செல்வம் வேண்டுவோர் வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்தும் மேற்கொள்ள வேண்டிய விரதங்கள் குறித்தும் சாஸ்திரங்கள் விரிவாகக் குறிப்பிட்டுள்ளன. அவற்றுள் மிகவும் முக்கியமானது பவித்ரோபனா அல்லது புத்ரதா ஏகாதசி.

ஸ்ரவண மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசியே புத்ரதா ஏகாதசி. ஏகாதசி மகாத்மியத்தில் புத்ரதா ஏகாதசியின் மகிமைகளைக் கூறுமாறு யுதிஷ்ட்டிரன் கேட்க அதற்கு பகவான் கிருஷ்ணர் பதில் கூறுகிறார்.

*மக்கட் பேறு வேண்டிய மன்னன் மஹிஜித்*


துவாபர யுகத்தில் மஹிஷமதிபூரி என்னும் ராஜ்ஜியத்தை ஆண்டுவந்த மன்னன் மஹிஜித்க்கு அனைத்து செல்வங்களும் நிறைந்திருந்தன. அவன் தேசத்தில் சகல ஜீவன்களும் குறைவின்றி நிறைவுடன் வாழ்ந்தன. ஆனால், மன்னனுக்கு மனதில் ஒரு பெருங்குறை இருந்தது. தனக்குப் பின் தன் ராஜ்ஜியத்தை ஆள ஒரு வாரிசு இல்லையே என்று வருந்தினான் மஹிஜித்.

தான் தர்மம் தவறாது இருந்தும் தனக்கு இந்த நிலை ஏன் ஏற்பட்டது என்று தன் நாட்டிலிருந்த அறிஞர்களை எல்லாம் அழைத்துக் கேட்டான். அவர்களால் பதில் சொல்ல முடியவில்லை. நாட்டின் எல்லைக்குட்பட்ட வனத்தில் வசிக்கும் முனிவர் லோசமரைச் சரணடைந்து கேட்டால் வழி பிறக்கும் என்று அறிஞர்கள் கூறினர். அப்படியானால் முனிவரைச் சந்தித்து விடை அறிந்துவாருங்கள் என்று மன்னன் தன் அமைச்சர்களை அனுப்பி வைத்தார்.

லோசமர், பிரம்மனுக்கு நிகரான மகான். அமைச்சர்கள் அவரைத் தேடித்திரிந்து ஒருவழியாக அவரை தரிசனம் செய்தனர். அமைச்சர்களின் வாடிய முகத்தைக் கண்ட முனிவர் அவர்களை உபசரித்து, வந்த காரணத்தை விசாரித்தார். அவர்களும் தாங்கள் வந்த காரணத்தைச் சொன்னார்கள். பொறுமையுடன் அவற்றைக் கேட்ட லோசமர், அவர்களுக்கு பதில் சொன்னார்.

``மஹிஜித் இந்தப் பிறப்பில் பாவங்கள் ஏதும் செய்யாதவனாக இருந்தாலும் போன ஜன்மத்தில் செய்த பாவமே அவனை வாட்டுகிறது. அந்தப் பாவம் தீர்ந்தால் அவனுக்கு வேண்டிய செல்வம் தானே கிடைக்கும்” என்றார்.

இதைக் கேட்ட அமைச்சர்கள், அந்தப் பாவம் நீங்க தாங்களே வழி கூறுமாறு கோரினர். ``பகவான் விஷ்ணுவே காக்கும் தெய்வம். விஷ்ணுவின் அவதாரங்களில் மிகவும் முக்கியமான அவதாரமான கிருஷ்ணாவதாரத்தைப் போற்றி விரதமிருந்து வழிபட்டால் பாவங்கள் அனைத்தும் தீரும். அதிலும் ஸ்ரவண மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசி நாளில் விரதமிருந்து வழிபடுவது உத்தமம். உங்கள் மன்னனை அந்த விரதத்தை மேற்கொள்ள வழிகாட்டுங்கள். அந்த நாளில் உபவாசம் இருக்க வேண்டும். நாள் முழுவதும் நாராயணனின் நாமத்தை உச்சரிக்க வேண்டும். இரவில் கண்விழித்து அவனின் பெருமைகளைச் சொல்லும் புராணங்களை வாசிக்கவும் கேட்கவும் வேண்டும். இவ்வாறு செய்து துவாதசி அன்று விரதம் முடித்தால் முன்வினைப் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டு நன்மைகள் உண்டாகும்” என்றார்.

அமைச்சர்கள் மகிழ்ந்து முனிவருக்கு நன்றிகூறிப் புறப்பட்டு நாடடைந்தனர். மன்னரிடம் முனிவரின் வார்த்தைகளைக் கூறினர். இதைக் கேட்ட மஹிஜித் மிகவும் மகிழ்ந்து முனிவர் கூறியதுபோலவே ஏகாதசி விரதத்தை மேற்கொண்டான். அதன் பயனாக பகவான் கிருஷ்ணனின் அருளால் அவன் தேசம் மேலும் செழிப்புற்றதோடு அடுத்த ஆண்டே அவனுக்குக் குழந்தைச் செல்வமும் கிடைத்தது. அன்றுமுதல் குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் மேற்கொள்ள வேண்டிய விரதங்களில் ஒன்றாக புத்ரதா ஏகாதசி விரதம் மாறியது.


*உடலைப் புத்துணர்ச்சி கொள்ளச் செய்யும் ஒருநாள் உபவாசம்...*


ஏகாதசி என்பது அமாவாசை மற்றும் பௌர்ணமியிலிருந்து 11வது நாள். பத்துநாள்கள் உடலும் மனமும் தொடர்ந்து இயங்கிக்கொண்டிருக்க 11வது நாள் அதற்கு ஓய்வு தரும் விதமாக மேற்கொள்ளப்படும் விரதமே ஏகாதசி விரதம். இந்த நாளில் உணவைத் தவிர்ப்பதன் மூலம் உடல் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள உதவலாம். மேலும், மனமும் அன்றாடக் கவலைகளிலிருந்து விலகி இறைவழிபாட்டில் ஈடுபட்டுப் புத்துணர்ச்சி கொள்ளும். அந்தக் காலத்தில் நம் முன்னோர்கள் இதை உணர்ந்தே ஏகாதசி விரதத்தை ஏற்படுத்தினார்கள்.

உடல் வலு உள்ளவர்கள் ஏகாதசி நாளில் உணவைத் தவிர்க்க வேண்டும். இயலாதவர்கள் குறைந்தபட்சம் முழு அரிசிச் சோற்றைத் தவிர்க்க வேண்டும். பழங்கள் எடுத்துக்கொள்ளலாம். முதல் நாளே பறித்து வைத்த துளசியால் தயாரிக்கப்பட்ட துளசித் தீர்த்தத்தை உட்கொள்ளலாம். நாள் முழுவதும் ராம நாமத்தையோ கிருஷ்ண நாமத்தையோ உச்சரிக்க வேண்டும். மறுநாள் துவாதசி அன்று காலை பாரனை முடித்துப் பின்பு உணவு உட்கொண்டு விரதம் முடிக்கலாம்.

🌷🌷🌷🌷🌷🌷🌷

ஹரே கிருஷ்ணா

🌷🌷🌷🌷🌷🌷🌷