Sunday, September 27, 2020

18 puranas/18 புராணங்கள்

*பதினெட்டு புராணங்கள்*

1. பிரம்ம புராணம்

பிரம்மாவைப் பற்றியும், அவருடைய உலகப் படைப்புகளைப் பற்றியும் கூறுவது. கலியுகத்தில் ஏற்படும் கெடுதல்களும், மக்கள் மேற்கொள்ள வேண்டிய கடமைகளும், பக்தியின் அவசியமும் இதில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.

2. பத்ம புராணம்

காயத்ரி சிறப்புகளையும், கற்பின் சிறப்பும் இதில் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

3. பிரம்ம வைவர்த்த புராணம்

கிருஷ்ண பரமாத்வையே பிரம்மாவாக, பரப்பிரம்ம ஸ்வரூபமாகப் போற்றிச் சொல்லப்பட்டிருக்கிறது.

4. இலிங்கப் புராணம்

பரமசிவனுடைய வரலாறுகளையும், திருநீறு முதலியவற்றின் சிறப்புகளையும் இது எடுத்துச் சொல்கிறது.

5. விஷ்ணுப் புராணம்

விஷ்ணுவின் பெருமைகளை விளக்குகிறது.

6. கருட புராணம்

கருடன் கஷ்யப மகரிஷிக்குச் சொல்லியது. பிராணன் உடலை விட்டு நீங்கிய பின், அனுபவிக்கின்ற பலவிதமான நிலைகளைக் கூறுகிறது.

7. அக்கினி புராணம்

அக்கினியைப் பற்றிய புராணம் அக்னி, வசிஷ்டருக்கு உபதேசித்தது. மனிதன் செய்ய வேண்டிய செயல்கள், கடைப்பிடிக்க வேண்டிய நன்னெறிகள் முதலியவைகளைக் குறிக்கிறது.

8. மத்ஸ்ய (மச்ச புராணம்

பலவகை விரதங்களின் பெருமைகளைப் பற்றியும், தானங்கள் செய்வது பற்றியும் இதில் சொல்லப்பட்டுள்ளன. சிரார்த்தத்தின் அவசியம், பிதுர் காரியங்கள் இவைகளைப் பற்றியும் இது விளக்குகிறது.

9. நாரத புராணம்

நாராதருடைய வரலாறும், மனித வாழ்க்கைக்குத் தேவையான நீதிகளும் விரிவாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.

10. வராஹ புராணம்

திருமாலின் அவதார மகிமை, அன்னதானம் முதலிய தர்மங்களின் சிறப்புகளைச் சொல்கிறது.

11. வாமன புராணம்

வாமன அவதார நிகழ்ச்சியை எடுத்துரைக்கின்றது.

12. கூர்ம புராணம்

கூர்ம அவதார நிகழ்ச்சி, மாயையால் வரும் துன்பங்கள் அவற்றை நீக்கும் முறைகள் பற்றிச் சொல்கிறது.

13. பாகவத புராணம்

விஷ்ணுவைப் பற்றியும், தேவியைப் பற்றியும், அன்னை பராசக்தியின் பெருமைகள் பற்றியும் தெளிவாகச் சொல்கிறது.

14. ஸ்கந்த புராணம்

முருகப் பெருமானின் வரலாறு சொல்லப்படுகிறது.

15. சிவ புராணம்

சிவபெருமானின் பெருமைகளை எடுத்துச் சொல்கிறது. இலிங்கோத்பவ நிகழ்வுகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.

16. மார்க்கண்டேய புராணம்

மார்க்கண்டேயரால், ஜைமினிக்குச் சொல்லப்பட்ட புராணம். அத்ரி, அனுசூயை முதலியோர் வரலாறுகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.

17. பிரும்மாண்ட புராணம்

பிரம்மாவால் படைக்கப்பட்ட பிரும்மாண்டங்கள் குறித்த பல்வேறு செய்திகள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.

18. பவிஷ்ய புராணம்

பவிஷ்ய என்றால் வரப்போகும் என்று பொருள். கலியுகத்தில் நடைபெறவிருக்கின்ற செய்திகளையும், இறைவன் கல்கி அவதாரம் எடுக்கவுள்ள செய்தியையும் வேத வியாசர் தன் முன்னறிவால் எடுத்துச் சொல்லியவை இதில் இடம் பெற்றிருக்கின்றன.

பத்மினி ஏகாதசி/padmini ekadashi



*பத்மினி ஏகாதசி*

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

*அதிக மாச சுக்ல பக்ஷ  ஏகாதசி*

*27 September 2020 Sunday*

🌹🌹🌹🌹🌹🌹🌹


ஒருமுறை, மகாராஜா யுதிஸ்டிரர் கூறினார். ஓ, கிருஷ்ண ஓ, ஜனார்தனா, அதிக மாசத்தில் சுக்ல பக்ஷ  ஏகாதசியின் பெயர் மற்றும் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளை பற்றி எனக்கு கூறுங்கள். மேலும் இதை கடைபிடிப்பவர் என்ன பலனை அடைவார் என்பதையும் எனக்கு கூறுங்கள். 


*பத்மினி ஏகாதசி விரத முறை*

பகவான் கிருஷ்ணன் பதில் அளித்தார். ஓ! மன்னா! இந்த *புனிதமான ஏகாதசியின் பெயர் பத்மினி*. இந்த ஏகாதசியை சிரத்தையுடன் கடைப்பிடிப்பவர் பகவான் பத்மநாபரின் பரமபாதத்தை அடைவார். இந்த ஏகாதசி ஒருவரின் எல்லா பாவ விளைவுகளையும் அழித்துவிடும். இந்த ஏகாதசியின் முழு பலன்களை பற்றி எடுத்துரைக்க பிரம்மாவாலும் இயலாது. இருப்பினும் முன்பு ஒரு காலத்தில் செல்வம் மற்றும் முக்தியை அளிக்கக்கூடிய இந்த பத்மினி ஏகாதசியின் புகழை பகவான் பிரம்மா நாரதரிடம் விளக்கி கூறினார்.

