Showing posts with label Aja ekadashi. Show all posts
Showing posts with label Aja ekadashi. Show all posts

Saturday, August 15, 2020

அஜ ஏகாதசி/ Aja Ekadashi

 *அஜ ஏகாதசி*



*முன்வினை பாவங்கள் நீக்கும் அஜ ஏகாதசி விரதம்*


🌷🌷🌷🌷🌷🌷

*15-08-2020*


🌷🌷🌷🌷🌷🌷


இன்றைய தினம் *அஜா ஏகாதசி* இதனை அன்னதா ஏகாதசி என்றும் குறிப்பிடுவர். இந்நாளில் எவரொருவர் உபவாசம் இருந்து இறைவன் ஸ்ரீஹரியை வழிபடுகிராரோ, அவர் அவரது பாவங்களின் கர்மவினைகளிலிருந்து விடுபடுவர் என்று பிரம்ம வைவர்த்த புராணம் கூறுகிறது.


அஜா ஏகாதசி என்பது வருத்தத்தை நீக்கும் ஏகாதசி என்று பொருள்படும். இந்த அஜா ஏகாதசி விரதத்தின் மகிமையைப் பற்றி, மகாபாரத்தில் தர்மருக்கு ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா விளக்கியுள்ளார்.


முன்னொரு காலத்தில், பகவான் ஸ்ரீராமர் தோன்றிய ரகு வம்சத்தில் அரிச்சந்திரன் என்றொரு அரசன் சத்தியம் தவறாது மாபெரும் வேந்தனாக அரசாண்டு வந்தான். அவனுக்கு சந்திரமதி என்ற மனைவியும், லோகிதாசன் என்ற மகனும் இருந்தனர். நாடும், அவனும் எந்த விதமான குறையும் இன்றி, சுபிட்சத்தோடு விளங்கியது.


*அரிச்சந்திர மகாராஜா*


விதிவசத்தால், அரிச்சந்திர மகாராஜா தனது நாடு, நகரம் அனைத்தையும் இழக்க நேரிட்டதோடு, மனைவி, மக்களையும் விற்கும் மிகக் கொடிய நிலைக்கு தள்ளப்பட்டார். பக்திமானான அரிச்சந்திரனை நாய்களை உண்ணும் சண்டாள குலத்தவனுக்கு அடிமையாகி மயானத்தைக் காக்கும் பணியில் அமர வைத்தது விதி. ஆனால் அந்நிலையிலும் அரிச்சந்திர மகாராஜா தனது சுயத்தன்மையை இழக்காமல் சத்தியத்தினை கைவிடாது கடைபிடித்து வந்தார்.


*முனிவரின் ஆலோசனை*



பல காலங்கள் கடந்தன. ஒரு நாள் அவர், நான் என்ன செய்வேன் ? இன்னும் எத்தனை காலம் இது போன்ற வேதனையில் வாடுவது, இதிலிருந்து மீள வழியே இல்லையா? என்று மிகவும் வருந்தினார். அப்போது அதிர்ஷ்டவசமாக, அவன் அந்த வழியாக சென்ற கௌதம முனிவரைக் கண்டு தனது நிலைமையை எடுத்துக் கூறி, இதிலிருந்து மீள வழி கூறுமாறு வேண்டினார்.



*ஏகாதசி விரதம்*


அரிச்சந்திரனின் சோகக் கதையைக் கேட்டு இரக்கம் கொண்ட முனிவர், அவருக்கு இந்த ஏகாதசி விரதத்தின் மகிமையை எடுத்துக் கூறினார். அரிச்சந்திரா !! உனது நல்ல காலம், இன்னும் ஏழு நாட்களில் பாவங்கள் அனைத்தையும் நீக்கி மிகவும் நற்பலன்களை அளிக்க வல்ல அஜா ஏகாதசி எனப்படும் அன்னதா ஏகாதசி வரவிருக்கிறது. இந்நாள் மிகவும் மங்களமானது.


*கண்விழித்து விரதம்*


இந்நாளில், நீ இருக்கும் இந்த நிலையில் உன்னால் மற்ற அனுஷ்டானங்களைக் கடைபிடிக்க முடியாவிட்டாலும், உபவாசத்தை மட்டுமாவது ஏற்று, அன்று இரவு கண் விழித்து இறைவன் ஸ்ரீஹரியின் திருநாமத்தை உச்சரித்து கொண்டிரு ... இதன் காரணமாக உனது முற்பிறவி பாவங்களில் இருந்து விடுதலை பெற்று நன்னிலையை அடைவாய் எனக் கூறினார்.


*ராஜ்ஜியத்தை அடைந்த அரிச்சந்திரன்*


அரிச்சந்திரன், கௌதம முனிவரின் வழிகாட்டுதலின் படி, அஜா ஏகாதசி நாளில் உபவாசம் இருந்து அவனது பாவங்கள் அனைத்தும் நீங்கி, மீண்டும் நாடு நகரத்தினைப் பெற்று நன்னிலையை அடைந்தான். மேலும் இந்த விரதத்தின் பலனால் மாயையின் காரணத்தால் உயிரிழந்த மகனை மீண்டும் அடைந்ததோடு, மனைவியுடன் ஒன்று சேர்ந்து மீண்டும் ராஜ்ஜியத்தினை அடைந்தார் என்று ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனுக்குக் கூறி முடித்தார்.


*அஜா ஏகாதசியின் சிறப்புகள்*


அதோடு அவர் யுதிஷ்டிரனிடம், ஓ பாண்டு புத்ரா !! நீயும் இப்போது இந்த அஜா ஏகாதசியின் சிறப்புகளை அறிந்து கொள் !! எனக் கூறத் தொடங்கினார். இந்நாளில் மேற்கொள்ளும் விரதம் நாம் முற்பிறவிகளில் செய்த பாவங்களின் விளைவால் இந்தப் பிறவியில் நாம் அனுபவிக்கும் துன்பங்களை உடனடியாக நீக்க வல்லது. இதனால் அவர்கள் அனைவரும் இறுதியில் பக்தி லோகத்தை அடைவர் என்று கூறினார்.


*அஸ்வமேத யாகம் செய்த பலன்*


எவரொருவர், இந்நாளில் இந்த விரதத்தின் மகிமையை விவரிக்கும் இந்தக் கதையினை கேட்கிறாரோ அல்லது படிக்கிறாரோ அல்லது சொல்கிறாரோ அவர் அஸ்வமேத யாகம் செய்த பலனை அடைவார் என ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரனிடம் கூறி முடித்தார் என்று பிரம்ம வைவர்த்த புராணம் விவரிக்கின்றது.


🙏🙏🙏🙏🙏


ராதே கிருஷ்ணா


🌻🌻🌻🌻🌻🌻🌻