Sunday, May 31, 2020

Nirjala Ekadashi

*நிர்ஜல_ஏகாதசி 2/6/2020*

ஒரு நாள் விரதம் - முழு வருட பலன் தரும் "நிர்ஜல ஏகாதசி" விரத மகிமை ...

*பாண்டவ நிர்ஜல ஏகாதசி' விரத மகிமை*

'ஜேஷ்ட மாதம்', (May / June)  வளர்  பிறையில் (சுக்ல பட்சம்)  வரக்கூடிய ஏகாதசியே "பாண்டவ நிர்ஜல  ஏகாதசி (அ) நிர்ஜல ஏகாதசி" (Paandava Nirjala Ekadasi)  என்று அழைக்கப்  படுகின்றது.

*நிர்ஜல ஏகாதசி பற்றி 'பிரம்ம வைவர்த்த புராண' விளக்கம்:*

ரிஷிகளில் முதன்மையான ஶ்ரீ வியாஸரிடம் பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான பீமன் எழுப்பிய வினாக்களும் (கலியுகத்தில் ஏகாதசி விரதம் இருக்க முடியாது என்ற நிலையில் இருக்கும் பலருக்காகவும்) அதற்கு வியாச மகரிஷி அளித்த விளக்கங்களையும் நாம் இங்கே தொகுத்துள்ளோம் நமது  "அன்பர்களுக்கு

ஒருமுறை யுதிஷ்டிரரின் தம்பிகளிள் ஒருவரான பீமசேனன், தனது பாட்டனாரும், மிகச்சிறந்த ரிஷி முனிகளில் முதன்மையானவருமான ஸ்ரீ வியாசரிடம் தனது சந்தேகத்தைக்   கேட்கிறார்...

ரிஷிகளில் சிறந்த எமது பாட்டனாரே, உங்களுக்கு எனது நமஸ்காரம். வெகு நாட்களாக என் மனதில் இருக்கும் ஐயத்தைத் தீர்த்து வைக்க வேண்டுகிறேன். எமது தாய் குந்தி தேவி, எனது உடன்பிறந்தவர்கள் யுதிர்ஷ்டிரர், அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் மற்றும் பாஞ்சாலி இவர்கள் அனைவரும் பிரதி ஏகாதசி தோறும் விரதம் இருக்கின்றனர். ஏகாதசி விரதத்தை முறையாக கடைபிடித்து பகவான் வாசுதேவரை மகிழ்வித்து அவரது ஆசிர்வாதத்திற்கு உரியவர்கள் ஆகின்றனர். மேலும், என்னையும் ஏகாதசி விரதத்தை முறைப்படி இருக்க வலியுறுத்துகின்றனர்.
நான் பகவான் விஷ்ணுவை மனதார பூஜிப்பேன், அவருக்கு உண்டான பூஜைகள் அனைத்தையும் கூட செய்வேன், ஆனால் என்னால் ஒரு வேளை கூட உணவு உண்ணாமல் இருக்க முடியாது. வாயுதேவரின் புத்திரனான 'சமானப்ராணா' (எந்த பொருளையும் செரிமானம் செய்யக்கூடிய வாயு) எனது வயிற்றில் உள்ளது.  அதனால் என்னால் பசி தாங்க இயலாது. ஆகவே, பாட்டனார் அவர்களே, ஏகாதசி விரதம் கடைபிடிக்காமல் இருந்து, நான் முக்தி அடையும் யுக்தியை எனக்கு கூறுவீர்களாக, என்று பீமசேனன், ஸ்ரீ வியாச ரிஷியிடம் கேட்கிறார்.

இதனைக்கேட்ட வியாசரிஷி, பீமா, நீ நரகத்திற்கு செல்லாமல் இருந்து சொர்க்கத்திற்கு  மட்டுமே செல்லவேண்டும் என்றால், பிரதி மாதம் இரண்டு ஏகாதசி விரதமும் கடைபிடித்தே ஆக வேண்டும் என்று கூறுகிறார்.

பீமன், மீண்டும் எடுத்துரைக்கிறார்... ஓ பாட்டனாரே, தயவு செய்து எனது நிலையைப் புரிந்து கொள்ளுங்கள்... என்னால் ஒரு வேளைகூட உண்ணாமல் இருக்க முடியாது, நான் எப்படி வருடம் முழுவதும் 24 ஏகாதசி விரத நாட்களில் மூன்று வேளையும் உண்ணாமல் இருக்க முடியும் ??? வ்ரிகா  (Vrika) எனும் அக்னி எனது வயிற்றில் உள்ளது.  நான் முழுவதும் உண்டால் மட்டுமே, எனது வயிற்றில் உள்ள அந்த அக்னி அடங்கும், என்று மீண்டும் கூறுகிறார்...