பகவான் கிருஷ்ணர் தொடர்ந்தார். ஒருவர் இந்த ஏகாதசியை கடைபிடிக்க, ஏகாதசியின் முன்தினமான தசமி நாளன்றே துவங்க வேண்டும். ஒருவர் மற்றவர்கள் சமைத்த உணவை உட்கொள்ள கூடாது. வெண்கல தட்டில் உண்ணக்கூடாது மற்றும் உளுந்து, கீரை, தேன் ஆகியவற்றை தசமி அன்று உட்கொள்ளக்கூடாது. ஒருவர் ஏகாதசியன்று வெறும் தரையில் படுக்க வேண்டும். மற்றும் பிரம்மச்சரியத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். ஏகாதசியன்று ஒருவர் விடியற் காலையில் எழுந்து பல்தேய்த்து குளிக்க வேண்டும். பிறகு சந்தனம், ஊதுவத்தி, விளக்கு, கற்பூரம், நீர் ஆகியவற்றை கொண்டு முழுமுதற் கடவுளை பூஜிக்க வேண்டும்.

*பலன்கள்*

புனித நாமங்களை ஜபிக்க வேண்டும். ஒருவர் தேவையற்ற பேச்சுக்களில் ஈடுபடக்கூடாது. ஏகாதசி அன்று இரவு விழுத்திருந்து புனித நாமங்கள் மற்றும் பகவானின் தன்மைகளை புகழ வேண்டும். ஏகாதசி இரவில் முதல் மூன்று மணி நேரம் விழுத்திருப்பவர் அக்னிஸ்தோமா யாகத்தை செய்த பலனை அடைவார். முதல் ஆறு மணி நேரம் விழித்திருப்பவர் வாஜ்பேய யாகத்தின் பலனை அடைவார். முதல் ஒன்பது மணி நேரம் விழுத்திருப்பவர் அஸ்வமேத யாகத்தின் பலனை அடைவார். முழு இரவு விழித்திருப்பவர் ராஜசூய யாகத்தின் பலனை அடைவார். துவாதசியன்று வைஷ்ணவர்கள் மற்றும் அந்தணர்களுக்கு உணவளித்த பிறகு விரதத்தை முடித்துக் கொள்ள வேண்டும். இந்த முறையில் இந்த ஏகாதசியை கடைப்பிடிப்பவர் நிச்சயமாக முக்தி அடைவார்.

*பத்மினி ஏகாதசி கதை*

பகவான் கிருஷ்ணர் தொடர்ந்தார். ஓ, பாவமற்றவனே, உனது வேண்டுக்கோளுக்கு, இணங்கி நான் இந்த ஏகாதசியை கடைப்பிடிக்கும் முறையினை விளக்கினேன். இப்பொழுது புலஸ்ய முனிவர், நாரத முனிவருக்கு கூறிய சுவராஸ்யமான கதையை  கூறுகிறேன் கவனமாக கேள்.


*நாரதரின் வியப்பும் புலஸ்ய முனிவரின் விளக்கமும்*

 ஒரு முறை கார்த்தவீர்யார்ஜூனா இராவணனை தோற்கடித்து சிறையில் அடைத்தார். இராவணனை இக்கோலத்தில் கண்ட புலஸ்ய முனிவர் கார்த்வீர் யார்ஜீனாவிடம் சென்று இராவணனை விடுதலை செய்யுமாறு வேண்டினார். பெரு முனிவரின் வேண்டுதலுக்கு இணங்கி அரசன் இராவணனை விடுதலை செய்தார். இந்த வியக்கத்தக்க நிகழ்ச்சியை கேட்ட நாரத முனிவர் புலஸ்ய முனிவரிடம் கேட்டார். ஓ முனிவரில் சிறந்தவரே, இந்திரன் உள்பட எல்லா தேவர்களையும் வென்ற இராவணனை கார்த்தவீர்யார்ஜீனா வால் எவ்வாறு வெல்ல முடிந்தது. இதனை எனக்கு விளக்குங்கள்.

புலஸ்ய முனிவர் பதில் அளித்தார். ஓ, நாரதா, திரேதா யுகத்தில் ஹைஹயா வம்சத்தில் பிறந்த கிருதவீர்யா என்ற மன்னர் இருந்தார். இவருடைய தலைநகர் மாஹிஸ்மதீபுரி. இவருக்கு ஆயிரம் மனைவிகள் இருந்தனர். ஆயினும் நாட்டை ஆள தகுந்த ஒரு மகன் இருக்கவில்லை. இவர் தன் முன்னோர்களையும் சாதுக்களையும், பூஜித்து வந்தார். மற்றும் முனிவர்களின் வழிமுறைப்படி பல விரதங்களை மேற்கொண்டார். இருப்பினும் அவருக்கு ஓரு ஆண்வாரிசு உண்டாகவில்லை. ஆகையால் மன்னர் தவம் செய்ய முடிவு செய்தார். தன் ராஜ்யத்தின் பொறுப்புகளை எல்லாம் பிரதம மந்திரியிடம் ஒப்படைத்து விட்டு தவம் செய்வதற்காக மரப்பட்டையால் செய்த ஆடையை அணிந்து காட்டிற்கு சென்றார். 

*தவம்*

தனது மனைவிகளில் ஒருவரான பத்மினி, மன்னர் அரண்மனையை விட்டு வெளியேறுவதை கண்டார். பத்மினி இக்ஸ்வாகு வம்சத்தில் தோன்றிய ஹரிச்சந்திரனின் மகள். பத்மினி தன் கணவர் தவம் செய்வதற்காக காட்டிற்கு செல்வதை அறிந்து உடனே தானும் தன் ஆபரணங்களை துறந்து கணவருடன் மந்தாரா மலைக்கு சென்றனர்.

மந்தார மலை உச்சியில் மன்னர் கிருதவீர்யா மற்றும் தன் மனைவி பத்மினி இருவரும் பத்தாயிரம் ஆண்டுகள் கடும் தவம் புரிந்தனர். தன் கணவரின் உடல் நாளுக்கு நாள் மெலிந்து போவதை கண்ட பத்மினி இதற்கு ஒரு தீர்வு காண நினைத்தாள்.

*அனுசுயா தேவியின் ஆலோசனை*

 பத்மினி அத்ரி முனிவரின் மனைவியான அனுசுயாவிடம் கேட்டார். ஓ, கற்புக்கரசியே, என் கணவர் தவம் புரிவதில் பத்தாயிரம் ஆண்டுகள் கழித்தார். ஆயினும், அவரின் துன்பங்களை நீக்க கேசவனை திருப்திப்படுத்த முடியவில்லை.

