Showing posts with label மோகினி ஏகாதசி. Show all posts
Showing posts with label மோகினி ஏகாதசி. Show all posts

Sunday, May 03, 2020

மோஹினி ஏகாதசி/ Mohini Ekadashi

மோகினி ஏகாதசி
04.05.2020, திங்கட்கிழமை

சித்திரை-வைகாசி  மாதம் சுக்ல பட்சத்தில் வரும்  ஏகாதசி  திதியை மோகினி  ஏகாதசியாக கொண்டாடுவர்.  மோகினி ஏகாதசி விரத  மகிமையை நாம் இப்போது காண்போம்.சுயகட்டுப்பாடு மற்றும் சிரத்தையின் மகத்துவத்தை  விளக்கும் வரூதினீ  ஏகாதசி விரத கதையைக் கேட்ட தனுர்தாரி அர்ஜூனன் பரமாத்மா கிருஷ்ணரிடம்," ஹே கிருஷ்ணா!,சித்திரை –வைகாசி மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசியின்  பெயர், விரதம் அனுஷ்டிப்பதற்கான  விதிமுறை,இவற்றைப்  பற்றி விரிவாக  கூற வேண்டும்." என்று வேண்டினான்.
• ஸ்ரீ கிருஷ்ணர் பதிலளிக்கையில்," ஹே பாண்டு நந்தனா! , மகரிஷி  வசிஷ்டர் ஸ்ரீராமனுக்கு கூறிய  ஒரு புராதன கதையை  உனக்கு கூறுகிறேன். கவனத்துடன் கேள்." என்றார்.• ஒரு சமயம்  ஸ்ரீ ராமர் ,மகரிஷி வசிஷ்டரிடம்," குரு  தேவா!,ஜனகநந்தினி  ஸ்ரீ சீதையின் பிரிவால் நான் மிகுந்த துயரத்தை அனுபவிக்கிறேன். சொல்லவொண்ணா மனவேதனையில் ஆழ்த்தும் இத்துயரத்தை  நீக்குவது   எப்படி?  அனைத்து  பாபங்களையும், துக்கங்களையும்  அழித்து மகிழ்ச்சியையும், சுகத்தையும்அளிக்கக்கூடிய விரதம் ஏதாவது  உண்டென்றால், அதை அனுஷ்டிக்கும் விதிமுறையுடன் எனக்கு கூறி அருளுங்கள்."என்றார்.• மகரிஷி வசிஷ்டர்," ஸ்ரீ ராமா,மிக நல்லதொரு கேள்வி இது. நீ மேன்மை மற்றும் பவித்ரதன்மையுடன் கூடிய ஆழ்ந்த அறிவாற்றலை கொண்டவன்.உன் நாமத்தை  உச்சரித்த மாத்திரத்தில் மனிதர்கள் புண்ணியத்தைபெறுவர். இவ்வுலகத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய நல்லதொரு  கேள்வியை கேட்டுள்ளாய். உனக்கு  ஒரு ஏகாதசி விரதத்தின் மகத்துவத்தை கூறுகிறேன்.சித்திரை- வைகாசி மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதியை  மோகினி ஏகாதசி என அழைப்பர். இவ்ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் மனிதர்களின் சகல   பாபங்களும்,துக்கங்களும் அழிக்கப்படுகிறது. இதன் பிரபாவத்தால் மனிதர்கள் மோகம்  என்னும்  மாயையின்  பிடியிலிருந்தும்  விடுதலை  பெறுவர்.• ஸ்ரீ ராமா! துக்கத்தால் வாழ்க்கையில்  துன்பப்படும்  அனைவரும்  இவ்  மோகினிஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கவேண்டியது அவசியமானதும். இவ் விரதத்தை மேற் கொள்வதால்  ஒருவரது பாபங்கள் அனைத்தும்  நீங்கப்  பெறுகிறது. இவ் மோகினி ஏகாதசி விரத  மஹாத்மிய கதையை கூறுகிறேன்.கவனத்துடன் கேள்.