இந்த இடத்தில், அக்னி பற்றி ஒரு சில வரிகளில் பார்த்துவிடுவோம்...பொதுவாக அக்னி மூன்று வகைப்படும். 'தவாக்னி' - மரங்களை எரிப்பதன் மூலம் வருவது. 'ஜாடராக்னி' - நமது வயிற்றின் உள்ளே இருந்து நாம் உண்ணும் அனைத்தையும் செரிக்க வைக்கக் கூடியது. , 'வடவாக்னி' - இது சூடான மற்றும் குளிர்ந்த பனி ஒரே நேரத்தில் உராயும் பொழுது வரக்கூடியது, குறிப்பாக கடலின் மேல் ஏற்படும்.
இதில், ஜாடராக்னியின்   உச்ச பட்ச விளைவாக, 'வ்ரிகா' எனும் எதனையும் உடனே செரிமானம் செய்யக்கூடிய அக்னி வடிவம் தான் பீமனின் வயிற்றில் இருந்தது. அதன் காரணமாகத்தான், மற்ற அனைவரையும் விட 100 மடங்கு அதிகம் சாப்பிட்டாலும் கூட, அவை உடனே செரிமானம் ஆகிவிடக்கூடிய வாய்ப்பு பீமனுக்கு இருந்தது.

சரி மீண்டும் புராணத்தினுள் நுழைவோம்...
பீமன், தனது பாட்டனாரிடம் மன்றாடுகின்றார்; தயை கூர்ந்து எனது நிலையைப் புரிந்து கொண்டு எனக்கேற்றார் போல ஒரே ஒரு ஏகாதசி விரதத்தை சொல்லுங்கள், அன்று ஒரு நாள் மட்டும், நான்  முழுவதும் உண்ணாமல் இருக்க முயற்சி செய்கிறேன் என்று மீண்டும் வேண்டுகோள் விடுக்கிறார்.

பீமனின் நிலை, ஏற்கனவே ஶ்ரீ வியாசருக்கு நன்றாகத் தெரியும், இருப்பினும், பீமனைப்போன்று கலியுகத்திலும் பலர் எல்லா ஏகாதசி நாட்களிலும் விரதம் இருக்கும் வாய்ப்பு இல்லாமல் இருப்பர் என்பதை மனதில் எண்ணி, பீமனுக்கு உபாயம் கூறுவது போல நமக்கும் உபாயம் அருளினார்...
வியாச மகரிஷி என்ன உபாயம் கூறினார் ?

ஓ, பீமா, நான் உங்கள் அனைவருக்கும் வேத சாஸ்திர நெறிமுறைகளையும், பூஜா விதிகளையும் மற்றும் அனைத்து புராண விளக்கங்களையும் கூட கூறியுள்ளேன்.  இருப்பினும், அடுத்து வரக்கூடிய கலியுகத்தில், இதனை அனைவரும் முறையாகக் கடைப்பிடித்து நரகத்தை தவிர்த்து சொர்க்கத்திற்கு செல்லும் வாய்ப்பு மிகவும் குறைவே...அதற்கு எளிய உபாயமாகத்தான் பிரதி சுக்ல பட்ச ஏகாதசி மற்றும் கிருஷ்ண பட்ச ஏகாதசி விரதம் மானுடர்களுக்கு வரப்பிரசாதமாக வழங்கப்பட்டுள்ளது. நீ அதிலும் விதிவிலக்கு கேட்டு ஒரே ஒரு ஏகாதசியை சொல்ல சொல்கிறாய். ?!
சரி, உன்னைப்போன்று ஒவ்வொரு மாதமும் ஏகாதசி விரதம் இருக்க முடியாதவர்கள், சூரியன் ரிஷபத்தில் இருந்து மிதுனத்திற்கு பயணிக்கக்கூடிய ஜேஷ்ட மாதத்தில் (May / June) சுக்ல பட்சத்தில் வரக்கூடிய  ஏகாதசி விரதத்தை, உண்ணாமல் மட்டும் அல்ல, ஒரு துளி நீர் கூட அருந்தாமல் இருந்து கடைபிடிக்க வேண்டும்.