 ஓ, அதிர்ஷ்டசாலியே, எந்த ஒருவிரதத்தை மேற்கொண்டால் பகவான் திருப்தியடைந்து சிறந்த மன்னனாகக் கூடிய ஒரு மகனை எனக்கு அருள்வார் என்பதை கூறுங்கள். இவ்வாறு வேண்டிய பத்மினியிடம் அனுசுயா கூறினார். முப்பத்தி இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை அதிக மாதம் தோன்றும். இந்த *அதிக மாதத்தில் வரக்கூடிய ஏகாதசிகள் பத்மினி மற்றும் பரமா* என்பன. இந்த ஏகாதசியை கடைபிடிப்பதால், பகவான் மகிழ்ச்சி அடைந்து உன்னுடைய கோரிக்கையை நிறைவேற்றுவார்.


*கருடரூடனின் காட்சியும் ஆசியும்*


பகவான் கிருஷ்ணர் மேலும் தொடர்ந்தார். அனுசுயாவின் வழிமுறைப்படி அரசி பத்மினி இந்த ஏகாதசியைக் கடைப்பிடித்தாள். கேசவன் கருட வாகனத்தில் பத்மினியின் முன் தோன்றி தனக்கு வேண்டிய வரத்தை கேட்கச் சொன்னார். அரசி முதலில் பகவானை வணங்கி தனது பிரார்த்தனைகளை சமர்ப்பித்தார். பிறகு தனக்கு ஒரு மகனை அருளுமாறு வேண்டினார். பகவான் கூறினார், ஓ, சாந்தமும், நற்குணமும் நிறைந்த பெண்ணே, உன்னுடைய விரதத்தால் நான் திருப்தி அடைந்தேன். அதிக மாசத்தை விட எனக்கு பிரியமான மாதம் வேறு எதுவும் இல்லை. இந்த மாதத்தின் ஏகாதசிகள் எனக்கு பிரியமானவை. நீ இந்த ஏகாதசியை சரியாக கடைபிடித்திருக்கின்றாய். எனவே நிச்சயமாக உங்களுடைய விருப்பத்தை பூர்த்தி செய்கிறேன்.

பத்மினியிடம் இவ்வாறு கூறிய பகவான் பிறகு, அரசன் முன் சென்று ஓ, சிறந்த மன்னா, உன் மனைவியின் ஏகாதசியின் விரதத்தால் நான் மகிழ்ச்சி அடைந்தேன். உனக்கு வேண்டிய வரத்தை கேள், என்றார். 
விஷ்ணு பகவானின் வார்த்தைகளை கேட்ட அரசன் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். மிக வலிமையுடன் எப்பொழுதும் வெற்றியை அடையும்படியான ஒரு மகனை தனக்கு அருளுமாறு வேண்டினார். ஓ, மதுசூதனா, பிரபஞ்சத்தின் பகவானே, தேவர்கள், மனிதர்கள், பாம்புகள், மற்றும் அரக்கர்கள் போன்றவர்களால் வெல்ல முடியாத ஒரு மகனை எனக்கு அருளுங்கள் என்று வேண்டினான். பகவான் மன்னர் வேண்டிய வரத்தை அருளி மறைந்தார்.


  *கார்த்தவீரயார்ஜுன் ஜனனம்*

 முழுமையாக திருப்தியடைந்த மன்னனும் அவர் மனைவியும் தங்கள் பழைய உடல்நிலையை அடைந்து தங்கள் நாட்டிற்கு திரும்பினர். அரசி பத்மினி, மிக்க வல்லமைபடைத்த ஒரு மகனை பெற்றெடுத்தாள்.

அவன் கார்த்தவீரயார்ஜுன என புகழ் பெற்றான். மூவுலங்களிலும் அவனை விட வலிமைமிக்க வீரர் இருக்கவில்லை. பத்து தலைகள் கொண்ட இராவணனும் கார்த்தவீயார்ஜுனாவால் தோற்கடிப்பட்டான்.

 இந்த அற்புதமான கதையை கூறிவிட்டு புலஸ்திய முனிவர் விலகி சென்றார்.


 பகவான் கிருஷ்ணன் கூறினார், ஓ! பாவமற்ற மன்னா, அதிக மாசத்தில் வரும் ஏகாதசியை பற்றி உன்னிடம் விளக்கினேன். ஓ, மன்னர்களில் சிறந்தவனே இந்த ஏகாதசியை கடைபிடிப்பவர் யாராயினும், பகவான் ஹரியின் பரமபாதத்தை அடைவார்.

 கிருஷ்ணரின் வாக்கிற்கு இணங்கி, மகாராஜா யுதிஸ்டிரர் தன் குடும்பத்துடன் இந்த ஏகாதசியை கடைப்பிடித்தார். ஒருவர் தன் வாழ்நாளில் இந்த ஏகாதசியை நம்பிக்கையுடன் கடைப்பிடித்தால் அவர் புகழ் அடைவார். யாரேனும் இந்த ஏகாதசியின் பெருமைகளை பற்றி படித்தாலோ அல்லது கேட்டாலோ அவருக்கு மிகுந்த அளவில் தெய்வ பக்தி கிடைக்கும்.


🌷🌷🌷🌷🌷

ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா
கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே

🌷🌷🌷🌷🌷🌷🌷


திருமதி. சந்திரிகா அர்விந்த்

Monday, September 21, 2020

அருள்மிகு துந்திராஜ் கணபதி கோவில், வாடி, வதோதரா,

இன்றைய கோபுர தரிசனம்...

அருள்மிகு துந்திராஜ் கணபதி கோவில், வாடி, வதோதரா, குஜராத்

விநாயகப் பெருமான் அருள் பாலிக்கும் அற்புத மரக்கோயில்!

கலை நுணுக்கங்களுடன் கூடிய இந்தியாவின் ஒரே மரக்கோயில்.!!

குஜராத் மாநிலத்தில் உள்ள வாடி நகரத்தில் உள்ள துந்திராஜ் கணபதி கோவில் முழுவதும் மரத்தால் ஆனது.

இந்த கோவில் இங்கே பல ஆயிரம் வருடங்களாக இருப்பதாகவும், பின்னர்  கணபதியின் அருளால் பெரிய பணக்காரனாக மாறிய ஒரு வைர வியாபாரியால் புனரமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

170 ஆண்டுகளுக்கு முன் கோபால்ராவ் மைரல் என்னும் திவானால் புனரமைக்கப்பட்டது.