•சரஸ்வதி நதியின்  கரையில் பத்ராவதி என்னும்  பெயர் கொண்ட நகரம்  அமைந்திருந்தது. அந்நகரைத்  யூதிமான் என்னும்  பெயர் கொண்ட  அரசன் ஆட்சி புரிந்துவந்தான். அந்நகரில்  வற்றாத தனம், தான்ய சம்பத்துக்களுடன் தனபால்  என்னும் பெயர்கொண்ட ஒரு வியாபாரி வசித்து வந்தான். பகவான் மஹாவிஷ்ணுவின் பக்தனாக அவன் மிகுந்த தர்மசிந்தனையுடன்  நகரில் ஆங்காங்கே அன்னதான உணவகங்கள், குடிநீர்  பந்தல்,குளம், குட்டை,  தர்மசத்திரங்கள் ஆகியவற்றை அமைத்திருந்தான்.   பாத யாத்ரிகர்களின் நன்மைக்காக சாலையின் ருமருங்கிலும் மாமரம், நாவல்கனி  மரம், வேப்பமரம் ஆகியவற்றை நட்டு பராமரித்து வந்தான்.• வியாபாரிக்கு ஐந்து புதல்வர்கள் இருந்தனர்.அவர்களில் மூத்தவன் கொடிய பாப வினைகளை புரியும்பாபியாகவும், துஷ்டனாகவும் இருந்தான். அவன்துஷ்டர்களுடனும்,வேசிகளுடனும் நட்பு கொண்டு நேரத்தை வீணாக  கழித்து வந்தான். இவை தவிர கிட்டிய மீதி நேரம் அனைத்தையும் சூதாட்டத்தில் செல வழித்தான். அவன் நீசனாகவும், தெய்வம்,பித்ருக்கள்  என எவற்றின் மீதும் நம்பிக்கை இல்லாமல் வீணாக தந்தை ஈட்டும் செல்வத்தை இம்மாதிரியான  கெட்ட காரியங்களில் செலவழித்துக் கொண்டிருந்தான். மதுபானம்,புலால்  உண்பது அவனுடைய  தினசரி வாடிக்கையாக இருந்தது. அநேக முறைஅறிவுரை கூறியும் திருந்தாமல் தான் செய்வதையே  செய்துகொண்டிருந்தான். அவனது செய்கையால் துக்கத்தில் வாடிய வியாபாரி தனபால்,  அவனது சகோதரர்கள், குடும்பத்தினர் அனைவரும் அவனை  கடும்சொற்களால் நிந்தனை செய்து,வீட்டை விட்டு வெளியேற்றினர். வீட்டிலிருந்து வெளியேறியவுடன், அணிந்திருந்த விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்களை விற்று கிடைக்கும் பணத்தில் நாட்களை கடத்தி வந்தான். பணம் கரைந்துபோனதும் அதுவரை அவனுடன் இருந்த துஷ்ட நண்பர்களும்,வேசிகளும் அவனை விட்டு விலகிப் போயினர்.• பசியும், தாகமும் வருத்தி எடுக்க வேதனை  தாளாமல் திருடுவது  என்னும் முடிவுக்கு வந்தான். இரவு நேரங்களில் திருட்டு தொழிலில் ஈடுபட்டு அதன் மூலம்  கிட்டிய வருமானத்தால் வாழ்க்கையை  நடத்தி வந்தான். ஒரு  நாள் அவன் திருடும் வேளையில், நகர காவலரிடம் கையும்,  களவுமாக பிடிபட்டான். ஆனால் வியாபாரியின் மகன்  என்று அறிந்ததும்,  அவனை தண்டியாமல் திருந்தி வாழுமாறு அறிவுரை கூறி விட்டு விட்டனர். ஆனால் சில நாட்களில் இரண்டாவது  முறையாக மீண்டும் அகப்பட்ட போது, அவன்பேச்சை  கேளாமல், அவனை இழுத்து சென்று அரசனின் முன் நிறுத்தி, நடந்த அனைத்தையும் எடுத்துரைத்தனர்.  அரசன் அவனை சிறையில்  அடைக்க உத்தரவிட்டான். சிறையில் அவன் தண்டனையாக சித்திரவதையை    அனுபவித்தான். பிறகு அவனை அந்நகரை  விட்டும் வெளியேற்றினர். மிகுந்த மன வருத்தத்துடன் நகரை விட்டு வெளியேறி காட்டில்  வசிக்கத் தொடங்கினான். அங்கு வாழும் பிராணிகளைக்  கொன்று தன் பசியை தணித்துக் கொண்டான். நாளடைவில் பிராணிகளை வேட்டையாடும் ஒரு  வேடுவனாக மாறி விட்டான்.  