('நீர் கூட அருந்தாமல்' என்று பொருள் படுவதால் இது "நிர்-ஜல" ஏகாதசி என்று ஆயிற்று...) இந்த விரத நேரமானது ஏகாதசி அன்று காலை சூர்ய உதயம் முதல் மறுநாள் 'துவாதசி' காலை சூர்ய உதயம் வரை ஆகும்.
பின்னர், துவாதசி அன்று காலை குளித்த பின்னர்  பகவான் விஷ்ணுவை பிரார்த்தனை செய்துவிட்டு, அந்தணருக்கு தங்கம் அல்லது வேறு வஸ்திரம் தானம் செய்துவிட்டு (அல்லது அவரவர்க்கு முடிந்த வரையில் ஏதாவது ஒரு குடை, செருப்பு, கைத்தடி அல்லது முடிந்த  அளவு பணம் தானம் செய்துவிட்டு) அதன்பின்பு கண்டிப்பாக அவருக்கு நீர் அருந்தக் கொடுத்து அதன் பின்னர் அவருக்கும் உணவளித்து, தானும் உணவருந்தி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும் என்று  வியாச மகரிஷி பீமனுக்கு உபாயம் கூறி அருளினார்...

*நிர்ஜல ஏகாதசியின் பலன்கள் என்ன ?*

மேலும், வியாச மகரிஷி தொடர்ந்து கூறுகையில், ஓ வாயுபுத்திரனே, இப்படி நீர் கூட அருந்தாமல் மிகக்கடுமையாக இந்த விரதத்தை கடைபிடித்தால், அவர்களது மலையளவு பாவமும் குறையும். பல்வேறு புண்ய நதிகளில் நீராடிய பலனைப்பெறுவர். மேலும், பிரதி மாதம் சுக்ல பட்ச, கிருஷ்ண பட்ச ஏகாதசி விரதம் இல்லாமல் இருந்தாலும், அதற்கு விரதம் இருந்த பலனையும் சேர்த்து பெறுவர்.

ஓ, 'வ்ருகோதரா' (மிக அதிக விருப்பம் கொண்டு அதிகமாக உண்பவன் என்று அர்த்தம்), இந்த நிர்ஜல ஏகாதசி விரதத்தை கடைப் பிடித்தவர்களுக்கு, தனம், தான்யம், மற்ற அனைத்து செல்வங்களும் தானாக வந்து சேரும். மேலும், அவர்களது இறப்பிற்குப் பின், அவர்களை கூட்டிச்செல்ல யமதூதர்கள் வர மாட்டார்கள், மாறாக விஷ்ணு தூதர்கள் தான் வருவார்கள். அந்த ஆன்மா, விஷ்ணுவின் பாதத்தை அடையும்.
துவாதசியுடன் இணைந்து இருக்கும் இந்த ஏகாதசி நாளில் விரதம் இருந்து, அதன் பின்னர் அந்தணர்களுக்கு அளிக்கும் நீர், குடை, செருப்பு , கைத்தடி ஆகிய தானங்கள், முன்னோர்களுக்கு ஸ்ரார்த்தம் செய்த பலனைத்தரும்.
ஆகவே, பீமசேனா, இந்த 'ஜேஷ்ட சுக்ல ஏகாதசி' அல்லது 'நிர்ஜல ஏகாதசி' விரதத்தை முழு பக்தியுடன் அனுஷ்டித்து, அந்த விஷ்ணுவின் பரமபதத்தினை அடைவாயாக என்று கூறி ஆசி வழங்கினார்...
இவ்வாறு ப்ரம்ம-வைவர்த்த- புராணம் விளக்குகிறது.

பீமன் மூலமாக, நாமும் இந்த அதி உன்னத 'நிர்ஜல ஏகாதசி' விரதத்தினைப் பற்றித் தெரிந்து கொள்ளும் பாக்கியம் கிடைக்கப்பெற்றோம்.

இவ்வாறு, இதன் பெருமைகளை பீமனிடம் கூறிய ஸ்ரீ வியாசமகரிஷி மேலும் கூறுகையில், ஓ பீமசேனா, இந்த 'நிர்ஜல ஏகாதசி' விரத கதையினை படித்தவர்களும், கேட்டவர்களும் மற்றும் பிறருக்கு எடுத்துச் சொல்பவர்களும் மிகுந்த புண்ய பலனைப் பெறுகின்றனர். அவர்கள், அந்தணர் ஒருவருக்கு 'கோ தானம்' செய்த புண்ய பலனைப்பெறுவர், என்று கூறினார்.