பளிங்கு கல்லால் வடிவமைக்கப்பட்ட இந்த துந்திராஜ் கணபதி தன்னை வழிபட்டால் பக்தர்களுக்கு கிடைக்கும் வெற்றி (சித்தி), மற்றும் பரமாத்மாவை பற்றிய அறிவும், கல்வி அறிவும், வியாபார அறிவும், போர்திறன் அறிவும் கிடைக்கும் என்பதை குறிக்கும் விதமாக, அந்த சித்தி மற்றும் புத்தியை, பெண் தெய்வமாக வடிவமைத்து, ரிதி (புத்தி) மற்றும் சித்தி ஆகியோருடனும், லாப் (லாபம்) மற்றும் லக்ஷ் (சுபம்) என்னும் குழந்தைகளோடும் அருள்பாலிப்பதாக இருக்கிறார். பெரிய தொந்தியுடன் காட்சி தரும் இவரை துந்திராஜ் (தொந்தி கணபதி) என்று செல்லமாக அழைக்கிறார்கள்.

பொதுவாக கணபதியின் வாகனமான மூஞ்சூறு அவர் எதிரே சாதாரணமாக இருக்கும். இங்கு தனி பளிங்கு மண்டப சன்னிதியில் உள்ளது. முன்னங்கால்களை சற்றே உயர்த்தி மோதகத்தை உண்பது போன்ற வடிவமைப்பில் அழகாக காட்சி தருகிறது. மூஞ்சூறுவின் காதில் தங்களது வேண்டுதல்களை பக்தர்கள் சொல்கிறார்கள்.

கணபதியின் எதிரே சின்ன நீரூற்றும் உள்ளது.

44 ஆயிரம் சதுர அடி கொண்ட இந்தக்கோவில் இரண்டு அடுக்காக கட்டப்பட்டுள்ளது. குஜராத் மற்றும் மராத்திய கலாசார ரசனையுடன் கூடிய நீலம், பச்சை, சிகப்பு, மஞ்சள் நிற வர்ணம் பூசப்பட்டுள்ளது. அற்புதமான சிற்பங்களும், சிலைகளும் உள்ளன. முழுவதும் மிகவும் விளைந்த தேக்கு மரங்களால் அமைக்கப்பட்ட கோவில்.

இக்கோவிலில் உள்ள கல்வெட்டில் இந்த கணபதி மிகவும் சக்தி மிக்கவர் என குறிக்கப்பட்டுள்ளது. அனைத்து வேண்டுதல்களையும் நிறைவேற்றுவார் என்கின்றனர்.

தமிழகத்தில் விநாயகரை பிரம்மச்சாரி என்பர். ஆனால், வடமாநிலங்களில் அவரை குடும்பஸ்தராகவே கருதுகின்றனர். அவருக்கு ரிதி, சித்தி என்ற துணைவியரும், லாப், லக்ஷ் என்ற மகன்களும் இருப்பதாக கருத்து உண்டு. வடக்கே சந்தோஷி மாதா வழிபாடு பிரபலம். இவளை விநாயகரின் மகளாக கருதுகின்றனர்.

தத்துவ ரீதியாகக் காண்போமேயானால், ரிதி[புத்தி] ==அறிவு,சித்தி ==வெற்றி,லாப்==(லாபம்)ஆதாயம் ,லஷ்==சுபம்,சந்தோஷி ==மகிழ்ச்சி ஆகியன.அதாவது விநாயகப் பெருமானை வழிபட்டால் நமக்கு அவர் அறிவு,வெற்றி,ஆதாயம்,சுபம்,மகிழ்ச்சி ஆகிய நன்மைகளை அருள்வார் என்பது திண்ணம்.

சென்னையில் இருந்து வதோதரா (பரோடா) 1746 கி.மீ.,. இங்கிருந்து 64 கி.மீ., தூரத்தில் வாடி. குறுகிய தெருக்களுக்கு நடுவே கோவில் அமைந்துள்ளது.

முதற்கண் அருள்மிகு ரிதி,சித்தி சமேத துந்திராஜ் கணபதி;பின்பு வித்தியாசமான மூஞ்சூறு;அற்புத மர வேலைப்பாடுகள் உள்ள கோவில், இவரை வழிபட்டு சித்தி, புத்தி பெற்றி வாழ்வில் முன்னேறுவோம், வெற்றி பெறுவோம்.

இது ஆன்மீக பூமி,

சித்தர்களும்,மகான்களும், மகரிஷிகளும், முனிவர்களும்,யோகிகளும், நம்மை நல்வழி நடத்தும் மகா குருமார்களும், இன்னும் பிற தவஸ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மண்.

ௐ ஶ்ரீ மஹா கணபதயே நம:

Saturday, September 19, 2020

அருள்மிகு கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில், கச்சனம் (திருக்கைச்சின்னம்), திருவாரூர் மாவட்டம்.

இன்றைய கோபுர தரிசனம்...

அருள்மிகு கைச்சின்னேஸ்வரர் திருக்கோயில், கச்சனம் (திருக்கைச்சின்னம்), திருவாரூர் மாவட்டம்.

மூலவர் – கைச்சினநாதர்
அம்மன் – பல்வளை நாயகி
தல விருட்சம் – கொங்கு, இலவம்
தீர்த்தம் – இந்திரதீர்த்தம்
பழமை – 1000 வருடங்களுக்கு முன்
புராணப் பெயர் – கைச்சினம்
ஊர் – கச்சனம்
மாவட்டம் – திருவாரூர்
மாநிலம் – தமிழ்நாடு
பாடியவர் – திருஞானசம்பந்தர்

கவுதம முனிவர் தன் மனைவி அகலிகையுடன் ஆசிரமத்தில் வசித்த போது, அங்கு வந்த இந்திரன் அகலிகை மீது மோகம் கொண்டான். அவளை அடைய விரும்பிய அவன் சதி செய்தான்.

கவுதமர் அதிகாலையில், ஆற்றுக்கு குளிக்கச் செல்லும் வழக்கமுடையவர். எனவே சேவலாக உருவெடுத்து ஆசிரமத்தின் உச்சியில் இருந்து கூவினான். விடிந்து விட்டதாக கருதிய கவுதமர் ஆற்றுக்கு கிளம்பி விட்டார். அகலிகை வழியனுப்பினாள். பின்னர் இந்திரன் கவுதமரைப் போலவே உருமாறி, சிறிது நேரம் கழித்து வீட்டுக்கு வந்தான். “விடியவே இல்லை, ஏதோ ஒரு சேவல் நேரம் கெட்ட நேரத்தில் கூவியுள்ளது” என்று சொல்லி விட்டு, அகலிகையுடன் சேர்ந்து இருந்தான். இதனிடையே ஆற்றுக்கு சென்ற கவுதமர் விடியாததைக் கண்டு, ஏதோ விபரீதம் நடந்துள்ளதை ஞான திருஷ்டியால் உணர்ந்து, ஆசிரமத்துக்குத் திரும்பினார். இந்திரனின் செயலைக்கண்ட அவர் அவனுக்கு சாபமிட்டார்.