வில் அம்புகளைக் கொண்டு காட்டில் வாழும் பிராணிகளை  தன் பசிக்காக மட்டும்  அல்லாமல் விற்பதற்காகவும் கொல்லத் தொடங்கினான். ஒரு நாள் வேட்டையில்  ஏதும் சிக்காமல் போக, வேட்டையாடிய களைப்பில் பசியும்,  தாகமும் வருத்தி எடுக்க,  உணவைத் தேடிஅலைந்து அங்கும் இங்கும் அலைந்து கடைசியில் கௌடின்ய  முனிவரின் ஆசிரமத்தை அடைந்தான். .கௌடின்ய  முனிவர் கங்கையில் நீராடி விட்டு வந்து கொண்டிருந்தார். அவரின் நனைந்த வஸ்திரத்தின் நுனியிலிருந்து  விழுந்த  நீர்துளிகள் அவன் மீது பட்டமாத்திரத்தில், பாபியான அவனுக்கு  நற் சிந்தனையும், நல்லெண்ணமும் உருவாகியது. அவன்  முனிவரின் அருகில் சென்று  இருகரம்  கூப்பி கண்ணில் நீர் மல்க "முனிசிரேஷ்டரே!, நான்  என் வாழ்க்கையில் மன்னிக்கமுடியாத அளவு பாபம் புரிந்துள்ளேன்.
என் பாப வினைகளிலிருந்து  நான்முக்தி பெறுவதற்கு ஏதாவது எளிதான, செலவில்லாமல் கடைப்பிடிக்கக் கூடிய  ஒருவழியை கூறி  அருள வேண்டும்."என்றான்.முனிவர் அதற்கு," நான்சொல்வதை கவனத்துடன் கேள்.• சித்திரை- வைகாசி மாதம்  சுக்லபட்சத்தில் வரும்  ஏகாதசி,மோகினி  ஏகாதசி  என்று அழைக்கப்படுகிறது.  அவ் மோகினி ஏகாதசி  விரதத்தை விதிப்பூர்வமாக கடைப்பிடித்தால் உன் பாபங்கள் எல்லாம் நீங்கி,புது வாழ்வு பெறுவாய் என்றுஅருளினார். முனிவரின் வார்த்தையைக் கேட்டு அவன் மிகுந்த சந்தோஷமடைந்தான்.முனிவர் கூறிய  ஏகாதசி விதிப்படி அவ் மோகினி ஏகாதசி விரதத்தை  கடைப்பிடித்தான்.• ஸ்ரீ ராமா, அவ் மோகினி ஏகாதசி விரதத்தின் பிரபாவத்தால் அவனதுஅனைத்து பாபவினைகளும் அகன்று நல்வாழ்க்கைபெற்றான்.இறுதியில் விரதத்தின்புண்ணிய பலனால்,கருடவாகனத்தில்  விஷ்ணுலோகத்தை  அடையும் பிராப்தியும்  பெற்றான். இவ் விரதத்தினால் மோகம்  என்னும் மாயை  அகன்று, மனிதர் முக்தியை பெறுகிறார்.இவ்வுலகில் இவ்விரதத்திற்கு இணையான விரதம் வேறெதுவும் இல்லை. இவ்விரதமஹாத்மிய  கதையை  கேட்பவரும்,  படிப்பவரும்,ஒராயிரம்  பசு தானம் செய்த  புண்ணியத்திற்கு  இணையான புண்ணியத்தை பெறுவர். மனிதர்கள் எப்போதும் நற் சிந்தனையுள்ள  சான்றோர்,சாதுக்கள் ஆகியோரிடம்  நட்பு கொண்டிருந்தல் வேண்டும்.நற்சிந்தனையுள்ளவர்களின் நட்பு மனிதர்களுக்கு நல்அறிவை மட்டுமல்லாது வாழ்க்கை  லட்சியத்தையும் அடைவதற்கும் உதவும். கெட்டசகவாசம்,  அதனால் விளையும் பாபவினைகள்  ஒருவரை நரகத்திற்கு மட்டுமே  இழுத்துச்செல்லும். அத்தகைய நட்பு துன்பம்  வரும் காலங்களில் கைவிட்டு விலகி விடுவதால்,அனாதையாக  தவிக்க நேரிடுகிறது.  அப்போதும் கௌடின்ய ரிஷி  போன்ற சாது,சான்றோர்கள்  ஒருவரை கைவிடாமல்  நன்மார்க்கத்தைக் கூறி  அருளுவர்.

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே

On 05.05.2020, செவ்வாய்க்கிழமை Parana  Time = 05:46 to 09.59. Hrs  . Chennai.

*Shree Krishnarpanamastu*