ஆகவே, நமது இப்பிறவி எப்படி இருப்பினும், நாம் செய்த பாவங்களை போக்கவும், அடுத்த ஜென்மாவில் (அடுத்த பிறவி வேண்டாம் என்று கூறினாலும், ஒருவேளை கர்ம பலன் தொடர்ச்சி இருப்பின்) மிகுந்த புண்ணிய ஆத்மாவாக பிறக்கவும்  'நிர்ஜல ஏகாதசி'  தினத்தில் நாம் செய்ய வேண்டியவை:

வாய்ப்பு இருப்பவர்கள் முழு நாளும் உண்ணாமல் விரதம் இருக்கலாம். (அல்லது அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப ஒரு வேளையோ அல்லது  இரு வேளைகளோ இருக்கலாம்.)  வாய்ப்பு இருப்பவர்கள், அன்று நாள் முழுவதும் பகவான் நாமாவை ஜபிக்கலாம். இருக்கும் இடத்தில் இருந்தே, பெருமாளை நினைத்து மனதார வேண்டிக்கொள்ளலாம்...    விரதம் இருக்க முடியாதவர்கள், இந்த விரத கதையையும், பலனையும் பிறருக்கு எடுத்து கூறுவதன் மூலம், 'கோ' தானம்  செய்த புண்ணியம் பெறுகிறார்கள்.

ஶ்ரீ கிருஷ்ணார்பணமஸ்து

Saturday, May 16, 2020

அபரா ஏகாதசி/Apara Ekadashi

அபரா ஏகாதசி.......!!!
(18.5.2020)

இதை அசலா ஏகாதசி என்றும் கூறுவர். இந்த ஏகாதசி விரதத்தினால் ஒருவர் மக்கள் மத்தியில் பெரும் பேரும், புகழும் அடைவதோடு, அளவில்லா செல்வத்தையும் பெறுவர் என்று ஞான நூல்கள் கூறுகின்றன.

இந்நாளின் மகிமையைப் பற்றி பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிர மகாராஜாவிற்கு அவருடைய வேண்டுதலின் பெயரில் எடுத்துரைக்கிறார். அதனை நாமும் காண்போம்.

ஒ யுதிஷ்டிரா ! அபரா ஏகாதசி விரதம் மக்கள் அனைவரும் அவசியம் கடைபிடிக்க வேண்டிய விரதம் ஆகும். இது மற்ற அனைத்து விரதங்களை விட ஸ்ரேஷ்டமானதும், உத்தமமானதும் ஆகும். இந்நாளில் அனைவரும் பக்தியுடன் பகவான் மகாவிஷ்ணுவை ஓங்கி உலகளந்த உத்தமனாகிய திரிவிக்ரமனாக வணங்க வேண்டும்.

இந்த ஏகாதசி விரதம் ஒருவர் செய்த பாவங்கள் அனைத்தையும் அழிப்பதோடு, அவருக்கு அளவில்லா செல்வத்தை வாரி வழங்குவதால் இது இப்பெயர் பெற்றது. மேலும் இவ்விரதத்தை நம்பிக்கையோடு கடைபிடிப்பவர்கள் மக்களிடத்தில் பெரும் பேரும், புகழும் பெறுவர்.

அதோடு இந்த அபரா ஏகாதசி விரத பிரபாவத்தால் பிரம்மஹத்தி, பிறரை நிந்திப்பது, போரில் புறமுதுகிடுதல், குரு நிந்தனை, பைசாச பிறவி, பொய் சாட்சி கூறுதல், ஸ்திரீ கமனம், போலி மருத்துவம் செய்தல், போலி ஜோதிடம் கூறுதல் போன்ற பாவங்களிலிருந்து விடுதலை அளிப்பதோடு அவர்களுக்கு சுவர்க்கப் ப்ராப்தியை அளிக்க வல்லது என்றார்.

3 புஷ்கரங்களில் நீராடுதல், கார்த்திகை மாத புனித நீராடல், கங்கையில் பிண்ட தானம் செய்தல், பத்ரிகாஸ்ரமத்தில் தங்குதல், இறைவன் கேதாரநாதரை தரிசித்து வணங்குதல் இவற்றால் கிடைக்கும் புண்ணியத்தினை இந்த அபரா ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக கடைபிடிப்பதால் ஒருவர் அடைய முடியும் என்று கூறினார்.

கிரகண காலத்தில் குருக்ஷேத்திரத்தில் புனித நீராடி, கஜ தானம், ஸ்வர்ண தானம் செய்தல், சினைப்பசுவினை ஸ்வர்ணம் மற்றும் பூமி தானத்தோடு செய்வதால் அடையும் புண்ணிய பலன்கள் அனைத்தும் இந்த அபரா ஏகாதசி விரதத்தை விதிப்பூர்வமாக கடைபிடிப்பதால் ஒருவர் அடைய முடியும் என்று கூறினார்.