அகலிகை கற்பில் சிறந்தவளாக இருந்தாலும் அவள் இராமரால் மோட்சம் பெற வேண்டும் என்பதற்காகக் கல்லாக மாற்றினார். சாப விமோசனம் பெறுவதற்காக, இந்திரன் சிவனை நினைத்து உருகி வழிபட்டான். சிவன் அவனிடம், விமோசனம் வேண்டுமானால், மணலால் இலிங்கம் செய்து அபிஷேகம் செய்து வழிபடும்படி சொன்னார்.

மண்ணில் செய்த இலிங்கத்திற்கு எப்படி அபிஷேகம் செய்ய முடியும்? எனவே இந்திரன் இன்னும் பல காலம் துன்பப்பட்டான். செய்த தவறை நினைத்து உருகினான். கடும் குற்றம் செய்த அவனை சிவன் மன்னிக்கவில்லை. பின்னர் அம்பாளை நினைத்து தவமிருந்தான். இப்படியாக பல்லாண்டு கழித்தும் பலனின்றி, தான் அமைத்த இலிங்கத்தைக் கட்டிப்பிடித்து, “இனி பெண் வாசனையையே நுகர மாட்டேன்” எனக் கதறினான். அவனது விரல்கள் இலிங்கத்தில் பதிந்து விட்டன. தவறு செய்தவரையும் மன்னிக்கும் அருள் குணமுள்ள சிவன், நீண்ட நாள் கானக வாழ்வில் சிக்கிய இந்திரனுக்கு விமோசனம் கொடுத்தார். அவன் எழுப்பிய இலிங்கத்தில் எழுந்தருளி, தவறு செய்யும் யாராயினும் தண்டனை கொடுத்தும், தவறை எண்ணி திருந்தி இனி தவறு செய்வதில்லை என உறுதி எடுப்போருக்கு அருள்பாலித்தும் வருகிறார். இந்திரனின் கைவிரல்கள் இலிங்கத்தில் பதிந்ததால், “கைச்சின்னேஸ்வரர்” எனப்படும் இவர், பல்வளை நாயகி அம்பிகையுடன் இத்தலத்தில் உள்ளார்.

மனிதன் வீரமும் ஆற்றலும் உடையவனாகவோ, படித்துவிட்டு ஊரைச் சுற்றிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. ஆற்றலையும், கல்வியையும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காகவே கல்விக்குரிய சரசுவதியை முதலிலும், அடுத்து ஆற்றலுக்குரிய துர்க்கையையும், இதையடுத்து சோம்பேறித்தனத்தின் சின்னமான ஜேஷ்டாதேவியையும் (மூதேவி) இங்கு பிரதிஷ்டை செய்துள்ளனர். கல்வியும் ஆற்றலும் இருந்தாலும் சோம்பலை விட்டவரே செல்வத்தை அடைய முடியும் என்பதற்கேற்ப இவர்களை அடுத்து தனி சன்னதியில் மகாலட்சுமி அருள்பாலிக்கிறாள்.

சிவாலயங்களில் பெருமாள் சன்னதியும் இணைந்திருப்பது ஒரு சில இடங்களில் மட்டுமே இருக்கும். இங்கு சீனிவாசப் பெருமாள் அருள்பாலிக்கிறார். இத்தல இறைவன் சுயம்பு லிங்கமாக அருள்பாலிக்கிறார்.

தேவாரப்பதிகம்:

பாடலார் நான்மறையான் பைங்கொன்றை பாம்பினொடும் சூடலான் வெண்மதியந் துன்று கரந்தையொடும் ஆடலா னங்கை யனலேந்தி யாடரவக் காடலான் மேவியுறை கோயில் கைச்சினமே.

–திருஞானசம்பந்தர்

தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் இது 122வது தலம்.

திருவிழா:

திருக்கார்த்திகை, மகாசிவராத்திரி.

பிரார்த்தனை:

தவறு செய்தவர்கள் மனம் வருந்தி சுவாமியிடம் வேண்டிக்கொண்டால் அவர்களது பாவத்தை சிவன் மன்னித்து அருள்கிறார் என்பது நம்பிக்கை.

நேர்த்திக்கடன்:

பிரார்த்தனை நிறைவேறியதும் கோயில் திருப்பணிக்கு தங்களால் இயன்ற உதவி செய்து நேர்த்திக்கடன் செய்கின்றனர்.

இருப்பிடம் :

திருவாரூரில் இருந்து திருத்துறைப்பூண்டி செல்லும் ரோட்டில் 15 கி.மீ., தொலைவில் கச்சனம் கிராமம் இருக்கிறது. சாலையோரம் கோயில் உள்ளது.

காலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

இது ஆன்மீக பூமி,

சித்தர்களும்,மகான்களும், மகரிஷிகளும், முனிவர்களும்,யோகிகளும், நம்மை நல்வழி நடத்தும் மகா குருமார்களும், இன்னும் பிற தவஸ்ரேஷ்டர்களும், வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மண்.

ௐ நமசிவாய

Sunday, September 13, 2020

Indira Ekadashi/ இந்திர ஏகாதசி

 நம் முன்னோரை கடையேற்றும் இந்திரா ஏகாதசி.....!!!

 13.9.2020

இந்திரா ஏகாதசி மஹாலய பக்ஷத்தில் அமைவதால் இதற்கு தனி மகத்துவம் உண்டு.இந்த ஏகாதசி விரதம் நம் பாபங்களை போக்குவதோடு நம் முன்னோர்களின் பாபங்களையும் போக்குவதாக அமைகிறது.

இந்திரா ஏகாதசி விரத கதை.....!

முன்பொரு காலத்தில் மகிஷ்மதிபுரி ராஜ்யத்தை இந்திரசேனர் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அவர் சிறந்த முறையில் ராஜ்ய பரிபாலனம் செய்து வந்தார்.அவரது ஆட்சியில் மக்கள் குறை இல்லாமல் வாழ்ந்து வந்தார்கள். மன்னர் சிறந்த விஷ்ணு பக்தரும் கூட. விஷ்ணுவை போற்றி வணங்குவதில் சிரத்தை உள்ளவர்.

