Sunday, September 13, 2020

Indira Ekadashi/ இந்திர ஏகாதசி

 நம் முன்னோரை கடையேற்றும் இந்திரா ஏகாதசி.....!!!

 13.9.2020

இந்திரா ஏகாதசி மஹாலய பக்ஷத்தில் அமைவதால் இதற்கு தனி மகத்துவம் உண்டு.இந்த ஏகாதசி விரதம் நம் பாபங்களை போக்குவதோடு நம் முன்னோர்களின் பாபங்களையும் போக்குவதாக அமைகிறது.

இந்திரா ஏகாதசி விரத கதை.....!

முன்பொரு காலத்தில் மகிஷ்மதிபுரி ராஜ்யத்தை இந்திரசேனர் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவர் சிறந்த முறையில் ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தார்.அவரது ஆட்சியில் மக்கள் குறை இல்லாமல் வாழ்ந்து வந்தார்கள். மன்னர் சிறந்த விஷ்ணு பக்தரும் கூட. விஷ்ணுவை போற்றி வணங்குவதில் சிரத்தை உள்ளவர்.

ஒரு நாள் மன்னர் தர்பாரில் இருந்த போது அங்கு  நாரத முனிவர் வந்தார். அவரை சகல மரியாதையுடன் வணங்கிய மன்னர் அவர் வந்த காரணம் வினவினார். நாரதர் தான் வந்த காரணத்தை விவரிக்க ஆரம்பித்தார்.

நாரதர் பிரம்மலோகத்தில் இருந்து யமலோகத்திற்கு இறங்கிய போது யமராஜரால் வரவேற்கப்பட்டார். அவரின் சபையில் சகல மரியாதைகளுடன் அமர்ந்திருந்த போது சபையினருக்கு நடுவே இந்திரசேனரின் தந்தையும் இருக்கக் கண்டார். ஆச்சர்யப்பட்ட நாரதரிடம் இந்திரசேனரின் தந்தை தான் ஒரு ஏகாதசி விரதத்தை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே முறித்ததன் விளைவாக தான் நரகத்தில் அல்லல்படுவதாக உரைத்தார்.

இந்திரசேனரின் தந்தை இந்திரசேனரை இந்திரா ஏகாதசி விரதம் இருக்குமாறு நாரதர் மூலம் கேட்டுக் கொண்டார். இதனால் தான் நரகத்திலிருந்து விடுபட்டு வைகுண்டம் சேர முடியுமென உரைத்தார். அவர் கூறியதை இந்திரசேன மன்னரிடம் கூறவே நாரதர் மன்னரை நாடி வந்துள்ளார்.

இதனை அறிந்தவுடன் நாரதரிடம் மன்னர் இந்திரா ஏகாதசி பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். அதன்படி தனது சுற்றத்தோடும், ஏனையரோடும் விரதமிருந்து தனது தந்தைக்கு நல்வழி காட்டினார். தனது தந்தை கருட வாகனம் ஏறி வைகுண்டம் செல்வதை கண்டார். அவர் த்வாதசி அன்று விரதம் முடிக்கும் போது அவரது பக்தியை மெச்சி  அவர் மீது ஆகாயத்திலிருந்து பூமாரி பெய்தது. மன்னரும் பிற்காலத்தில் வைகுண்டம் சேர்ந்தார்.

இந்திரா ஏகாதசியில் முறைப்படி  விரதமிருந்தால் நமது  பாபம் மட்டுமன்றி நம் முன்னோர்களின் பாபங்களும் நீங்கும்.

நரகத்தில் வாடும் முன்னோர்கள் வைகுண்டம் நோக்கி செல்வார்கள்.

இந்த ஏகாதசி விரத கதை கேட்போருக்கு (குதிரை) அஸ்வம் தானம் செய்த பலன் கிடைக்கும்.

இதனை படிப்போருக்கும் கேட்போருக்கும் வாழ்வில் வளமும்,முக்தியும் கிடைக்கும்.

இத்தனை நன்மை பயக்கும் இந்திரா  ஏகாதசி விரதத்தை கடைபிடித்து நம் வாழ்வை வளப்படுத்தி ,நம் முன்னோர்கள் உய்யவும் வழி தேடுவோம்

🙏🙏🙏🙏🙏🙏

No comments:

Post a Comment