ஒ யுதிஷ்டிரா ! இந்த விரத மகாத்மியத்தை விளக்கும் கதையினை உனக்கு கூறுகிறேன் கவனமாகக் கேள், என்று கூறத் தொடங்கினார்.

முன்னொரு காலத்தில் மஹித்வஜன் என்னுமொரு அரசன் தன்னுடைய நகரை நல்ல முறையில் அரசாண்டு வந்தான். அவனுக்கு வஜ்ரத்வஜன் என்றொரு சகோதரன் இருந்தான். அவன் மிகவும் கொடூர குணம் கொண்டவனாகவும், நாத்திகனாகவும் விளங்கினான்.

ஒருநாள் வஜ்ரதவஜன், தனது சகோதரன் மீது பொறாமை கொண்டு, இரவில் அவன் தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில் அவனைக் கொன்று ஊரில் உள்ளதொரு அரசமரத்தின் அடியில் புதைத்து விட்டான். பின்னர் அவன் அரசாட்சியைக் கைப்பற்றினான்.

அபமிருத்யுவின் காரணமாக மஹித்வஜன், ஆவியாக அந்த மரத்தையே சுற்றி அலைந்தான். அந்த வழியாகப் போவோர், வருவோர் அனைவரையும் தொல்லை செய்து துன்புறுத்தினான்.

ஒருநாள் அவ்வழியே வந்த தௌமிய மகரிஷி, மரத்தில் தொங்கிக் கொண்டிருந்த மஹித்வஜனின் ஆன்மாவினைக் கண்டார். அவருடைய தவோபலத்தால் அவனுடைய பிரேத ஜன்மாவிற்கான காரணத்தினை அறிந்தார். அதன் பின்பு அவர் அந்த ஆன்மாவினை அழைத்து அதற்கு தகுந்த புத்திமதிகளைக் கூறி அதனை நல்வழிபடுத்தினார்.

அதனைக் கேட்டு மனம் திருந்திய அந்த ஆவி, இத்தகு கொடிய பிரேத ஜன்மாவிலிருந்து விடுதலை அடைய அவரிடம் மார்க்கம் வேண்டி நின்றது. அதனைக் கேட்ட தௌமிய மகரிஷி, அதற்கு அபரா ஏகாதசியின் விதிமுறைகள், மகாத்மியம் ஆகியவற்றை கூறி அதனை கடைபிடிக்கும் படி அறிவுறுத்தினார்.

அதன்படி, மஹித்வஜன் இவ்விரதத்தை கடைபிடித்து அவனுடைய பிரேத ஜென்மம் நீங்கி நன்னிலையை அடைந்தான் என்று பகவான் யுதிஷ்டிரனிடம் கூறினார்.

இந்த அபரா ஏகாதசி விரதமானது பாப விருட்சத்தினை வெட்டி வீழ்த்தும் கோடரியைப் போன்றதாகும். அஞ்ஞானம் மற்றும் பாவத்தினால் இருண்டிருக்கும் உலகத்தினில் ஒளி வீசும் சூரியனைப் போன்றதாகும் என்றார்.

எனவே ஓ யுதிஷ்டிரா ! தனது கர்மவினை பாவங்களைக் கண்டு அஞ்சுபவர் அனைவரும் இந்த விரதத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். மேலும் இந்த விரதத்தை கடைபிடிக்காத ஒருவர், ஒரு மகா சமுத்திரத்தில் தோன்றும் பல நீர்குமிழிகள் போன்று ஜனன-மரண சக்கரத்தில் சிக்கி, மீண்டும் மீண்டும் இவ்வுலகில் பிறந்து கொண்டே இருப்பார்கள் என்றார்.

எனவே இந்த அபரா ஏகாதசி விரதத்தினை பக்தி சிரத்தையுடன் கடைபிடித்து இறைவன் திரிவிக்ரமனை வணங்கி வழிபடுவதால் பாவ வினைகள் அனைத்தும் அழிந்து, இறுதியில் வைகுந்தத்தை அடைவர் என்று பகவான் ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரரிடம் கூறி முடித்தார்.

எனவே நாம் அனைவரும் பெறுதற்கரிய இந்த மனித தேகத்தை இறைவனை வணங்கி வழிபட பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அப்படி இல்லையெனில் நம்முடைய வாழ்கை அர்த்தமற்ற ஒன்றாகி விடும்.