ஒரு நாள் மன்னர் தர்பாரில் இருந்த போது அங்கு  நாரத முனிவர் வந்தார். அவரை சகல மரியாதையுடன் வணங்கிய மன்னர் அவர் வந்த காரணம் வினவினார். நாரதர் தான் வந்த காரணத்தை விவரிக்க ஆரம்பித்தார்.

நாரதர் பிரம்மலோகத்தில் இருந்து யமலோகத்திற்கு இறங்கிய போது யமராஜரால் வரவேற்கப்பட்டார். அவரின் சபையில் சகல மரியாதைகளுடன் அமர்ந்திருந்த போது சபையினருக்கு நடுவே இந்திரசேனரின் தந்தையும் இருக்கக் கண்டார். ஆச்சர்யப்பட்ட நாரதரிடம் இந்திரசேனரின் தந்தை தான் ஒரு ஏகாதசி விரதத்தை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே முறித்ததன் விளைவாக தான் நரகத்தில் அல்லல்படுவதாக உரைத்தார்.

இந்திரசேனரின் தந்தை இந்திரசேனரை இந்திரா ஏகாதசி விரதம் இருக்குமாறு நாரதர் மூலம் கேட்டுக் கொண்டார். இதனால் தான் நரகத்திலிருந்து விடுபட்டு வைகுண்டம் சேர முடியுமென உரைத்தார். அவர் கூறியதை இந்திரசேன மன்னரிடம் கூறவே நாரதர் மன்னரை நாடி வந்துள்ளார்.

இதனை அறிந்தவுடன் நாரதரிடம் மன்னர் இந்திரா ஏகாதசி பற்றிய விவரங்களை கேட்டறிந்தார். அதன்படி தனது சுற்றத்தோடும், ஏனையரோடும் விரதமிருந்து தனது தந்தைக்கு நல்வழி காட்டினார். தனது தந்தை கருட வாகனம் ஏறி வைகுண்டம் செல்வதை கண்டார். அவர் த்வாதசி அன்று விரதம் முடிக்கும் போது அவரது பக்தியை மெச்சி  அவர் மீது ஆகாயத்திலிருந்து பூமாரி பெய்தது. மன்னரும் பிற்காலத்தில் வைகுண்டம் சேர்ந்தார்.

இந்திரா ஏகாதசியில் முறைப்படி  விரதமிருந்தால் நமது  பாபம் மட்டுமன்றி நம் முன்னோர்களின் பாபங்களும் நீங்கும்.

நரகத்தில் வாடும் முன்னோர்கள் வைகுண்டம் நோக்கி செல்வார்கள்.

இந்த ஏகாதசி விரத கதை கேட்போருக்கு (குதிரை) அஸ்வம் தானம் செய்த பலன் கிடைக்கும்.

இதனை படிப்போருக்கும் கேட்போருக்கும் வாழ்வில் வளமும்,முக்தியும் கிடைக்கும்.

இத்தனை நன்மை பயக்கும் இந்திரா  ஏகாதசி விரதத்தை கடைபிடித்து நம் வாழ்வை வளப்படுத்தி ,நம் முன்னோர்கள் உய்யவும் வழி தேடுவோம்

🙏🙏🙏🙏🙏🙏

Thursday, September 03, 2020

Sri suktham with meaning

 *ஸ்ரீ.ஸுக்தம் பொருளுடன் புரிந்து படிப்போம்*


ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம் ஸுவர்ண - ரஜதஸ்ரஜாம்

சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ ம ஆவகா


*பொருள் :* விஷ்ணு பகவானே ! தங்க நிறம் உடையவளும், பாவத்தைப் போக்குகிறவளும், பொன் - வெள்ளி ஆபரணங்களைத் தரித்தவளும், எல்லா மக்களையும் சந்தோஷமாக வைத்திருப்பவளும், தங்க உருவமாகத் தோற்றமளிப்பவளும், எல்லாரும் ஆசைப்படுகிறவளுமான லக்ஷ்மி தேவியின் அருள் எனக்குக் கிட்டும்படி அருள வேண்டுகிறேன்.


தாம் ம ஆவஹ ஜாதவேதோ லக்ஷ்மீ - மநபகாமிநீம்

யஸ்யாம் ஹிரண்யம் விந்தேயம் காமஸ்வம் புருஷாநஹம்


*பொருள் :* அந்த லக்ஷ்மி கடாட்சம் என்னிடம் இருந்தால் நான் தங்கம் போன்ற உயர்ந்த பொருட்களையும் பசுக்கள், குதிரைகள், யானைகள் போன்றவற்றுடனான உயர்ந்த செல்வங்களையும், நல்ல சத்புத்திரர்களையும் உண்மையான சீடர்களையும் அடையமுடியும். அந்த லக்ஷ்மியின் அருட்கடாட்சம் என்னை விட்டுப் பிரியாமல் இருக்க அருள்புரியுங்கள்.


அஸ்வபூர்வாம் ரத - மத்யாம் ஹஸ்திநாத -ப்ரபோதிநீம்

ஸ்ரியம் தேவீமுபஹ்வயே ஸ்ரீர்மா தேவீர் ஜுஷதாம்


பொருள் : குதிரைப்படை முன்னால் செல்கிறது. நடுவில் தேர்ப்படை போகிறது. யானைகளின் பிளிறல் ஓசை எந்த அன்னையின் மஹிமையை மற்றவர்களுக்கு அறிவிக்க கஜநாதம் செய்கிறதோ அந்த ஸ்ரீதேவியை என்னிடத்தில் வருமாறு அழைக்கிறேன். அனைவருக்கும் புகலிடமான லட்சுமிதேவி என்னை வந்தடையட்டும்.


காம் ஸோஸ்மிதாம் ஹிரண்யப்ராகாரா

மார்த்ராம் ஜ்வலந்தீம் த்ருப்தாம் தர்ப்பயந்தீம்

பத்மே ஸ்திதாம் பத்ம வர்ணாம் தாமிஹோபஹ்வயே ஸ்ரியம்


*பொருள் :* மகிழ்வான தோற்றத்தை உடையவளும், எப்பொழுதும் புன்முறுவலுடன் காட்சி தருபவளும், பொன்மயமான பிரகாரம்போல் ஒளிரும் தேகத்தை உடையவளும், யானைகளின் திருமஞ்சன நீரினால் நனைந்த திருமேனியை உடையவளும், திசை எங்கும் தன் ஒளியைப் பரப்புபவளும், குறைவில்லாத நிறைவை உடையவளும், தன்னைப் போலவே பக்தர்களும் நிறைவாக இருக்கவேண்டும் என்று நினைப்பவளும், தாமரைப் பூவில் வசிப்பவளும், தாமரை போன்ற நிறம் உடையவளும், ஸ்ரீ என்ற பெயரை உடையவளுமான லட்சுமிதேவியை என் இருப்பிடத்திற்கு அழைக்கிறேன்.