மேலும் எவரொருவர் இந்த நன்னாளில் இவ்விரத மஹாத்மியத்தை சொல்கிறாரோ / கேட்கிறாரோ /படிக்கிறாரோ அவரும் அவருடைய அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபட்டு புதுவாழ்வு பெறுவர் என்று பிரம்மாண்ட புராணம் குறிப்பிடுகிறது.

Sunday, May 03, 2020

மோஹினி ஏகாதசி/ Mohini Ekadashi

மோகினி ஏகாதசி
04.05.2020, திங்கட்கிழமை

சித்திரை-வைகாசி  மாதம் சுக்ல பட்சத்தில் வரும்  ஏகாதசி  திதியை மோகினி  ஏகாதசியாக கொண்டாடுவர்.  மோகினி ஏகாதசி விரத  மகிமையை நாம் இப்போது காண்போம்.சுயகட்டுப்பாடு மற்றும் சிரத்தையின் மகத்துவத்தை  விளக்கும் வரூதினீ  ஏகாதசி விரத கதையைக் கேட்ட தனுர்தாரி அர்ஜூனன் பரமாத்மா கிருஷ்ணரிடம்," ஹே கிருஷ்ணா!,சித்திரை –வைகாசி மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசியின்  பெயர், விரதம் அனுஷ்டிப்பதற்கான  விதிமுறை,இவற்றைப்  பற்றி விரிவாக  கூற வேண்டும்." என்று வேண்டினான்.
• ஸ்ரீ கிருஷ்ணர் பதிலளிக்கையில்," ஹே பாண்டு நந்தனா! , மகரிஷி  வசிஷ்டர் ஸ்ரீராமனுக்கு கூறிய  ஒரு புராதன கதையை  உனக்கு கூறுகிறேன். கவனத்துடன் கேள்." என்றார்.• ஒரு சமயம்  ஸ்ரீ ராமர் ,மகரிஷி வசிஷ்டரிடம்," குரு  தேவா!,ஜனகநந்தினி  ஸ்ரீ சீதையின் பிரிவால் நான் மிகுந்த துயரத்தை அனுபவிக்கிறேன். சொல்லவொண்ணா மனவேதனையில் ஆழ்த்தும் இத்துயரத்தை  நீக்குவது   எப்படி?  அனைத்து  பாபங்களையும், துக்கங்களையும்  அழித்து மகிழ்ச்சியையும், சுகத்தையும்அளிக்கக்கூடிய விரதம் ஏதாவது  உண்டென்றால், அதை அனுஷ்டிக்கும் விதிமுறையுடன் எனக்கு கூறி அருளுங்கள்."என்றார்.• மகரிஷி வசிஷ்டர்," ஸ்ரீ ராமா,மிக நல்லதொரு கேள்வி இது. நீ மேன்மை மற்றும் பவித்ரதன்மையுடன் கூடிய ஆழ்ந்த அறிவாற்றலை கொண்டவன்.உன் நாமத்தை  உச்சரித்த மாத்திரத்தில் மனிதர்கள் புண்ணியத்தைபெறுவர். இவ்வுலகத்திற்கு நன்மை அளிக்கக்கூடிய நல்லதொரு  கேள்வியை கேட்டுள்ளாய். உனக்கு  ஒரு ஏகாதசி விரதத்தின் மகத்துவத்தை கூறுகிறேன்.சித்திரை- வைகாசி மாதம் சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதியை  மோகினி ஏகாதசி என அழைப்பர். இவ்ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் மனிதர்களின் சகல   பாபங்களும்,துக்கங்களும் அழிக்கப்படுகிறது. இதன் பிரபாவத்தால் மனிதர்கள் மோகம்  என்னும்  மாயையின்  பிடியிலிருந்தும்  விடுதலை  பெறுவர்.• ஸ்ரீ ராமா! துக்கத்தால் வாழ்க்கையில்  துன்பப்படும்  அனைவரும்  இவ்  மோகினிஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கவேண்டியது அவசியமானதும். இவ் விரதத்தை மேற் கொள்வதால்  ஒருவரது பாபங்கள் அனைத்தும்  நீங்கப்  பெறுகிறது. இவ் மோகினி ஏகாதசி விரத  மஹாத்மிய கதையை கூறுகிறேன்.கவனத்துடன் கேள்.•சரஸ்வதி நதியின்  கரையில் பத்ராவதி என்னும்  பெயர் கொண்ட நகரம்  அமைந்திருந்தது. அந்நகரைத்  யூதிமான் என்னும்  பெயர் கொண்ட  அரசன் ஆட்சி புரிந்துவந்தான். அந்நகரில்  வற்றாத தனம், தான்ய சம்பத்துக்களுடன் தனபால்  என்னும் பெயர்கொண்ட ஒரு வியாபாரி வசித்து வந்தான். பகவான் மஹாவிஷ்ணுவின் பக்தனாக அவன் மிகுந்த தர்மசிந்தனையுடன்  நகரில் ஆங்காங்கே அன்னதான உணவகங்கள், குடிநீர்  பந்தல்,குளம், குட்டை,  தர்மசத்திரங்கள் ஆகியவற்றை அமைத்திருந்தான்.   பாத யாத்ரிகர்களின் நன்மைக்காக சாலையின் ருமருங்கிலும் மாமரம், நாவல்கனி  மரம், வேப்பமரம் ஆகியவற்றை நட்டு பராமரித்து வந்தான்.• வியாபாரிக்கு ஐந்து புதல்வர்கள் இருந்தனர்.அவர்களில் மூத்தவன் கொடிய பாப வினைகளை புரியும்பாபியாகவும், துஷ்டனாகவும் இருந்தான். அவன்துஷ்டர்களுடனும்,வேசிகளுடனும் நட்பு கொண்டு நேரத்தை வீணாக  கழித்து வந்தான். இவை தவிர கிட்டிய மீதி நேரம் அனைத்தையும் சூதாட்டத்தில் செல வழித்தான். அவன் நீசனாகவும், தெய்வம்,பித்ருக்கள்  என எவற்றின் மீதும் நம்பிக்கை இல்லாமல் வீணாக தந்தை ஈட்டும் செல்வத்தை இம்மாதிரியான  கெட்ட காரியங்களில் செலவழித்துக் கொண்டிருந்தான். மதுபானம்,புலால்  உண்பது அவனுடைய  தினசரி வாடிக்கையாக இருந்தது. அநேக முறைஅறிவுரை கூறியும் திருந்தாமல் தான் செய்வதையே  செய்துகொண்டிருந்தான். அவனது செய்கையால் துக்கத்தில் வாடிய வியாபாரி தனபால்,  அவனது சகோதரர்கள், குடும்பத்தினர் அனைவரும் அவனை  கடும்சொற்களால் நிந்தனை செய்து,வீட்டை விட்டு வெளியேற்றினர். வீட்டிலிருந்து வெளியேறியவுடன், அணிந்திருந்த விலையுயர்ந்த ஆடை, ஆபரணங்களை விற்று கிடைக்கும் பணத்தில் நாட்களை கடத்தி வந்தான். பணம் கரைந்துபோனதும் அதுவரை அவனுடன் இருந்த துஷ்ட நண்பர்களும்,வேசிகளும் அவனை விட்டு விலகிப் போயினர்.• பசியும், தாகமும் வருத்தி எடுக்க வேதனை  தாளாமல் திருடுவது  என்னும் முடிவுக்கு வந்தான். இரவு நேரங்களில் திருட்டு தொழிலில் ஈடுபட்டு அதன் மூலம்  கிட்டிய வருமானத்தால் வாழ்க்கையை  நடத்தி வந்தான். ஒரு  நாள் அவன் திருடும் வேளையில், நகர காவலரிடம் கையும்,  களவுமாக பிடிபட்டான். ஆனால் வியாபாரியின் மகன்  என்று அறிந்ததும்,  அவனை தண்டியாமல் திருந்தி வாழுமாறு அறிவுரை கூறி விட்டு விட்டனர். ஆனால் சில நாட்களில் இரண்டாவது  முறையாக மீண்டும் அகப்பட்ட போது, அவன்பேச்சை  கேளாமல், அவனை இழுத்து சென்று அரசனின் முன் நிறுத்தி, நடந்த அனைத்தையும் எடுத்துரைத்தனர்.  அரசன் அவனை சிறையில்  அடைக்க உத்தரவிட்டான். சிறையில் அவன் தண்டனையாக சித்திரவதையை    அனுபவித்தான். பிறகு அவனை அந்நகரை  விட்டும் வெளியேற்றினர். மிகுந்த மன வருத்தத்துடன் நகரை விட்டு வெளியேறி காட்டில்  வசிக்கத் தொடங்கினான். அங்கு வாழும் பிராணிகளைக்  கொன்று தன் பசியை தணித்துக் கொண்டான். நாளடைவில் பிராணிகளை வேட்டையாடும் ஒரு  வேடுவனாக மாறி விட்டான்.  