சந்த்ராம் ப்ரபாஸாம் யஸஸா ஜ்வலந்தீம்

ஸ்ரியம் லோகே தேவஜூஷ்டா - முதாராம்

தாம் பத்மிநீமீம் ஸரண-மஹம் ப்ரபத்யே

லக்ஷ்மீர்மே நஸ்யதாம் த்வாம் வ்ருணே


*பொருள் :* பக்தர்களை மகிழ்விப்பவளும், ஒளியாய் பிரகாசிப்பவளும், அனைத்து உலகங்களிலும் புகழப்படுபவளும், பக்தர்களைத் தேடி வந்து அருள்பவளும், தேவர்களால் துதிக்கப்பட்டவளும், உதாரகுணம் நிறைந்தவளும், சக்கரம்போல் வட்டமான தாமரைப் பூவை கையில் தரித்திருப்பவளும், வேத, இதிகாச புராணங்களில் போற்றப்படுபவளுமான தேவியை நான் சரணடைகிறேன். என்னுடைய வறுமை அழியட்டும். எனக்கு அருள் கிடைக்கட்டும்.


ஆதித்ய - வர்ணே தபஸோ திஜாதோ

வநஸ்பதிஸ்தவ வ்ருக்ஷத பில்வ:

தஸ்ய பலாநி தபஸா நுதந்து மாயாந்த

ராயாஸ்ச பாஹ்யா அலக்ஷ்மீ


*பொருள் :* சூரியனைப் போல் ஒளிநிறைந்தவளே ! உன்னுடைய அருளால் பூ இல்லாமல் பழம் உண்டாகும் வில்வ மரம் உண்டாகியது. அந்த மரத்தின் பழங்கள் உன்னுடைய அருளைப் போல மனங்களின் உள்ளேயும், வறுமைகளையும் போக்க வல்லன. உன்னுடைய அருளால் கிடைக்கும் அந்த மரத்தின் பழங்கள் மூலமாக அறியாமையையும் வறுமையையும் போக்கி அருளவேண்டும்.


உபைது மாம் தேவஸக கீர்த்தஸ்ச மணிநா ஸஹ

ப்ராதுர் பூதோ ஸ்மி ராஷ்ட்ரே - ஸ்மித் கீர்த்திம்ருத்திம் ததாது மே


*பொருள் :*

 நீ என்னை அடைய வரும்பொழுது தேவர்கள் மீது மிகுந்த அன்பு வைத்த மகா விஷ்ணுவும் உடன் வருவார். இந்த பூமியில் பிறந்திருக்கும் எனக்குக் கீர்த்தியையும், ஐஸ்வர்யத்தையும் கொடுத்தருள வேண்டும்.


க்ஷúத் -பிபாஸா மலாம் ஜ்யேஷ்டா - மலக்ஷ்மீம் நாஸயாம்யஹம்

அபூதி - மஸம்ருத்திம் ச ஸர்வாந் நிர்ணுத மே க்ருஹாத்


*பொருள் :* உன் அனுகிரகத்தை அடைந்தால் அதன் பலத்தால், பசி, தாகம், பீடை இவற்றை உண்டு பண்ணுகிற மூதேவியை என்னைவிட்டு அகலும்படி செய்துவிடுவேன். சகலவிதமான வறுமையையும் மேன்மேலும் வரவிடாமல் என்னுடைய வீட்டிலிருந்து நீ அகற்றியருள வேண்டும்.


கந்த - த்வாராம் துராதர்ஷாம் நித்ய புஷ்டாம் கரீஷிணீம்

ஈஸ்வரீகும் ஸர்வ - பூதாநாம் தாமிஹோபஹ்வயே ஸ்ரியம்


*பொருள் :* வாசனைமிக்க திரவியங்களை முதலில் அனுப்பி அதன்பிறகு வந்தவளும், தீயவர்களால் அடைய முடியாதவளும், எப்பொழுதும், எப்பொருட்களாலும் நிறைவுள்ளவளும் கரீஷிணி என்ற திருநாமத்தைப் பெற்றவளும், அனைவராலும் போற்றப்படுபவளுமான உன்னை, இங்கே என்னிடம் (எங்கள் இல்லத்தில்) நித்தியவாசம் (எப்போதும் நீங்காது இருக்கும்படி) செய்யும்படி அழைக்கிறேன்.


மனஸாகாமமாஹுதிம் வாஸ: ஸத்ய மசீமஹி

பசூநாம்ரூபமந்தஸ்ய மயிஸ்ரி ஸ்ரயதாம் யசஹா


*பொருள் :* மனதினுடைய விருப்பத்தையும், சந்தோஷத்தையும் வாக்கினுடைய உண்மையையும் அடைவோம். பசுக்களுடையவும் உணவுப் பொருள்கள் உடையவும், பலவிதமான உருவத்தையும் அடைவோம். என்னிடத்தில் லக்ஷ்மிதேவியானவள் நித்யவாசம் செய்யவேண்டும்.


கர்த்தமேந ப்ரஜாபூதா மயிஸம்பவ கர்தம

ச்ரியம் வாஸய மே குலே மாதரம் பத்ம மாலினீம்


*பொருள் :* கர்த்தம ப்ரஜாபதி என்னும் மகரிஷியால் தேவி, புத்திரமதி ஆனாள். கர்த்தமனே என்னிடத்தில் நித்யவாசம் செய்வாயாக. தாமரை மாலையை அணிந்துகொண்டிருக்கிற உனது தாயாராகிய ஸ்ரீதேவியை எனது வீட்டில் வசிக்கச் செய்வாயாக.


ஆபஸ் ஸ்ருஜந்துஸ் நிக்தானி சிக் லீத வஸ மே கிருஹே

நிக தேவீம் மாதரம்ச்ரியம் வாஸயமே குலே


*பொருள் :*

 ஓ சிக் லீதரே, தண்ணீர், நெய், தயிர், பால் முதலிய பொருட்கள் என்னுடைய வீட்டில் குறைவின்றிப் பெருகவேண்டும். எப்போதும் பிரகாசித்துக் கொண்டிருக்கிற உம்முடைய தாயை (ஸ்ரீதேவியை) எனது வீட்டில் வசிக்கச் செய்து அருளும்.