வில் அம்புகளைக் கொண்டு காட்டில் வாழும் பிராணிகளை  தன் பசிக்காக மட்டும்  அல்லாமல் விற்பதற்காகவும் கொல்லத் தொடங்கினான். ஒரு நாள் வேட்டையில்  ஏதும் சிக்காமல் போக, வேட்டையாடிய களைப்பில் பசியும்,  தாகமும் வருத்தி எடுக்க,  உணவைத் தேடிஅலைந்து அங்கும் இங்கும் அலைந்து கடைசியில் கௌடின்ய  முனிவரின் ஆசிரமத்தை அடைந்தான். .கௌடின்ய  முனிவர் கங்கையில் நீராடி விட்டு வந்து கொண்டிருந்தார். அவரின் நனைந்த வஸ்திரத்தின் நுனியிலிருந்து  விழுந்த  நீர்துளிகள் அவன் மீது பட்டமாத்திரத்தில், பாபியான அவனுக்கு  நற் சிந்தனையும், நல்லெண்ணமும் உருவாகியது. அவன்  முனிவரின் அருகில் சென்று  இருகரம்  கூப்பி கண்ணில் நீர் மல்க "முனிசிரேஷ்டரே!, நான்  என் வாழ்க்கையில் மன்னிக்கமுடியாத அளவு பாபம் புரிந்துள்ளேன்.
என் பாப வினைகளிலிருந்து  நான்முக்தி பெறுவதற்கு ஏதாவது எளிதான, செலவில்லாமல் கடைப்பிடிக்கக் கூடிய  ஒருவழியை கூறி  அருள வேண்டும்."என்றான்.முனிவர் அதற்கு," நான்சொல்வதை கவனத்துடன் கேள்.• சித்திரை- வைகாசி மாதம்  சுக்லபட்சத்தில் வரும்  ஏகாதசி,மோகினி  ஏகாதசி  என்று அழைக்கப்படுகிறது.  அவ் மோகினி ஏகாதசி  விரதத்தை விதிப்பூர்வமாக கடைப்பிடித்தால் உன் பாபங்கள் எல்லாம் நீங்கி,புது வாழ்வு பெறுவாய் என்றுஅருளினார். முனிவரின் வார்த்தையைக் கேட்டு அவன் மிகுந்த சந்தோஷமடைந்தான்.முனிவர் கூறிய  ஏகாதசி விதிப்படி அவ் மோகினி ஏகாதசி விரதத்தை  கடைப்பிடித்தான்.• ஸ்ரீ ராமா, அவ் மோகினி ஏகாதசி விரதத்தின் பிரபாவத்தால் அவனதுஅனைத்து பாபவினைகளும் அகன்று நல்வாழ்க்கைபெற்றான்.இறுதியில் விரதத்தின்புண்ணிய பலனால்,கருடவாகனத்தில்  விஷ்ணுலோகத்தை  அடையும் பிராப்தியும்  பெற்றான். இவ் விரதத்தினால் மோகம்  என்னும் மாயை  அகன்று, மனிதர் முக்தியை பெறுகிறார்.இவ்வுலகில் இவ்விரதத்திற்கு இணையான விரதம் வேறெதுவும் இல்லை. இவ்விரதமஹாத்மிய  கதையை  கேட்பவரும்,  படிப்பவரும்,ஒராயிரம்  பசு தானம் செய்த  புண்ணியத்திற்கு  இணையான புண்ணியத்தை பெறுவர். மனிதர்கள் எப்போதும் நற் சிந்தனையுள்ள  சான்றோர்,சாதுக்கள் ஆகியோரிடம்  நட்பு கொண்டிருந்தல் வேண்டும்.நற்சிந்தனையுள்ளவர்களின் நட்பு மனிதர்களுக்கு நல்அறிவை மட்டுமல்லாது வாழ்க்கை  லட்சியத்தையும் அடைவதற்கும் உதவும். கெட்டசகவாசம்,  அதனால் விளையும் பாபவினைகள்  ஒருவரை நரகத்திற்கு மட்டுமே  இழுத்துச்செல்லும். அத்தகைய நட்பு துன்பம்  வரும் காலங்களில் கைவிட்டு விலகி விடுவதால்,அனாதையாக  தவிக்க நேரிடுகிறது.  அப்போதும் கௌடின்ய ரிஷி  போன்ற சாது,சான்றோர்கள்  ஒருவரை கைவிடாமல்  நன்மார்க்கத்தைக் கூறி  அருளுவர்.

ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே
ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே

On 05.05.2020, செவ்வாய்க்கிழமை Parana  Time = 05:46 to 09.59. Hrs  . Chennai.

*Shree Krishnarpanamastu*