ஆர்த்ராம் புஷ்கரிணீம் புஷ்டிம் ஸ்வர்ணாம் ஹேமமாலினீம்

சூர்யாம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாத வேதோ மமாவஹ


*பொருள் :* கருணையால் நனைந்தவளும் (தயையால் நனைந்த இதயம்) தாமரைப் பூவில் வாசம் செய்கின்றவளும் நிறைவின் உருவானவளும், தாமரைப் பூமாலையைத் தரித்தவளும், எல்லா உயிர்களையும் மகிழ்விப்பவளும், பொன் போன்ற பரிசுத்தமான மேனியை உடையவளுமான மகாலட்சுமி என் இருப்பிடத்திற்கு வருமாறு செய்தருளுங்கள்.


ஆர்த்தராம் ய: கரிணீம் யஷ்டிம் பிங்களாம் பத்ம மாலினீம்

சந்த்ராம் ஹிரண்மயீம் லக்ஷ்மீம் ஜாதவேதோ மமாவஹ


*பொருள் :* பகவானாகிய அமுதத்தால் நனைந்த திருமேனியையுடையவளும், செங்கோலுக்கு அடையாளமாக தண்டாயுதத்தை கையில் தரிப்பவளும், மெலிந்த திருமேனியை உடையவளும், கண்களுக்கு ஆனந்தகரமான வடிவினை உடையவரும், தங்கத்தினால் செய்யப்பட்ட பூமாலையை அணிந்தவளும், சூரியனைப் போன்ற பிரகாசமுடையவளும், தங்கமயமானவளுமான லட்சுமிதேவியை என்னிடம் வரவழைத்து அவள் என்னிடம் நித்யவாசம் செய்ய அருளுங்கள் திருமாலே !


மாம் ம ஆவஹக ஜாதவேதோ லக்ஷ்மி மநமகாமினிம்

யஸ்யாம் ஹிரண்யம் ப்ரபூதம் காவோதாஸ் யோஸ் வாநீவிந்தேயம் புருஷனாநஹம்


*பொருள் :*

 ஓ பகவானே, எந்த லக்ஷ்மி என்னிடம் வசிக்கையில் ஏராளமான பொன் பொருள்களும், பசுக்களும், சேவகர்களும் குதிரைகளும், உற்றார்களும், நண்பர்களையும் நான் அடைவேனோ, அப்படிப்பட்ட ஸ்ரீமகாலக்ஷ்மி என்னிடம் நித்யவாசம் செய்ய அருளவேண்டும்.


பத்மப்ரியே பத்மிநி பத்மஹஸ்தே

பத்மாலயே பத்மதளாய தாக்ஷி

விஸ்வப்ரியே விஷ்ணுமநோ நுகூலே

த்வத் பாத பத்மம் மயிஸந்நிதத்ஸ்வ


*பொருள் :* தாமரையில் பிரியம் உள்ளவளே. தாமரைக்குச் சொந்தக்காரியே. தாமரையைக் கையில் தரித்தவளே. தாமரையில் வசிப்பவளே. தாமரை போல் நீண்ட கண்களை உடையவளே. உலகத்து மக்களால் விரும்பப்படுபவளே. விஷ்ணுவின் மனத்திற்குப் ப்ரியமானவளே. உன்னுடைய தாமரை மலர் போன்ற திருவடியை என் தலைமேல் எப்போதும் இருக்கச் செய்வாயாக.


ஸ்ரியே ஜாத ஸ்ரியே ஆநிர்யாய

ஸ்ரியம் வயோஜநித்ருப்யோ ததாது

ஸ்ரியம் வசாநாம் அம்ருத த்வமாயன்

பஜந்தி சத்யஸ் சவிதா விதத்யூன்


*பொருள் :* லட்சுமி தேவியின் விளையாட்டால் செய்யப்பட்ட இந்த உலகம் பிரகாசமானது. உலகில் பிறந்தவர்களுக்கு எல்லா ஐஸ்வர்யத்தையும் நீண்ட ஆயுளையும் கொடுக்க வல்லது. அவளை உபாசனை செய்பவர்கள் ஜனன மரணமில்லாத பிரம்மானந்தத்தை அடைவார்கள். இன்றும் நாளையும், (எப்பொழுதும்) சுயமான பிரகாசமான நிலையை அடைவார்கள். இல்லத்தில் சகல போகமும், பரத்தில் மோட்சமும் அடைவார்கள்.


ச்ரிய ஏவைனம் தச்ச்ரியா மாததாதி ஸந்ததம்

ருசாவஷட்கரத்யம் ஸந்தத்தம் ஸந்தீயதே ப்ரஜயா பசுபிஹி.


*பொருள் :* எவனொருவன் இந்த ஸ்ரீ சூக்தத்தின் பலன்களை அறிகிறானோ, அவனுடைய செல்வங்களே மேலும் மேலும் வளர்ந்து ஐஸ்வர்யங்களை உண்டாக்குகின்றன. ரிக் வேதத்தில் கூறப்பட்ட இந்த ஸ்ரீ சூக்தத்தை முன்னிருத்தி ஹோம காரியங்களைச் செய்பவர் புத்திர சந்தானத்தோடும், பசுக்களோடும், ஐஸ்வர்யங்களோடும் அனைத்து வளங்களையும் அடைகிறார்.


ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே விஷ்ணு பத்ன்யை ச தீமஹி

தன்னோ லக்ஷ்மி ப்ரசோதயாத்


*பொருள் :* இந்த உலகங்கள் அனைத்தும் ஸ்ரீமகாவிஷ்ணு, லக்ஷ்மிதேவி இருவரையும் சேர்ந்தவை. அதனால் பெரிய பிராட்டியானதேவியை உபாசனை செய்கிறோம். விஷ்ணு பத்தினியை தியானம் செய்கிறோம். இந்த உபாசனை செய்யக்கூடிய அறிவை அந்த லக்ஷ்மிதான் தூண்டிவிடவேண்டும். லட்சுமி நாராயணரை வழிபடுவதற்கான புத்தியையும், அதை நிறைவேற்ற சக்தியையும் தந்து அருளவேண்டும். (இந்தக் கடைசி ஸ்லோகமே லக்ஷ்மி காயத்ரி ஸ்லோகமானது. அதிக விசேஷமானது. எங்கேயும், எப்போதும் சுத்தமாக, ஆச்சாரமாக இருந்து இதைச் சொல்லிக் கொண்டே இருக்கலாம்.)